சட்டவிரோத கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல், அறப்போர் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளா் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலியில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க அறப்போர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகளால் ஏற்படும் அதிர்வு, சரிந்து வரும் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் காற்று மாசு குறித்து கருத்து தெரிவிக்க நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், அக்கூட்டத்தைக் கலைக்கத் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, கருத்துக் கேட்புக் கூட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் அத்துமீறி நடந்து கொண்ட நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதோடு, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என அ.ம.மு.க. பொதுச்செயலாளா் டி.டி.வி தினகரன் கூறியுள்ளாா்.


