வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே நீட் தேர்வு ரத்து, சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட வற்றை கண்டித்து செல்வப் பெருந்தகை தலைமையில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட் அவர்களுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கும், நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசுகளே மருத்துவ நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதி வழங்க மறுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய செல்வப் பெருந்தகை, நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஜனநாயகத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக தெரிவித்தார். ஆனால், பாஜக அரசு ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக, சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டிற்கு தொடர்ந்து பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், தகுதியான பல ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கும் நிலையில் ஏன் ஒரே நபருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது என்ற கேள்வியையும் எழுப்பினார்.
மேலும், நீட் தேர்வை கடுமையாக விமர்சித்த அவர், அரியலூர் அனிதா தொடங்கி பல மாணவர்கள் நீட் காரணமாக உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டார். மாணவர்கள் கடுமையாக படித்து தேர்வு எழுதிய பின்னர், வினாத்தாள் கசிவு போன்ற காரணங்களால் தேர்வு ரத்து செய்யப்படுவது ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்களுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.
நீட் தேர்வில் தொடர்ந்து குளறுபடிகள் நடைபெறுவதாகவும், வினாத்தாள்கள் வெளியே கசிவது போன்ற சம்பவங்கள் தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து, மாநில அரசுகளே மருத்துவ நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் முடிந்த பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்படும் என்று முன்பே தெரிவித்திருந்ததாக கூறினார். தற்போது வரி உயர்வுகள் காரணமாக தங்கத்தின் விலை பொதுமக்கள் எட்ட முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், “இனி தங்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் குற்றம்சாட்டினார். தங்க விலையை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், கொரோனா கால கட்டத்தில் கொண்டுவரப்பட்ட அந்த நடைமுறை தற்போது தேவையற்றது என்றும், அதை நீக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், “புஷ்பா பட பாணியில் சோபா அரசியல் நடைபெறுகிறது” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அதை யார் கூறினார்களோ அவர்களிடமே கேட்க வேண்டும்” என்று சுருக்கமாக பதிலளித்தார்.
