நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து- 6 பேர் பலி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னா கவுண்டனூரில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சின்னா கவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ஆம்னி வேன் மோதியதில் ஆம்னி வேனில் பயணம் செய்த எட்டு நபர்களில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து நடந்த பகுதி ஆய்வு மேற்கொண்டதுடன் அரசு மருத்துவமனைக்கு வந்து உடற்கூறு ஆய்வுக்காக வைக்கபட்டிருந்த 6 நபர்களின் சடலங்களை பார்வையிட்டபின் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் மருத்துவர்களிடமும் காவல்துறையினிடம் ஆலோசனை மேற்கொண்ட பொழுது, தற்பொழுது ஒரே விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தது அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம். மேலும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களை தீவிரமாக சிகிச்சை அளித்து அவர்களை மீட்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை கூறினார். தேசிய நெடுஞ்சாலைகளில் நிற்கும் வாகனங்களை ரோந்து வாகனங்கள் மூலம் ஆய்வு செய்து லாரி உரிமையாளர்கள் மீதும் லாரியின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.