அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய். ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சங்கம் அமைக்க போராட்டம் நடத்தியதால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள 25 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க நிறுவனத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளாா்.சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கி வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் , சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகள் , சாம்சங் இந்தியா தொழிற்சங்கம் சார்பில் சிஐடியு பொதுச்செயலாளர் சௌந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.கணேசன் கூறியிருப்பதாவது, ” இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை 5 மணி நேரம் சுமூகமாக நடைபெற்றது. சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் மற்றும் சாம்சங் நிர்வாகம் ஒப்புக்கொள்ளும் வகையில் இன்றைய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று ஊதிய உயர்வு குறித்தே பேசப்பட்டதில் 2025-26ம் ஆண்டில் தொழிலாளர்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு கிடைக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா 4500 ரூபாய் ஊதிய உயர்வு கிடைக்கும். அதன் மூலம் ஒரு தொழிலாளருக்கு 18 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு கிடைக்கும்.
25 பேரின் தற்காலிக பணி நீக்கம் குறித்து தனியாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க சாம்சங் நிறுவனத்துடன் பேசி தொழிலாளர் நலத்துறை உரிய நடவடிக்கையை எடுக்கும். அவரை தொடர்ந்து , சிஐடியு பொதுச்செயலாளர் சவுந்தராராஜன் செய்தியளரிடம் அளித்து பேட்டியில் , ”சாம்சங் இந்தியா தொழிற்சங்கம் தொடங்கப்படுவதை அந்த நிறுவனம் விரும்பாத சூழல் இருந்தது. இப்போது வரை சங்கத்தை ஏற்காத மனநிலையிலேயே அவர்கள் இருந்தனர்.இப்போது இந்த சங்கத்துடன் பேச வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் தொடர்ந்து தொழிற்சங்கத்துடன் பேசினால் மட்டுமே தொழில் அமைதி இருக்கும். தொழிலாளர்களுக்கு 9 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதிய உயர்வு தர முடியாது என்றனர். கடந்த 16 ஆண்டில் ஆண்டுக்கு 3 ஆயிரத்துக்கு மேல் ஊதிய உயர்வை அவர்கள் கொடுத்தது இல்லை. தற்போதைய பேச்சுவார்த்தையின் மூலம் 18 ஆயிரம் ரூபாய் வரை நேரடி உயர்வு கிடைத்துள்ளது , ஊக்கத் தொகை உள்ளிட்டவை மூலம் 21 ஆயிரம் முதல் 23 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கு விடுப்பும் அதிகம் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு சராசரியாக 23 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்திற்கு மாற்றாக இன்னொரு அமைப்பை உருவாக்க முயற்சித்ததில் சாம்சங் நிறுவனத்தால் வெற்றி பெற முடியவில்லை . ஏனேனில் பெரும்பான்மை தொழிலாளர்கள் எங்களிடம் உள்ளனர். சங்கம் அமைக்க முயற்சித்த 25 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ததால் எங்களுக்கு அச்சமில்லை , அந்த பிரச்சனையை அமைச்சரே முடித்து தருவதாக கூறியுள்ளாா் , அந்த பிரச்சனையில் தீர்வு வராவிட்டல் அவர்களை எப்படி உள்ளே கொண்டுவர வேண்டும் என எங்களுக்கு தெரியும் , அதற்கான நடவடிக்கையை எடுப்போம் என தெரிவித்துள்ளாா்.
சிவகிரியில் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் – அண்ணாமலை அறிவிப்பு!