spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபாஜகவை கழட்டி விட திட்டமா? பிரம்மாண்ட கட்சி இதுதான்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லெட்சுமணன்!

பாஜகவை கழட்டி விட திட்டமா? பிரம்மாண்ட கட்சி இதுதான்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லெட்சுமணன்!

-

- Advertisement -

அதிமுக கூட்டணிக்கு பிரம்மாண்ட கட்சி வருவதாக எடப்பாடி பழனிசாமி சொல்வது, விஜய் கட்சியை குறிப்பிட்டுதான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் விசிக, இடதுசாரி கட்சிகளை அவர் கூட்டணிக்கு அழைப்பதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர்  எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும்போது, எடப்பாடி முன் கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் என்று சொல்லக்கூடாது. தேர்தல் கூட்டணி யாரோடு என்று கேட்டால், அதற்கு இன்னும் நாட்கள் உள்ளன. ஆனால் களத்தை தயார்படுத்துவதற்கும், நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் துவண்டு போயிருக்கும் அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் இந்த 10 மாதங்களே தாமதம் என்று நினைக்கிறேன். இன்னும் சில மாதங்களுக்கு முன்பு வேலைகளை தொடங்கி, எடப்பாடி பழனிசாமி ஒரு சுற்றுப் பயணம் சென்றிருக்க வேண்டும். ஆட்சியில் இருக்கின்ற, உறுதியான கூட்டணி வைத்திருக்கிற திமுகவே ஒன்னேகால் வருடங்களுக்கு முன்பாக தேர்தல் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகிறது. எனவே 10 மாத காலம் என்பது பெரிய கால அவகாசம் இல்லை.

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுபயணத்தை எழுச்சியோடும், உற்சாகத்தோடும் தொடங்க வேண்டிய நேரத்தில், அந்த அணியின் கால்களை, அந்த அணியினரே பிடித்து கீழே இழுப்பது போன்று அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்வது அமைந்துள்ளது. அதை இருவரும் ஒப்புக்கொண்டு சொல்வதாக இருந்தால், நல்லது நாமே மக்களிடம் போய் சேரட்டும் என்று சொல்லலாம். ஆனால் அதிமுக தரப்பில் அது நல்லது இல்லை என்று சொல்கிறார்கள். நாங்கள் தனித்தே ஆட்சி அமைப்போம். தனிப் பெரும்பான்மை எங்களுக்கு கிடைக்கும் என்று சொல்கிறபோது, அமித்ஷா தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் தொலைக்காட்சிக்கு, ஆங்கில செய்தித் தாள்களுக்கு என்று தொடர்ந்து நாங்கள் ஆட்சியில் பங்கு பெறுவோம் என்று தெளிவாக சொல்கிறார். அது அதிமுகவின் நிலைப்பாட்டிற்கு நேர்மாறாக இருக்கிறதை பார்த்தால், சுற்றுபயணம் மக்களிடம் எடுபடுமா? என நினைத்து பார்க்கிறபோது துரதிர்ஷ்டவசமாக தான் வருகிறது. ஒரு கட்சியின் தலைமையில் அமைகிற அணி, தங்களிடம் உள்ள பலங்கள் இருக்கிறது. அதை கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்றுதான் பார்க்க வேண்டும். ஆனால் இருக்கும் பலத்தையே பலவீனமாக்கும் வேலை தான் நடைபெறுகிறது.

பிரமாண்டமான கட்சி ஒன்று தங்கள் கூட்டணிக்கு வருவதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அப்போது அவர் யாரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறாரோ அவர்களை தான் அப்படி ஒப்பிட்டு சொல்லியுள்ளார். அந்த வகையில் பார்க்கும்போது மருத்துவர் ராமதாசுக்கு அவர் அவ்வளவு பெரிய இடத்தை கொடுப்பார் என்று தோன்றவில்லை. எடப்பாடி பழனிசாமி இடஒதுக்கீடு தருகிறேன் என்றார். அறைக்குள் சில பல விஷயங்களை பேசினார். அதற்கே கூட்டணிக்கு வந்துவிட்டனர். தற்போது அப்பா – மகன் பிரச்சினை முடியாதபோது ஒரு பிரம்மாண்டமான கட்சி என்று நிச்சயமாக பாமகவை சொல்லியிருக்க மாட்டார்.

