Homeசெய்திகள்தமிழ்நாடுசமூக அமைதியைக் குலைப்போர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்!

சமூக அமைதியைக் குலைப்போர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்!

-

"விடுதலைப் புலிகள் எங்கிருக்கிறது?"- சீமான் சரமாரி கேள்வி!

சமூக அமைதியைக் குலைப்போர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்தேறும் தொடர் படுகொலைகளும், சாதியத்தாக்குதல்களும் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்வதும், பழிக்குப் பழியென கொலைவெறிச்செயல்களில் ஈடுபடுவதும், சாதியரீதியிலான கோர வன்முறைகளை நிகழ்த்துவதுமான சமூக விரோதிகளின் கொடுங்கோல் போக்குகள் தென்மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வன்முறைகளும், கொலைகளும் மிக இயல்பாக நடக்கிற அளவுக்கு திமுகவின் ஆட்சியில் தமிழகத்தின் நிலை மோசமடைந்திருப்பது வெட்கக்கேடானது.

திருநெல்வேலி மாவட்டம், வாகைக்குளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா என்பவர் கடந்த மே 20 அன்று பாளையங்கோட்டையில் பட்டப்பகலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இக்கொடூரக்கொலை நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மக்கள் புழக்கமுள்ள வீதியில் சாதாரணமாகக் கொலைசெய்கிற அளவுக்குக் கொலையாளிகளுக்குத் துணிவு எங்கிருந்து வந்தது? இது தமிழ்நாடா? இல்லை! உத்திரப்பிரதேசமா? சட்டமும், ஒழுங்கும் சீர்கெட்டுப் போய் இருக்கும் இந்த ஆட்சிதான் மக்களுக்கான விடியல் ஆட்சியா?

பேரவலம்! நாற்புறமும் சிக்கல்களும், உரிமைப்பறிப்புகளும் தமிழ்ச்சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் நிலையில், தமிழர்களின் ஓர்மையும், ஒருங்கிணைந்த அணிச்சேர்க்கையும் பேரவசியமாகிறது. இத்தகையச் சூழலில், தமிழினத்தைப் பிளந்துப் பிரிக்கும் விதமாக நடைபெறும் சாதிய மோதல்களும், பிரிவினைப்போக்குகளும் இந்த இனத்திற்கு விளைந்த சாபக்கேடாகும். உழைக்கும் மக்களிடையே பகையை மூட்டிக் குளிர் காயும் அரசியல் அதிகார மையங்கள், தங்கள் கைப்பாவையாக உள்ள சமூக விரோதிகள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தும் இத்தகைய படுகொலைகள் தென்மாவட்ட மக்களின் மனஅமைதியைக் குலைத்துள்ளன.

சமூக நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், அதனைக் கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே, இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, தென்மாவட்டங்களில் ஏற்படும் வன்முறைச்செயல்களை சட்டத்தின் துணைகொண்டு தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், சமூக அமைதியைக் குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