முருகன் நாட்டால் பயனடைந்தது இந்து முன்னணி அமைப்பு மட்டும்தான் என்றும், அண்ணாமலை இருந்தால் தமிழ்நாட்டில் ஒன்று, இரண்டு இடங்களில் கூட பாஜக வெற்றி பெற முடியாது என்று நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

முருக பக்தர்கள் மாநாடு குறித்து நடிகர் எஸ்.வி.சேகர், அமெரிக்காவில் இருந்து பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- முருக பக்தர்கள் மாநாட்டை ஆன்மீக பக்தர்கள் நடத்தினார்களா? என்றால் கிடையாது. அதனை இந்து முன்னணி என்கிற அரசியல் கட்சி நடத்தியது. தமிழ்க்கடவுள் முருகன் என்றால் அவருக்கு ஏன் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்கிறார்கள். ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு அரசியல் கட்சி, மக்களுக்கு இந்த திட்டங்களை எல்லாம் செய்வேன் என்று சொலலி ஓட்டு கேட்க வேண்டும். அதை தவிர்த்து நாம் எல்லா ஒரே சாதிக்காரர்கள், ஒரே மதத்துக்காரர்கள் என்று சொல்லி ஓட்டு கேட்கக்கூடாது. ஆட்சிக்கு வந்த உடன் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சாமி கும்பிட போகிறோமா? அல்லது கூட்டம் கூட்டம் போய் சடங்கு சம்பிரதாயங்களை செய்ய போகிறோமா? ஆட்சியாளர்கள் என்பவர்கள் ஊழல் அற்றவர்களாகவும், மக்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். பாஜகவை ஆதரிப்பவர்கள் எல்லாம் ஊழல் அற்றவர்களா?
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வந்தவர்கள் எல்லாம் செருப்பு அணிந்துதான் வந்தார்கள். மேடையில் அமர்ந்திருந்தவர்களும் செருப்பு அணிந்திருந்தார்கள். அவர்களுக்கு பின்னால் தானே எல்லா சாமிப்படங்களும் இருந்தன. ஒரு முறை நடிகை குஷ்பு, சினிமா படத்தின் படப்பிடிப்பிற்காக போடப்பட்டிருந்த செட்டிற்கு செருப்பு அணி வந்துவிட்டார் என்று எல்லோரும் கத்தி கூச்சல் போட்டார்கள். இன்றைக்கு ஏன் அது குறித்து பேசவில்லை. எனக்கு பக்தி உள்ளது. நான் எப்படி வேண்டுமானாலும் சாமி கும்பிடுவேன். ஆனால் நான் இப்படிதான் சாமி குடும்பிட வேண்டும் என்று சொல்ல யாருக்கும் அறுகதை கிடையாது. மாநாட்டிற்கு வரவில்லை. நீங்கள் எல்லாம் இந்துக்களே கிடையாது என்று சொல்கிறார்கள். இந்துக்கள் ஒன்றுபட முடியாது. இந்துக்கள் என்பது ஒரு வாழ்வியல் முறை. இந்துக்கள் என்று சொல்பவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்கிறார்களா? அப்படி செய்தால் ஏன் ஆணவக் கொலைகள் நடக்கின்றன? அனைத்து மதங்களிலும் நன்மையும் உள்ளது. தீமைகளும் உள்ளன.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர இந்துத்துவா கொள்கைதான் இன்றைக்கு பாஜகவின் மிகப்பெரிய பலவீனமாகும். ஒரு இந்துவுக்கு உயிருக்கு பிரச்சினை என்றால், அருகில் உள்ள தேவலாயத்திற்கு சென்று மெழுகு வர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்துவிட்டு வா என்று சொன்னால், நாம் அதை செய்வோம். இல்லை என் உயிரை இந்து கடவுள் காப்பாற்றினால் போதும், வேறு எந்த கடவுளும் காப்பாற்ற வேண்டாம் என்று சொல்ல மாட்டோம் அல்லவா. தமிழ்நாட்டில் 6 கோடி பேர் வாக்களிக்கின்றனர். அவர்களில் 5 லட்சம் பேர் மாநாட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால்? அவர்கள் யார்? பாஜகவின் ஆட்கள் தானே. சென்னையில் 108 சிவலிங்கள் விழா நடைபெறவில்லையா? அம்பத்தூர் அம்மன் விழா நடைபெறவில்லையா. வள்ளுவர் கோட்டத்திற்கு எல்லோரும் போகவில்லையா? அதுபோல கடவுளை தரிசிப்பதற்காக மக்கள் வந்திருக்கிறார்கள். அதற்காக நீ சொல்பவருக்கு தான் வாக்களிக்க வேண்டுமா? அது நடக்கவே நடக்காது.