இருக்கும் கட்சிகளில் வாக்கு வங்கியை நிரூபித்த பெரிய கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். அது கூட்டணி உடைந்து வெளியே வருவதற்கான சூழல் உள்ளதா? என்றால் எனக்கு தெரியவில்லை. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது எடப்பாடி பழனிசாமி எங்கே வந்து நிற்கிறார் என்றால் விஜயின் கட்சியில் தான் வந்து நிற்கிறார் என்று தோன்றுகிறது. விஜய் என்கிற பிரம்மாண்டமான பிம்பத்தை தான் அவர் அப்படி சொல்கிறார். விஜய் தங்களின் அணிக்கு வந்தால் வெற்றி நிச்சயம் என்பதை உருவகப்படுத்தி பார்த்துவிட்டுதான் எடப்பாடி அப்படி சொல்கிறார். சுற்றிவளைத்து பார்த்தால் அது விஜய் குறித்துதான் இருக்கும்.

துப்பாக்கியை தொடர்ந்து விஜயின் 50வது பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸாகும் போக்கிரி!

எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக பிரம்மாண்ட கட்சி என்று சொல்லி இருக்கலாம். அல்லது திமுகவிடம் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துவதற்கான வியூகமாக இருக்கலாம்.  திமுக, பாஜகவை கடுமையாக எதிர்க்கும் விஜய், அதிமுக குறித்து வாய் திறப்பது இல்லை. அப்படி ஒரு கட்சி இருப்பது அவருக்கு தெரியாதது போலவே நடந்துகொள்வார். மக்கள் நம்மை கவனிப்பார்கள் என்கிற குறைந்தபட்ச புரிதல் விஜயிடம் இல்லை. அதிமுக குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன? அப்போது வெட்கத்தை விட்டாவது கடைசி நேரத்தில் அதிமுகவோடு போய் சேர்வார் என்கிற சந்தேகத்தை விஜயே உயிரோட்டத்தோடு வைத்திருக்கிறார்.

பாஜக இருக்கும் கூட்டணிக்கு விசிக, இடதுசாரிகள் வர மாட்டார்கள். அப்படி இருக்கும்போது எடப்பாடி பழனிசாமி, அந்த கட்சிகளுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கிறார். அப்போது, இவர்கள் எல்லாம் வந்தால், எடப்பாடி பாஜகவை கழற்றிவிட்டு விடுவாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறார். இதற்காக அமித்ஷா தான் கவலைப்பட வேண்டும். ஆனால் பாஜகவை இவ்வளவு வெளிப்படையாக எதிர்த்து துணிந்து வருவரா என்கிற சந்தேகம் எனக்கு உள்ளது. ஏனென்றால் எதோ ஒரு நிர்பந்தத்திற்கு பயந்துதான் அவர் கூட்டணிக்கு சம்மதித்தார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி முறியாத வரை விசிகவையும், இடதுசாரிகளையும் திமுக கூட்டணியில் இருந்து பிரிக்க முடியாது.

அமித்ஷாவும், நானும் சேர்ந்து பேசிவிட்டு தான் சொல்கிறேன். நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அப்படி இருவரும் பேசியதற்கு பிறகுதான் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்று தற்போது வரை சொல்லவில்லை. அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சர் ஆவார் என்கிறார். இந்த சில்மிஷம் செய்கிற அமித்ஷாவை, பாஜகவை எடப்பாடி பழனிசாமி ஊமைக்குத்தாக தான் குத்தியிருக்க வேண்டும். எங்களை போன்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பாக எடப்பாடி சொல்கிறார் நான் என்டிஏவின் தலைவர். நான் சொல்கிறேன் என்று சொல்கிறார். இதைதான் நாம் எதிர்பார்த்தோம். இது நீங்களாக சூட்டிக்கொண்ட கிரீடம் அல்ல. அமித்ஷா உங்களின் தலையில் சூட்டிய கிரீடம். அதில் எடப்பாடி உறுதியாக இருந்தால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக இருப்பார்கள். அந்த உற்சாகம் வர தொடங்கிவிட்டதற்கான அடையாளம் தான் மயிலாடுதுறை கூட்டத்தை பார்த்தால் தெரிகிறது. தலைவன் பேசினால் தொண்டன் தானாக உற்சாகமாவான்.

தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எல்லாம் தாங்கிகொண்டு விஜய் இதுவரை அதிமுக குறித்து விமர்சிக்காமல் இருப்பதை பார்க்கும்போதும், அதிமுக தலைமை கழகத்தில் விஜய் குறித்து பேச வேண்டாம் என்று எடப்பாடி சொல்வதை பார்க்கிறபோதும், அதிமுக – தவெக இடையே ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதுள்ள அணியால் திமுக அணியை வீழ்த்த முடியாது. இதனை புரிந்துகொண்டு தான் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