தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்ற பதவியேற்ற நிலையில் நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் புதிய கூட்டத் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அவை நாளை மீண்டும் காலை 9.30 மணிக்கு கூடுகிறது.
சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மூத்த தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியிடுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற ஜே.சி.டி. பிரபாகர், ஏற்கனவே 1980 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் வில்லிவாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முதற்கட்ட அமைச்சரவை பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாத நிலையில், அவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் முன்பே பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகள் தரப்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படாததால், ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டால், தற்போது பொறுப்பு வகித்து வரும் தற்காலிக சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்வார்.
இதற்கிடையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 232 எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்டோர் எம்.எல்.ஏ.க்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
ஆனால், மயிலம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம் மட்டும் இன்று பதவியேற்கவில்லை. அவர் பின்னர் சபாநாயகர் அறையில் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி தற்போது காலியாக உள்ளது. முதலமைச்சர் பதவியை ஏற்றதைத் தொடர்ந்து அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி காலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய அவை நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள சபாநாயகர் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கையை புதியஅரசு எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
