ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி விசைப்படகு ஒன்றையும், தமிழ்நாடு மீனவர்கள் 12 பேரையும் இன்று இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளாா்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இலங்கை கடற்படை இந்தியாவின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, தொடர்ந்து மீனவர்களை கைது செய்வது மீனவ கிராமங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க அவர்களை சந்தித்துப் பேசினார்.
அப்பொழுது கூட தமிழ்நாட்டின் மீனவர்களின் கைது குறித்து பேசியதாக தகவல் இல்லை. தமிழ்நாட்டின் மீனவர்கள் கைது குறித்து ஒன்றிய பாஜக அரசுக்கு எந்தவித அக்கறையும் இல்லை என தெரிகிறது. கைது செய்யப்பட்டிருக்கும் அனைத்து மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க, ஒன்றிய பாஜக அரசு ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வரும் காலங்களில் மீனவர்கள் கைது நடைபெறாமல் இருக்கவும், அவர்களின் பாதுகாப்பிற்கும் இந்திய ரோந்து கப்பல்கள் நம் கடற்பரப்பில் ரோந்து செல்லவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்” என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.



