தமிழ்நாட்டில் அண்ணாமலை ஆதரவுடன் என்டிஏ முதலமைச்சர் வேட்பாளராக சீமானை அறிவித்துவிடுவார்கள் என்கிற அச்சம் காரணமாக தான் எடப்பாடி பழனிசாமி என்.டி.ஏ கூட்டணிக்கு வந்தார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள முரண்பாடுகள் குறித்தும், அதிமுக விஜயுடன் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்தும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பிரம்மாண்டமான கட்சி தங்களின் கூட்டணிக்கு வரும் என்று சொல்லி இருக்கிறார். அப்போது தற்போது கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்று சொல்கிறார். முபாரக்கை தவிர வேறு யாரும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிக்கு வரவில்லை. இவர்தான் என்.டி.ஏ கூட்டணிக்குள் சென்றுள்ளார். தற்போது அதிமுகவிடம் கூட்டணிக்கு கட்சிகள் வரும் என்று எடப்பாடி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் வடமாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் தென் மாவட்டங்களில் பல்வேறு சமுதாயத்தினர் அதிமுகவுக்கு எதிராக திரும்பிவிட்டனர். 90 தொகுதிகளில் பாமக இல்லாமல், அதிமுகவால் போட்டியிட முடியாது என்று நான் சொல்லி இருந்தேன். பாமகவில் தந்தை – மகன் இடையே பிரச்சினை நிலவுகிறபோதும் பாமக என்கிற பெயரில் தான் அதை சொன்னேன். ஆனால் சென்னை அரசியல் விமர்சகர்கள் பாமகவுக்கு என்ன உள்ளது என்று சொல்கிறார்கள். நான் இதை பாமகவை மையப்படுத்தி பார்க்கிறேன். விஜய் தனித்து போட்டியிடுவதால் எடப்பாடி பழனிசாமி பதறுகிறார்.
1962ல் காமராஜர் இருந்தது போன்று பெரிய உயரத்தில் ஸ்டாலின் நிற்கிறார். அன்றைக்கு அண்ணாவுக்கும், காமராஜருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 18 சதவீதம் ஆகும். தற்போதும் பல முனை போட்டி வந்தால் இரண்டாவது இடத்தில் வரக்கூடிய எடப்பாடிக்கும், ஸ்டாலினுக்குமான வாக்கு வித்தியாசம் இரட்டை இலக்கத்தில் வரும். ஸ்டாலினை தோற்கடிக்க வேண்டும் என்றால் ஒன் டூ ஒன்னில் தான் தோற்கடிக்க முடியும். காமராஜர் 1960களில் கட்சியை பிடித்து, 46 சதவீத வாக்குகளை எடுத்தார். நாடிமுத்துப்பிள்ளை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ராஜாஜி போன்ற பல தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து கட்சியை கைப்பற்றி, 46 சதவீதம் வாக்குகளை பெற்றார். இன்றைக்கு அதே அளவில் பெரிய கூட்டணியை பயன்டுத்தி ஸ்டாலின் 47 சதவீத வாக்குகளை எடுத்துள்ளார். இந்த 47 சதவீதம் என்பது ஸ்டாலின் தலைமைக்கு கிடைத்த வாக்கு ஆகும். எப்படி காமராஜர் தோற்கடிக்கப்பட முடியாதவர் இல்லையோ, அதேபோல் ஸ்டாலினும் தோற்கடிக்கப்பட முடியாதவர் இல்லை. ஒன் டூ ஒன்னில் தோற்கடிக்கலாம். ஆனால் எடப்பாடி தலைமையில் ஸ்டாலினை தோற்கடிக்கவே முடியாது. ஸ்டாலின் சாதிய அடிப்படையிலானவர் அல்ல. ஆனால் அண்ணாமலை 2 சாதி கட்சி என்று சொல்வது போன்று எடப்பாடியின் நிலைமை உள்ளது. அவர் தலைமையில் ஸ்டாலினை தோற்கடிப்பது சாத்தியம் இல்லை.
