வரும் ஆகஸ்ட் 19ம் தேதி அமைச்சர் உதயநிதி, துணை முதல்வர் ஆகிறார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதியை துணை முதல்வராக்க திமுக., அமைச்சர்கள் பலரும் விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடாக அவ்வப்போது தங்களது ‘ஆசைகளை’ வெளிப்படுத்தி வந்தனர்.
இது பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”உதயநிதியை துணை முதல்வராக்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை” என பதிலளித்தார்.
இந்த நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த ‘தமிழ்ப்புதல்வன்’ திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜ கண்ணப்பன், மேடையில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, ‘துணை முதல்வர் உதயநிதி’ என கூறிவிட்டு, அடுத்த நொடியே, ‘சாரி, ஆகஸ்ட் 19ம் தேதிக்கப் பிறகுதான் துணை முதல்வராவார், அதற்கு முன்னாடி அப்படி சொல்லக்கூடாது’ எனக் கூறி சமாளித்தார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.