மாநில அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களை ஒன்றிய அரசு கட்டுப்படுத்துவது அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது – ஏ.கே.ராஜன், ஓய்வுபெற்ற நீதியரசர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தமிழ்நாட்டின் குரல் (Voice of TN) என்ற அமைப்பு சார்பில் நீட் என்னும் முறைகேடு தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர் அமலோற்பவநாதன், உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் காஃபில் கான், உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் நவீன் குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இதில் தமிழ்நாடு அரசின் மாநில திட்ட குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், சமூக செயற்பாட்டாளர் மருதையன், வாய்ஸ் ஆப் டி.என் ஒருங்கிணைப்பாளர் இந்திரகுமார் தேரடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் தொடக்கத்தில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, நீட் தேர்வால் முதலில் உயிர் நீத்த அனிதாவின் திருவுருவப் படத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர், மேலும் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் தயாரிக்கப்பட்ட நீட் தேர்வின் பாதிப்பு குறித்த அறிக்கையை ஹிந்தி மொழிபெயர்ப்பட்ட பதிப்பு சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய நீதியரசர் ஏ.கே.ராஜன்…
உங்கள் குடும்பம் ஒரு கூட்டு குடும்பம், அதற்கு சொந்தமாக ஓர் நிலம் இருக்கு என்று வைத்துக் கொள்வோம், அதில் உங்கள் அண்ணனிற்கும், உங்களுக்கு சொந்தமான இடம், நீங்கள் இந்தியாவில் இல்லை என்பதால் உங்கள் இடத்தையும் சேர்ந்து, உங்கள் அண்ணன் வீடு கட்டிவிடுகிறார்.
நீங்கள் திரும்பி வந்து எனக்கான நிலம் எங்கே போனது என கேட்கும் போது நான் அதில் வீடு கட்டி உள்ளேன், அங்கு நீ தங்க வேண்டும் என்றால் எனக்கு வாடகை கொடுத்துவிட்டு நீ தங்கி கொள்ளலாம் என உங்கள் அண்ணன் சொல்வான், இது தான் நீட் தேர்வு என்பது.
நீட் என்பது மாணவர்களை மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதற்கான ஒன்று, இது முழுமையாக மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது, மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த நினைக்கிறது.
இது அடிப்படையில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது, நீட் விவகாரத்தில் இது தான் என்னுடைய முக்கியமான முதல் வாதம்.
மாநில திட்ட குழு உறுப்பினர் அமலோற்பவநாதன்…
சுதந்திரத்துக்கு பிறகு தமிழ்நாடு பிற மாநிலங்களை விட மாறுபட்டு திராவிட இயக்க தலைமையில் மக்களுக்காக சமூக நீதி சமத்துவம் கல்வி மருத்துவ ஆகியவற்றை வழங்கியது.
கல்வியில், மருத்துவத்தில் அனைவருக்கும் முக்கியத்துவம் அளித்தது தமிழ்நாடு, குறிப்பாக வட மாநிலங்கள் வசதி வாய்ந்தவர்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கியது ஆனால் தமிழ்நாடு அப்படி அல்ல, அனைத்து மக்களுக்கும் கல்வியும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்று செயல்பட்டது.
தமிழ்நாடு நீட் தேர்வு எதிர்ப்பதற்கான காரணம், ஒரு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, மாநில பாடத்திட்டத்திற்கு எதிரானது, என்பது மட்டும் கிடையாது, முக்கியமான காரணம் ஏழை மாணவர்களுக்கு பாதகமாக இருப்பது என்பதுதான்.
ஒரு அரசின் கல்வி உரிமையும் அம்மாநில மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற காரணத்தினால் தான் தமிழ்நாட்டின் திராவிட அரசு நீட் தேர்வை எதிர்க்கிறது என்பதை வடமாநில மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்பொழுது பிற கட்சிகள் நீட் விவரம் குறித்து பேசி வருவதற்கு முதல் காரணம் திராவிட இயக்கம்தான்.
மருத்துவர் காஃபில் கான்…
நீட் தேர்வு என்பது இடஒதுக்கீட்டை அழிக்க கொண்டு வந்தது. நீட் வசதியானவர்களான இடஒதுக்கீடு மட்டுமே, ஏழை எளிய மக்களுக்கானது அல்ல.
முன்பெல்லாம் மருத்துவ கல்லூரிகளில் ஏழை எளிய மக்கள், தலித் மக்கள் மருத்துவ படிக்க வந்தனர், இப்போது எல்லாம் வசதி படைத்த மட்டுமே மருத்துவ படிப்பில் காண முடிகிறது.
நான் பணிபுரியும் ஜெய்ப்பூர் மருத்துவ கல்லூரியில் வரும் மாணவர்கள் எல்லாம் விலை உயர்ந்த ரக வாகனங்களில் தான் கல்லூரிக்கு வந்து பயில்கின்றனர், அப்படி இருக்கும் போது எவ்வாறு சாமானிய மக்களின் நிலை அவர்களுக்கு தெரியும்.
அனைத்து வசதிகளும் கொண்டு வெற்றி பெறுவோருக்கும், எந்த வசதி இல்லாமல் வெற்றி பெறுவோருக்கும் உள்ள வேறுபாடு பலவகை, முயலுக்கு ஆமை ஓட்டப்பந்தய கதை தான். இப்படியானவர்களுக்கு உருவாக்கப்பட்டது தான் இடஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து தனியார் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்பு செலவை அரசு ஏற்கிறது, இதை நாடு முழுவதும் ஏன் கொண்டு வரக்கூடாது.
நீங்கள் நடத்தும் தேர்வு எங்களுக்கு வேண்டாம், எங்களுக்கு தேவையான தேர்வை நாங்களே நடத்தி கொள்கிறோம், மாநில அரசே தேர்வை நடத்தி கொள்ளட்டும் என தெரிவித்தார்.