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக கூட்டணி அழைப்பு விடுக்கிறார். எடப்பாடி பழனிசாமி குழப்பத்தில் இருக்கிறார். பாஜக, அதிமுகவிடம் விழுந்துவிட்டதாக எடப்பாடியின் ஆதரவாளர்கள் என்னை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அவர்தான் பிரதமர் மோடி, அண்ணாமலை ஆதரிக்கும் 8 சதவீதம் வாக்கு உள்ள சீமானை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துவிடுவாரோ என்கிற அச்சத்திலும், என்னுடைய முயற்சிகளை அறிந்துகொண்டு, நாம் மூன்றாவது இடத்திற்கு போய்விடுமோ என்கிற அச்சத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கு வந்துவிட்டார். இன்னும் அந்த பதற்றத்தை அண்ணாமலை வைத்துக்கொண்டிருக்கிறார். பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று தெளிவாக சொல்லிவிட்டார். அப்போது ரவீந்திரன் துரைசாமி பேசுவதை எடப்பாடி பழனிசாமி பார்க்கிறார். மனவலிமையை இழக்கிறார். முடிவுகளை மாற்றுகிறார். அதேபோன்று தான் பாமக விஷயத்திலும் என்.டி.ஏவில் இருக்கிறார்கள். நம்ம கூட வருவார்கள் என்று பார்த்தார். ஆனால் பாமகவின் நிலைமை உயர்கிறது. ஏனென்றால் பாமக இல்லாமல் 90 தொகுதிகளில் போட்டியிட முடியாது என்கிற என்னுடைய கருத்தை அவர் ஏற்றுக்கொண்டார். இதற்கு காரணம் விஜய் தனித்து நிற்பதை எடப்பாடி ஒரு அச்சுறுத்தலாக பார்க்கிறார்.
எடப்பாடி பழனிசாமி, 11 சதவீதம் வாக்குகள் உள்ள பாஜக வந்ததே தன்னுடைய இரண்டாவது இடத்தை காப்பாற்றுவதற்காக தான். என்.டி.ஏ கூட்டணிக்குள் அவர் விழுவதற்கு காரணம் ஆதவ் அர்ஜுனாவோ, ஜான் ஆரோக்கியசாமியோ காரணம் இல்லை. ரவீந்திரன் துரைசாமி, சீமானை என்டிஏ முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து விடுவானோ என்கிற அச்சம்தான். அப்படி ஆதவ், ஜான் ஆரோக்கியசாமியிடம் பயந்திருந்தால் விஜயிடம் பேசி முடித்திருப்பார். விஜய் ஒரு பொருட்டு அல்ல என்று நினைத்துதான் என்டிஏ கூட்டணிக்கு எடப்பாடி வந்தார். ஜெயலலிதாவை போன்று பலம் நிறைந்த தலைவராக இருந்தால் எடப்பாடியை நம்பி அணி வரும். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் பலமே 20 சதவீதம்தான். அப்போது அந்த அளவுக்குதான் அவரை மதிப்பார்கள். எடப்பாடியின் வீழ்ச்சி தான் அவரை தவறு செய்ய வைக்கிறது. அவருடைய வீழ்ச்சி மற்றவர்களுக்கு புரிகிறது. அதனால்தான் வேறு யாரும் அவருடன் கூட்டணி வைக்க மறுக்கிறார்கள். தேமுதிக, பாமக என யாரும் அவரை நம்பி வரவில்லை. பாஜக மட்டும் தான் உள்ளே வந்துள்ளது.
2021ல் இரட்டைத் தலைமை இருந்ததால் எடப்பாடி பழனிசாமி பதற்றமின்றி தேர்தலை எதிர்கொண்டார். அன்றைக்கு பாமகவை விட அதிக சீட்டு பாஜகவுக்கு கொடுத்தால் வன்னியர் வாக்குகள் கிடைக்காது என்று எடப்பாடி சொன்னார். அதனால் 20 சீட்டுகளை எல்.முருகன் வாங்கிக் கொண்டு செல்லும் நிலை இருந்தது. நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக இருந்தாலும், அண்ணாமலைக்கு என்று டெல்லியில் ஒரு பெயர் உள்ளது. 2 முறை கூட்டணி முறிந்ததற்கு காரணம் அண்ணாமலைதான். எடப்பாடி 6 சீட்டுகளுக்கு மேல் தர மாட்டேன் என்றார். அண்ணாமலை 12 இடங்கள் வேண்டும் என்றார். தற்போது கூட்டணி முறியக்கூடாது என்பதற்காக தான் நயினார் நாகேந்திரனை போட்டுள்ளனர். அவரும் தலைமைக்கு கட்டுப்பட்டு சரியாக செய்கிறார். அவருடைய பணிகளை சரியாக செய்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.