ரஷ்யா – உக்ரைன் இரு நாட்டு பிரச்னையை உலக பிரச்சனையாக மாற்ற நினைத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று ரகசியமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று வந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ஓராண்டு நிறைவு விழா ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது.


இதில் கலந்து கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தொடரும் என அறிவித்தார். மேலும், உக்ரைனுக்கு எதிரான போரை கவனமுடனும் முறையாகவும் எதிர்கொண்டு வருவதாகவும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க காரணமே மேலை நாடுகள் என குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கு இடையான போரை உலகளாவிய போராக மாற்ற முயற்சி செய்தால் ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என எச்சரித்த புடின், ரஷ்யாவை எந்த ஒரு சக்தியாலும் தோற்கடிக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும், ரஷ்யா போர் செய்து வரும் நிலையில் ராணுவ தளவாடங்கள், ராணுவ ஆயுத தயாரிப்பு உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் ஆயுதத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதாகவும், இதனால் ஆயுத தொழில் செய்வோர் ரஷ்ய அரசாங்கத்தால் போதிய மானியம் பெற முடியும் என கூறியுள்ளார். உலக நாடுகளுக்கு இணையான பொருளாதாரம், ரஷ்யாவுடன் நட்புறவுடன் உள்ள நாடுகளின் குடிமக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கணமுடன் கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.


