தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். அதாவது கடந்த 2017ம் ஆண்டு முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மீது சுமார் 50 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ளது. இந்த எஃப்.ஐ.ஆர்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ட் மாதம் சோதனை மேற்கொண்டது. தொடர்ந்து கடந்த நாட்களாக சென்னை மணப்பக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டிலும் ரெய்டு மேற்கொண்டனர்.
முன்னதாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்ட விரோதமானது என அறிவிக்கக்கோரி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, செவி வழி தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்படவில்லை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 எஃப்.ஐ.ஆர் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டது என தெரிவித்தது.
மேலும், எந்த வழக்குகளின் அடிப்படியில் சோதனை நடத்தப்பட்டது என்பதை டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தெரிவிக்க சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை எனவும், அவ்வாறு விவரங்களை வழங்கினால், ஆதாரங்களை மறைக்கவும், அழிக்கவும் வாய்ப்புகள் உள்ளதால் அது தொடர்பான விவரங்களை வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று(மே 22) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நீதிபதி, விசாரணைக்கும் தடை விதித்தார்.
மேலும், ஒரு தனிநபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என்றும், எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி அமர்வு, அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுவதாகவும், வரம்பு மீறி செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முறைகேடு நடந்துள்ளது என்றால் தனிநபர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கலாம் எனவும், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தன்னுடைய எல்லைகளை தாண்டி செயல்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆரில் அவர்களே நடவடிக்கை எடுக்கட்டும், நீங்கள் ஏன் தலையிடுகிறீர்ர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மூலம் அமலாக்கத்துறைக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளதாக அரசியல் கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.