ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணையும் முடிவு என்பது நன்மையை விட அதிகளவு பாதிப்புகளையே ஏற்படுத்தும். அவர் விஜய் அணிக்கு செல்வது மட்டுமே சிறந்த முடிவாக இருக்க முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தமிழக வருகை மற்றும் பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளதன் பின்னணி குறித்து தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- கங்கை கொண்டான் என்றால் வடக்கை வெற்றி கொண்டவர் என்றுதான் அர்த்தமாகும். எல்.முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்மொழி கொள்கை திட்டம் தொடர்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அப்போது அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படும் என்றுதான் அர்த்தம். பிரதமரின் கங்கைகொண்ட சோழபுரம் வருகை குறித்து தமிழிசை ஆங்கில நாளேடு ஒன்றில் சிலாகித்து கட்டுரை எழுதியுள்ளார். தமிழ்நாடு வலதுசாரி கொள்கைகளுக்கு ஆதரவாக மாறிவிட்டது. தேர்தல் முடிவுகள் அதை வெளிப்படுத்தும் என்று சொல்கிறார். திராவிட இயக்க பாரம்பரியம் என்று பார்க்கும்போது ஒருசில விஷயங்கள் இங்கே அடிப்படையானவை. உதாரணமாக இடஒதுக்கீடு முறையை சொல்லலாம். இடஒதுக்கீடு 1920ஆம் ஆண்டு முதல் இருக்கிறது. பிராமணர் அல்லாதோர் இடஒதுக்கீடுதான். தமிழிசை சௌந்தரராஜனின் கட்டுரையில் பிராமணர்கள், பிராமணர் அல்லாதோர், வடக்கத்தியர்கள் என்று தமிழ்நாட்டில் பிரிவினை அரசியல் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவிலேயே பிராமணர் அல்லாதோர் இடஒதுக்கீடு முறை மிகப்பெரிய அளவில் கொண்டுவரப்பட்டது சாகு மகராஜ் காலத்தில்தான். அன்றைய மராத்திய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியான கோலப்பூரில் இந்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. சாகு மகாராஜாவை சமாதானப்படுத்த அபயங்கார் என்பவரை பிராமணர்கள் அனுப்பினார்கள். அப்போது வலு உள்ளவர்கள் பிழைப்பார்கள். வலு இல்லாதவர்கள் பிழைக்க மாட்டார்கள். வலுஅற்றவர்களின் பாரம்பரியத்தில் வருபவர்களுக்கு நாம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் தனது அறிவிப்பின் நோக்கம் என்று சொன்னார். அப்போது தமிழ்நாடு பிரிவினை வாதம் பேசுகிறது. இன துவேஷம் செய்கிறது என்பது தவறான வாதமாகும். அடிப்படை கொள்கை என்பது மனிதநேயம். கூட்டணிக்கு கொள்கை தேவையில்லை. வசதிக்கு ஏற்ப கூட்டணி என்பது சரிதான். ஆனால் அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள முடியாது. மும்மொழி கொள்கைக்கு பெரிய ஆதரவு இருப்பதாக முருகன் எப்போது பேசினால் என்ன. அதை பிரதமர் வருகிறபோது எடுத்து மீண்டும் பொதுமக்கள் கவனத்ததிற்கு கொண்டு செல்கிறார்கள்.
தமிழ்நாட்டின் அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்தால் அதிமுக மிகவும் சிரமப்படும். ஏனென்றால் எம்ஜிஆரே இந்த அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்தது கிடையாது. பிரதமர் மோடி, கூட்டணி அரசு. பாஜக அந்த அரசில் பங்குபெறும் என்று அமித்ஷாவின் குரலை எதிரொலிக்கும் விதமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனக்கு அதில் சந்தேகம் தான். ஏனென்றால் அமித்ஷா தான் தமிழ்நாட்டிற்கான தேர்தல் பொறுப்பாளர். எனவே பிரதமர் அந்த மாதிரியான கருத்துக்களை சொல்வார் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களின் பெருமை குறித்து பேசுவார். வழக்கமாக அவருக்கு எழுதி தருபவர்கள் அப்படிதான் செய்கின்றனர். அடிப்படையானது என்ன என்றால்? சோழர்கள் வடக்கை வெற்றி கொண்டவர்கள். கண்ணகிக்கு கனகவிஜயர்கள் தலையில் கல்லை எடுத்து வந்தனர் என்பதுதான் இங்கே பாடலாக உள்ளது. அப்போது கங்கை கொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் இறங்கி வருவது வடஇந்தியர்களை தமிழர்கள் வெற்றி கொண்டதாக தான் பார்க்கப்படும்.
