அருள்மொழி
ஆம், அது கோயில் நுழைவுப் போராட்ட மல்ல. கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்கான போராட்டம்தான். அப்போது அவர் இராமசாமி நாயக்கர்தான். அப்போது அவர் காங்கிரசு கட்சியிலதான் இருந்தார். அந்தப் போராட்டத்தை காந்திதான் அறிவித்தார். இன்னும் பல தலைவர்கள் போராடினார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் இராமசாமிப் பெரியார்தான் ஈரோட்டில் இருந்து தன் தோழர்களுடன் போராடச் சென்றார். போராடிச் சிறை சென்றார்.
கட்சி உத்தரவால் கடமைக்குச் சிறை சென்றிருந்தால் விடுதலை பெற்றபின் வீட்டிற்கு வந்திருப்பார். ஆனால் அது சுயமரியாதைக்கான போராட்டம் என்று மீண்டும் களம் கண்டார். சிறைசென்றார். உடன் போராடிய தலைவர்களின் குடும்பங்கள் அழுதிருக்கலாம். ஆறுதல் சொல்லி இருக்கலாம். ஆதரவாகப் பேசியும் இருக்கலாம்.

ஆனால், என் கணவர் மீண்டும் மீண்டும் போராட வேண்டும், அதற்கு அவருக்கு வலிமை வேண்டும் என்று கடவுளிடமும் காந்தியிடமும் வேண்டுகோள் வைத்தவர் இராமசாமிப் பெரியாரின் மனைவி நாகம்மைதான். இரண்டாம் முறை சிறையா! நல்லது. நாங்கள் வருகிறோம் என்று மனைவி நாகம்மையும் தங்கை கண்ணம்மையும் தோழமைப் படையுடன் அதே வீதியில் இறங்கிப் போராடிய வரலாறு இராமசாமிப் பெரியாருக்கு மட்டும் தான் அமைந்தது.
அரண்மனைக் குடும்பத்தின் நட்பை ஒதுக்கி வைத்து மக்களுடன் நின்ற அந்த ஈரோட்டு இராமசாமிப் பெரியாரின் போராட்டம் வெற்றியில் முடிந்தது. அரச குடும்பம் காந்தியுடன் உடன்படிக்கை கண்டது.
“ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி”
அதுவரை காணாத அந்தத் தலைவரை ‘இராமசாமி என்ற மகான்’ என்று இன்றும் நன்றியோடு நினைக்கும் மக்கள் வாழும் ஊர் வைக்கம்!!!.
இன்று அந்தப் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக கேரள அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து, தந்தை பெரியாருக்கு நினைவகமும் அவர் பெயரில் நூலகமும் அமைக்கிறார்கள்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் பங்கேற்கும் இந்த வரலாற்று நிகழ்விற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முன்னிலை வகிக்கிறார். இதுவே அவருக்கு 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசு என்றார் தமிழக முதல்வர். இத்தகைய பெருமைகளை இரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சியால் சாதித்த வரலாறு தந்தை பெரியாருக்கே உரியது. அதற்கான முதல் மைல்கல் வைக்கத்தில் அமைந்தது. ஆம், அதனால்தான் அவர் வைக்கம் வீரர் பெரியார்!!
12.9.1924 தவசக்தி இதழில் ஒரு செய்தி
“ஸ்ரீமான் நாயக்கர் மனைவியாரின் செய்தி” என்ற தலைப்பில் வெளியான ஒரு கடிதம் அல்லது அறிக்கைதான் அந்தச் செய்தி.
“என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல்தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானார். இன்று காலை 10 மணிக்கு (11.9.1924) மறுபடியும் இராஜத்துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு வருஷத்திற்குக் குறைவில்லாத காலம் தண்டனை கிடைக்கக்கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாய்ச் சொல்லி என்னிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.
அவர் திரும்பத் திரும்ப தேச ஊழியத்தின் பொருட்டு சிறைக்குப் போகும் பாக்கியம் பெறவேண்டும் என்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளர வேண்டும் என்று கடவுளையும் மகாத்மா காந்தியையும் பிரார்த்திக்கிறேன்.
அவர் பாக்கியில் வைத்துவிட்டுப் போவதாக நினைத்துக்கொண்டு போகிற வைக்கம் சத்தியா கிரக விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து அதைச் சரிவர அகிம்சா தருமத்துடன் நடத்த அனுகூலமான முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாய் என் கணவரிடம் அபிமானமும் அன்பும் கொண்ட தலைவர்களையும் தொண்டர்களையும் கொள்கிறேன்.” பக்தியோடு பிரார்த்தித்துக் கொள்கிறேன்.”
நாகம்மாள்.இப்படி தேச ஊழியத்துக்காக தன் கணவர் சிறைக்குச் செல்வதை பாக்கியம் என்றும் அதற்காக அவருக்கு ஆயுள் வளர வேண்டும் என்றும் எழுதியவர் அன்னை நாகம்மையார் என்று அன்புடன் அழைக்கப்பட்ட நாகம்மாள் அவர்கள்.