வாக்களிப்பவர்களிடம் நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன். தமிழ்நாட்டிற்கு என்ன செய்வேன் என்று தான் சொல்ல வேண்டும். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை எல்லாம் நிறுத்திவிடுவோம் என்று சொன்னால் என்ன ஆகும். மும்மொழி கொள்கை என்று அமித்ஷா பேசுகிறார். அந்த கொள்கையை அமல்படுத்தாவிட்டால் உங்களுக்கு நிதி தர மாட்டோம் என்று மத்திய அரசு சொல்லிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித்ஷா, ஆங்கிலம் பேசுபவர்கள் எல்லாம் வெட்கப்பட வேண்டிய காலம் வரும் என்று சொல்கிறார். அப்போது ஆங்கிலம் பேசக்கூடாது. இந்தி மட்டும்தான் பேச வேண்டுமா? அப்போது ஒரு மொழி கொள்கையா? அப்போது அமித்ஷா, இந்தி மட்டும் பேச போகிறாரா? குஜராத்தி மட்டும் பேச போகிறாரா? என்றால் நாங்கள் தமிழ் மட்டும் பேசிக் கொள்கிறேன். ஆங்கிலம் எனக்கு பிடித்திருக்கிறது. எனக்கு வசதியாக உள்ளது கற்றுக் கொள்கிறேன்.
பாஜக தமிழ்நாட்டில் வெற்றி பெறுவது மிகவும் கஷ்டமானது. எப்போது அவர்கள் மதத்தை கையில் எடுத்துவிட்டார்களோ அது தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகாது. இந்த மாநாட்டில் யாருக்கு லாபம் என்றால் இந்து முன்னணிக்கு தான். நானே அவர்களை பாராட்டி உள்ளேன். ஆனால் அது இந்து வெறியாக மாறினால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒரு இந்துதான். எனக்கு முஸ்லீம், கிறிஸ்தவ நண்பர்களும் உள்ளனர். எனக்கு அவர்களை பிடித்துவிட்டால் அவர்களது பழக்க வழக்கங்களை நான் ஏற்றுக்கொள்ளப் போகிறேன். அவர்கள் என் பழக்க வழக்கத்தை ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள். நான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று என் மகனின் இஸ்லாமிய நண்பர் தர்காவில் வழிபாடு நடத்தி, எனக்கு தாயத்து கட்டினார். எதற்காக நான் சொல்கிறேன் என்றால் கடவுளை நீங்கள் நம்புகிறீர்கள் தானே. அது எந்த வடிவத்தில் இருந்தால் என்ன? அதை ஏன் விவாதப் பொருளாக மாற்றுகின்றனர். இது அரசியலாகும். இந்த அரசியல் எடுபடாது.
பவன கல்யாண் வந்து தமிழ்நாட்டு அரசியலை மாற்றிவிட முடியுமா? அரசியல் பண்ண தெரியாதவர்கள் தான் தமிழ்நாட்டில் பாஜகவில் இருக்கிறார்கள். அதுவும் அண்ணாமலைக்கு பிறகு பாஜக கெட்டு குட்டிச்சுவராகி விட்டது. இன்றைக்கும் அண்ணாமலை பாஜக ஜெயிக்க வேண்டும் என்று வேலை செய்ய மாட்டார். எப்படியாவது நயினார் தோற்க வேண்டும் என்பதற்காக அனைத்து வேலைகளையும் அவர் செய்வார். இதோடு முருகனை எல்லாம் மறந்து விடுவார்கள். அடுத்த மே மாதம் தான் தேர்தல். அப்போது, பாஜக எனக்கு முருகனை காட்டினார்கள். நான் அவர்களுக்கு தான் வாக்களிப்பேன் என்று சொல்வார்களா? பாஜக என்ன செய்ய போகிறார்கள்.
பாஜக, அதிமுகவுக்கு மிகப்பெரிய பாரமாக மாறிவிட்டது. ஆனால் இவர்கள் என்ன நினைக்கின்றனர் என்றால், நாம எது பேசினாலும் எடப்பாடி சும்மா இருப்பார் என்று. அவருக்கு வேறு வழியில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடியின் உண்மை முகம் தேர்தல் அறிவித்த உடன் கூட்டணியை பற்றி பேச வருகிறோம் அல்லவா அப்போது தெரியும். அவர் யார் என்று. எடப்பாடி பழனிசாமி, மிகப்பெரிய ராஜதந்திரி. அதேபோல் அண்ணாமலை நாக்கை சுருட்டி, வாய்க்கு பிளாஸ்த்ரி போட்டுக்கொண்டால் ஒரு 10 வாக்குகளாவது கிடைக்கும். நானும் பேசுவேன். நான்தான் தேர்தல் பொறுப்பாளர் என்று வந்தால், இருப்பதும் குட்டிச்சுவராகி விடும்.
பாஜகவுக்கு 11 சதவீத வாக்குகள் எல்லாம் கிடையாது. அது எல்லா கட்சிகளின் வாக்குகளும் சேர்ந்து வாங்கியதை தனக்கு வந்ததாக சொல்கிறார். 4 வாக்குகள் தான் குறைவு என்றால்? நாடாளுமன்றத்தில் பென்ச்சுக்கு கீழே உட்கார வைப்பார்களா? தோற்றுவிட்டார்கள் தானே. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வருவது என்பதை விட்டு விட்டு மக்களுக்காக உழைத்தால், ஒரு 50, 60 வருஷங்கள் ஆகும். 2029க்கு பிறகு மத்தியில் பாஜக அரசு இருக்குமா என்பது சந்தேகம் தான். ஜெயலலிதா என் சகோதரி போன்றவர். கலைஞர் என்னை தனது மகன் போன்று அவ்வளவு பாசத்துடன், எனக்கு இதயத்தில் இடம் கொடுத்தவர். ஸ்டாலின் சொந்த சகோதரர் போன்று அவ்வளவு அன்புடன் இருக்கிறார். அதுபோதும் எனக்கு. அதற்காக உடனே திமுகவில்ல போய் சேர வேண்டுமா? அறிவே கிடையாதா?
தமிழ்நாட்டில் பாஜகவில் பிராமணர்கள் இருக்கக்கூடாது என்று சொல்லி சொல்லி காலி செய்தவர் அண்ணாலை. ஆனால் பிராமணர்கள் நாளை அண்ணாமலை தான் அடுத்த பிரதமர் என்கிறார்கள். அதற்கு வாய்ப்பே கிடையாது. நயினார் நாகேந்திரன் எப்பேர்பட்ட அரசியல்வாதி என்று அவரும் அண்ணாமலைக்கு நிரூபிப்பார். தமிழ்நாடடில் பாஜக ஒன்று, இரண்டு இடங்களில் வர வேண்டும் என்றால் அண்ணாமலைக்கு மிசோரம், நாகாலாந்து போன்ற மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக போட்டு அனுப்ப வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.