ராமதாசின் பேரன் முகுந்தனை கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கும் முடிவு அந்த கட்சி குடும்ப கட்சியாகிறது என்பதை தான் காட்டுகிறது என பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.


ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் தொடர்பாக பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-முகுந்தனை பாமக இளைஞர் அணி தலைவராக நியமிக்கும் ராமதாஸ் அறிவிப்பு, பாமக ஒரு குடும்ப கட்சியாகிறது என்பதைதான் காட்டுகிறது. ராமதாஸ் அறிவிப்பும், அன்புமணியின் எதிர்ப்பும் அதை தான் குறிக்கிறது. அன்புமணி சொல்வது சரிதான். பாமகவில் நீண்ட காலம் அனுபவம் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால் அன்புமணி எந்த அடிப்படையில் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டார். ராமதாஸ் மகன் என்ற ஒற்றை அடிப்படையில் தான் அன்புமணி கட்சிக்கு கொண்டு வரப்பட்டார். கட்சியின் தலைவராக ஆக்கப்பட்டார். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கூட்டணி பேச்சுவார்த்தையில் கூட எம்.பி. சீட் கொடுப்பது, அமைச்சர் பதவி என்றாலும் அன்புமணிக்கு தான் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற கட்சி மாற்றப்பட்டது. இதனையும் மக்கள் பார்த்துக்கொண்டு தான் உள்ளனர்.எனவே அன்புமணி தனது வசதிக்காக குடும்ப கட்சியாகிவிட்டது என பேசுகிறார். அதிகாரத்தை ஒரே இடத்தில் சேர்த்துக்கொண்டு, வாக்களித்த மக்களுக்கு எதிராகவே செயல்பாடு இருக்கும் என்பதை தான் பார்த்துள்ளோம்.

தனது பேச்சை கேட்காதவர்கள் கட்சியை விட்டு செல்லுங்கள் என்ற ராமதாசின் கருத்து அவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகதான் தெரிகிறது. கூட்டணி பொருத்த முடிவுகள் என்றாலும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் தான் எடுப்பார்கள். அவர்களுக்கு ஆலோசனை கூறவோ, முன்மொழியவோ கட்சியில் யாரும் இல்லை. ராமதாஸ் – அன்புமணி இடையே ஏற்பட்டுள்ளது பிளவுதான். தனது பேச்சை கேட்பவர்கள் மட்டும் கட்சியில் இருங்கள் என ராமதாஸ் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். அன்புமணி நான் தனியாக ஒரு அலுவலகம் அமைப்பேன் என்று கூறுவது. கட்சிக்குள் வெளிப்படையாகவே மோதல் வெடித்துள்ள நிலையில், இதனை பிரச்சினை இல்லை என கூறுவது தவறு. ஒரே கட்சிக்குள் இரு கட்சி அலுவலகங்கள் செயல்படுவது என்பது சாதரணமானது அல்ல. பாமகவுக்குள் இவ்வளவு காலமாக இருந்த ஆதிக்கம் இன்று உடைந்துள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான் இது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