மற்றொருபுறம் பிரதமர் மோடி தன்னை சர்வதேச தலைவராக காட்டிக் கொள்வதற்கு தான் முயற்சிக்கிறார். அதில் சந்தேகமே இல்லை. அப்போது உள்ளுர் அரசியலுக்குள் வர வேண்டாம் என்று அவர் நினைக்கலாம். அத்துடன் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பது. பிரம்மாண்டமான கூட்டணி கட்சி அதிமுக. ஆனால் அதில் ஒற்றுமை இல்லை. ஓபிஎஸ்-ஐ சந்திப்பதற்கான நேரம் குறித்து தெளிவாக வில்லை. ஓபிஎஸ்- பிரதமர் சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, விஜயுடன் கூட்டணி அமைத்திடலாம் என்று நினைக்கிறார். அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைந்தால், அதிமுகவின் ஒரு பகுதியாக தான் அவர் இணைவார். ஏனென்றால் அவரிடம் கட்சியோ, பதவியோ கிடையாது. அப்படி சேர்ந்தால் வழக்குகளை எல்லாம் வாபஸ் பெற சொல்வார்கள். அதனால் அதற்கு மேல் கட்சிக்கு உரிமை கோரவும் முடியாது. அவர் அதிமுகவில் இணைவதால் பாதிப்புகள் தான் அதிகளவில் இருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் ஓபிஎஸ். மீண்டும் அவர் அதிமுகவுக்கு வருவதாக இருந்தால் என்ன பதவிக்கு வருவார்.
பிரதமர் தலையிட்டு, அவருக்கு ஒரு பெரிய பதவி கொடுங்கள் என்று சொன்னால்? அவைத்தலைவர் பதவியை தர முடியுமா? அதற்கு வாய்ப்பு இல்லை. அதிமுகவில் என்ன பதவி அவருக்கு தர முடியும். தொண்டனாக வருகிறேன் என்றால் அது சாத்தியமில்லாதது. அப்படி சொல்வதில் அர்த்தமில்லை. ஓபிஎஸ் உடன் இருப்பவர்கள் எல்லாம் தொண்டர்களாக வர தயாராக உள்ளனரா? தொண்டராக வாங்க. அடுத்த தேர்தலில் தான் சீட்டு என்று சொன்னால் ஒரத்தநாடு வைத்திலிங்கம் ஒப்புக்கொள்வாரா? அதிமுகவில் சேர்ந்தால் நமக்கு இவை எல்லாம் கிடைக்கும் என்று ஒரு கணக்கு இருக்கும். அப்படி எதற்கு இவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் எடப்பாடியின் கருத்தாகும். அவர்களை கட்சியில் சேர்க்கும் விவகாரத்திற்கு உள்ளேயே போக மாட்டேன் என்று எடப்பாடி தெளிவாக சொல்கிறார். அதற்கு காரணம் அவர்களுக்கு பதவி கொடுக்க முடியாது. அங்கே வேறு ஒருத்தர் வளர்ந்து வந்து விட்டார்.
அமமுகவில் இருந்து ஒருவர் வந்து இன்றைக்கு தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு செயலாளர் ஆக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் சுற்றுபயணத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. தஞ்சையில் 2 கோடி செலவாகியுள்ளது. 2 கோடி செலவு செய்யும் ஒருவருக்கு, ஒரு கனவு இருக்குமல்லவா? அப்போது பிரதமர் சொன்னதற்காக தனக்காக செலவு செய்தருக்கு தராமல், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சீட்டு தருவாரா? அதிமுகவில் சேர்த்துக் கொண்டாலும் எதுவும் கிடையாது. அதைவிட மாற்று அணிக்கு சென்றுவிடலாம். திமுகவுக்கு போக முடியாது. அப்போது இயல்பான மாற்று அணி என்பது தவெக தான். அது வசதியாக கூட இருக்கும். டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இருக்கிறேன் என்று சொல்கிறார். நயினாரும் அதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் நயினார் கொடுத்த நிர்வாகிகள் பட்டியல் இன்று வரை ஒப்புதல் அளிக்கவில்லையே.இதனால் கட்சி பணி சுணக்கமாகிவிட்டது. அதனால் விஜய் கூட்டணியை நம்பி போகலாம். எங்காவது வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கலாம். அப்போது ஓபிஎஸ் பிரதரை சந்திக்க நேரம் கிடைக்காததால் மனக்கசப்போடு இந்த முடிவை எடுக்கிறேன் என்று சொல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்