தமிழே உயிராக – தமிழர் வாழ்வே மூச்சாக – தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த கலைஞர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அவர் நிகழ்த்திய சாதனைகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

முத்தமிழறிஞர் கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தனது 95 ஆண்டு கால வாழ்வில், 81 ஆண்டுகாலப் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் கலைஞர். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், தமிழ்ப் பற்றாளர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்ட ஆற்றலாளர் அவர். கலைஞர் 14 வயதில் பள்ளி மாணவனாகத் திருவாரூர் வீதிகளில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியவர். கல்லக்குடி போராட்டத்தில் வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்து, தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவர். 1965 மொழிப் போர்க்களத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து பாளையங்கோட்டையில் தனிமைச் சிறை கண்டவர். சமூக நீதிக்காகப் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். பெரியாரின் சீடராக குடிஅரசு இதழில் பணியாற்றி, திராவிடர் கழகத்தின் எழுத்தாளராக, பகுத்தறிவுப் பேச்சாளராக தமிழ்நாடு முழுதும் உலா வந்தவர்.

பேரறிஞர் அண்ணா மீது அளவில்லா அன்பும், மரியாதையும் கொண்டு, அண்ணாவின் அன்புத் தம்பியாக பாசம் காட்டியவர் கலைஞர். அவர் உருவாக்கிய திமுக-வையும், அவர் கட்டமைத்த ஆட்சியையும் கட்டிக்காத்து, அரை நூற்றாண்டு காலம் திமுகவுக்கு தலைமை தாங்கியவர். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, 19 ஆண்டு காலம் சிறப்பான நிர்வாகத்தை அளித்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டி எழுப்பிய சிற்பி கலைஞர். நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவரான கலைஞர், 13 முறை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். தனது ஆட்சியில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த குடிசை மாற்று வாரியம், கை ரிக்சா ஒழிப்பு, பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சம உரிமை, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கட்டணமில்லா உயர்கல்வி, உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்தார்.
தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் கலைஞர் முன்னெடுத்த மாநில சுயாட்சி முழக்கத்தின் அடிப்படையில், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அனைத்து மாநில முதலமைச்சர்களும், மாநிலத் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுகின்ற உரிமையைப் பெற்றுத் தந்தார். மாநிலத் திட்டக்குழுவை அமைத்தார். தி.மு.கவின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமரான போது மத்திய – மாநில உறவுகளை மேம்படுத்தும் ‘இன்டர் ஸ்டேட் கவுன்சில்’ அமைத்திட வழி செய்தார். ‘மானமிகு சுயமரியாதைக்காரர்‘ எனத் தன்னை அடையாளப்படுத்திய கலைஞர், தன்னுடைய ஆட்சியையே விலையாகக் கொடுத்து நெருக்கடி நிலை அமலாக்கத்தைத் துணிவோடு எதிர்த்த முதல்வர் என்று வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படுபவர்.
திரைப்படத் துறையில் கோலோச்சிய கலைஞர், 1947ஆம் ஆண்டில், எம்ஜிஆர் நடித்த ‘ராஜகுமாரி’ திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதத் தொடங்கி ‘பராசக்தி’, ‘மனோகரா’ என அவரது திரைப்பணி தொடர்ந்தது. பின்னர் ‘பாசக் கிளிகள்’, ‘உளியின் ஓசை’, ‘பொன்னர் சங்கர்’ என சொல்லிக்கொண்டே போகலாம். இறுதியாக, தொலைக்காட்சியில் ஸ்ரீராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற சிறப்பான தொடரை எழுதினார். 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் படைத்தவர். தூக்குமேடை நாடகத்திற்காக எம்.ஆர்.ராதாவால், கலைஞர் என்று பட்டம் பெற்றவர். 15 சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் படைத்தவர். தனது கட்சியினருக்கு உடன்பிறப்பே என்ற தலைப்பில் 7000-க்கும் மேற்பட்ட மடல்கள் தீட்டியவர். கேள்வி எழுப்பி அதற்குப் பதிலும் எழுதி, தனது கருத்துகளை உரக்க உரைக்க, அந்த கேள்வி பதில் பகுதியை கருவியாக்கிக் கொண்டவர்.
உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய வள்ளுவருக்கு சென்னையில் கோட்டம் அமைத்தவர் கலைஞர். 2000-ம் ஆண்டில் 133 அடி உயரத்தில் கன்னியாகுமரியில் முக்கடல் சந்திக்குமிடத்தில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை ஒன்றை வானளாவிய உயரத்தில் நிறுத்தி உலகோர் பார்த்து பிரமிக்கும் வகையில் நிர்மாணித்தார். பூகம்புகாரில் சிலப்பதிகார கலைக்கூடம் அமைத்தார். தமிழுக்குச் செம்மொழித் தகுதி தரப்பட வேண்டும் என்கிற தமிழறிஞர்களின் நூற்றாண்டுக் கனவை 2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிறைவேறிடச் செய்தவர் கலைஞர். தமிழே உயிராக – தமிழர் வாழ்வே மூச்சாக – தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு தமிழினத் தலைவராக திகழ்ந்த கலைஞர் மறைந்து இன்றுடன் 7 ஆண்டுகளாகிறது. அவர் மறைந்தாலும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார். வங்கக் கடற்கரையில் தன் அண்ணனுடன் நிரந்தர ஓய்வுகொண்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவை என்றும் போற்றி வணங்கிடுவோம்.