தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்க நிரந்தர பணியாளர்களை நியமிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.உலக மக்கள் தொகையில் 10% பேர் சிறுநீரக பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது புள்ளி விவரங்கள். சிறுநீரக பாதிப்பால் அவதி அடையும் மக்கள் மருத்துவர்கள் அறிவுரைப்படி டயாலிசிஸ் மேற்கொள்கின்றனர். குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 2,050 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளனர். இதில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 1,400 க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் உள்ளன. அதேநேரத்தில் டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்கும் டெக்னீசியன்கள் காலி பணியிடங்களும் அதிகம் உள்ள சூழலில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
இதனிடைய தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்க நிரந்தர பணியாளர்களை நியமிக்க கோரி மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமரவில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
