பணத்திற்காகவும் பதவிக்காகவும் தான் பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் சண்டை போடுவது போல் நாடகமாடுவதாகவும் காடுவெட்டி குருவின் மகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.வன்னிய சங்கத் தலைவராக இருந்து மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, குடும்பத்து பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாது என பிற்போக்குத்தனமாக பேசியிருந்த பா.ம.க. ராமதாஸ் தற்போது தன்னுடைய மகளை அரசியலில் முன்னிறுத்துவதாக குறை கூறினார். பா.ம.க. தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் சண்டை போடுவது போல் நாடகம் போடுகின்றனர் என குற்றஞ்சாட்டிய அவர், பணத்திற்காகவும் பதவிக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள் அவர்கள் என விமர்சித்தார்.
20 ஆண்டுகளாய் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னிய சமுதாய மக்களுக்கு எந்த நன்மையையும் ராமதாஸ் செய்யவில்லை என விருதாம்பிகை புகார் தெரிவித்தார். 10.5 சதவீதம் முடிந்து போன கதை என எடப்பாடி பழனிச்சாமியை போல, ராமதாசும் அன்புமணி ராமதாசும் குறிப்பிடுவதாக கூறிய அவர், தொடர்ந்து வன்னியர் சமுதாய மக்கள் சீரழியும் பாதையில் எடப்பாடி கொண்டு சென்று உள்ளதாக விமர்சித்தார்.

வருகின்ற தேர்தலில் வன்னிய சமுதாயம் எடப்பாடிக்கு எதிராக செயல்படும் என்று விருதாம்பிகை தெரிவித்தார். சுய லாபத்திற்காகத் தான் பா.ம.க. கட்சி நடத்தப்படுவதாகவும் வன்னிய சமுதாயத்திற்காக எந்த நலனும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். தியாகிகளுக்கான மணிமண்டபம், ஓய்வூதியம் வேலை வாய்ப்பு என திமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியதற்காக நாங்கள் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளதாக விருதாம்பிகை தெரிவித்தார்.
டெல்லி விரைந்த சி.பி.ராதாகிருஷ்ணன்… பிரதமரிடம் நேரில் வாழ்த்து…