spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுற்றமிழைத்தோரின் சொத்துக்களை முடக்கி, கனிம தொழிலை அரசே நடத்த முன்வரவேண்டும்! - பெ.சண்முகம் வலியுறுத்தல்

குற்றமிழைத்தோரின் சொத்துக்களை முடக்கி, கனிம தொழிலை அரசே நடத்த முன்வரவேண்டும்! – பெ.சண்முகம் வலியுறுத்தல்

-

- Advertisement -

தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள சட்டவிரோத தாது மணல் கொள்ளை பற்றி  விரிவான விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், 16 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பளித்துள்ளது. அதில் அரிய தாதுமணல் கொள்ளை நடந்திருப்பதை உறுதி செய்துள்ளதுடன், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சுரங்க நிறுவனங்கள் இடையிலான தொடர்பை சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென்றும் முக்கியமான தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்புக்குரியதாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.குற்றமிழைத்தோரின் சொத்துக்களை முடக்கி, கனிம தொழிலை அரசே நடத்த முன்வரவேண்டும்! - பெ.சண்முகம் வலியுறுத்தல் மேலும் இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தாது மணல் எடுப்பதற்காக உரிமம் பெற்ற 7 நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக, அணு சக்திக்கு தேவையான அரிய கனிமம் உள்ளிட்டு எடுத்து ஏற்றுமதி செய்தன. பல லட்சம் கோடிகள் மதிப்பு வாய்ந்த இந்த அரிய கனிமங்களின் கொள்ளை, பிரண்ட்லைன் உள்ளிட்ட ஊடகங்களின் விரிவான செய்திகளின் மூலம் அம்பலப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றமும், அரசும் குறிப்பிட்ட நிறுவனங்களின் கிடங்குகளை மூடியதுடன், பல்வேறு விசாரணை குழுக்களும் அமைக்கப்பட்டன.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் ஆகியோர்,  தாது மணல் எடுக்க தடை விதிக்கும் முன், சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கடற்கரை மணலுக்காக ராயல்டி மற்றும் அபராதமாக மட்டும் ரூ 5,832.29 கோடி வசூலிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், சீல் வைக்கப்பட்டிருக்கும் கிடங்குகளிலும், தொழிற்சாலைகளிலும் குவிந்திருக்கும் சுமார் 1.4 கோடி டன் தாது மணல், அரை பதப்படுத்தப்பட்ட மணல் மற்றும் பதப்படுத்தப்பட்ட கனிமங்களின் தற்போதைய அளவு மோனோசைட் உட்பட அனைத்து வகையானவைகளையும் கையாள உரிமை பெற்ற மத்திய அரசின் நிறுவனமான இந்திய அரிய மண் நிறுவனத்திற்கு (ஐசுநுடு) உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

we-r-hiring

அபராத தொகையை முழுமையாக வசூலிப்பதுடன், கிடங்குகளில் இருக்கும் தாதுக்களை ஒப்படைத்து அதில் கிடைக்கும் லாபத்தையும் பெற்று தமிழ்நாட்டு கஜானாவில் சேர்க்க வேண்டும். இவ்வாறு முறைகேடான தொழிலில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என சி.பி.ஐ(எம்) வலியுறுத்துகிறது.

மேலும், இந்த வழக்கு விசாரணை நடந்த போதே 2018 முதல் 2022 வரை 4 ஆண்டுகளுக்கு சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் கடத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 6,449 டன் அளவிலான அணுசக்திக்கு தேவையான மோனோசைட் கனிமங்கள் என கண்டறியப்பட்டது.  நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுரேஷ், கார்னெட், இலுமினைட் உள்ளிட்ட தாதுமணல் தூத்துக்குடி துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டதை தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

எனவே, இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள், மேல்மட்ட அதிகாரிகள், சுங்கத்துறை மற்றும் பெரும் கார்ப்பரேட் தொடர்புடனே இந்த கொள்ளையை முன்னெடுத்திருக்க முடியும். எனவே, சி.பி.ஐ மேற்கொள்ளும் விசாரணை அனைத்து தரப்பாரையும் உள்ளடக்கி, முழு வலைப்பின்னலையும் வெளிக் கொண்டுவருவதாக அமைய வேண்டும் என சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, சத்யபிரதா சாஹூ மற்றும் வழக்கறிஞர் வி. சுரேஷ் ஆகியோர் சமர்ப்பித்த அனைத்து அறிக்கைகளையும் அமர்வு செல்லத்தக்கதாக அறிவித்திருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு இந்த அறிக்கைகளை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பதுடன் இது தொடர்பான சிறப்பு விவாதத்தை முன்னெடுக்க வேண்டும்.

இந்த விசயத்தில் தொடக்க முதலே தீவிரமான தலையீட்டை சி.பி.ஐ(எம்) கோரி வந்துள்ளது. அரிய கனிமங்கள், தாதுமணல் உள்ளிட்டு கனிமவள தொழில் மொத்தமும் அரசின் வசமே இருக்க வேண்டும், அப்போதுதான் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும், தாதுமணல் வருவாய் நேரடியாக அரசிடம் சேர்வது, மக்கள் நலத் திட்டங்களுக்கு உதவிடும். எனவே, இந்த தாதுமணல், கனிம வள தொழில்களை முற்றாக அரசுடைமையாக்கிட வேண்டும் ”என்று சி.பி.ஐ(எம்) சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளாா்.

து.வேந்தர் மீது ஊழல்… பதிவாளர் நேர்காணல் நடத்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

MUST READ