பீகாரில் ஆளும் ஜே.டி.யு கட்சிக்கு 30 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 50 ஆயிரம் முகவர்கள் உள்ளனர். கூட்டணியில் இருந்துகொண்டே ஜேடியுவை விழுங்கும் வேலையை பாஜக செய்து வருகிறது என்று ஊடகவியலாளர் வளவன் விமர்சித்துள்ளார்.


பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் உச்சநீதின்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு குறித்தும், பாஜக – தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுகள் குறித்தும் ஊடகவியலாளர் வளவன் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறிஇருப்பதாவது:-பீகாரில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. எப்படி நீக்கினார்கள் என்றால் 30 நாட்களில் 7.25 கோடி மக்களை வீட்டிற்கு போய் பார்த்ததாக சொல்கின்றனர். குறுகிய நாட்களில் இப்படி நேரில் ஆய்வு செய்வது சாத்தியமா? என்கிற கேள்வி எழும். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து எவ்வித பதில்களும் இல்லை.
இந்நிலையில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கு தொடர்பாக பலவித வாத, பிரதிவாதங்கள் நடைபெற்றன. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு முக்கியமான உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜாய்மல்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஆதார் அடையாள அட்டையை ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டு உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால்? இவர்கள் இருவருமே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வாய்ப்பு உள்ளவர்கள் என்பதுதான்.

பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை நோக்கி தொடர்ந்து கூர்மையான கேள்விகளை வைத்து வருகின்றனர். குறிப்பிட்ட தேர்தல்களில் வாக்களித்த பின்னர் ஒருவரை இந்திய குடிமகனா? என்று நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிற அதிகாரமும் தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது என்கிற வாதத்தை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் போன்றவர்கள் வைத்தனர். இதை ஏற்றுக்கொண்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். தேர்தல் ஆணையம் கேட்கும் 11 ஆவணங்கள் இல்லாவிடடால், ஆதாரை ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேர்தல் ஆணையம் ஆதாரை ஏன் வேண்டாம் என்று சொல்லியது என்றால், 11 ஆவணங்களில் 5-ஐ ஆதாரை வைத்து விண்ணப்பித்து பெற முடியும். வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவருடைய பெயரை நீக்குவது என்றால், அது குறித்த தகவல் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்படி சொல்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றால் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய அளவில் வாக்காளர்களை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எதிர்தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக்கொண்டு நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களுடைய வாக்குச்சாவடி விவரங்களுடன் ஆதாரை இணைத்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பீகாரில் ஜேடியு, ஆர்.ஜே.டி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. இக்கட்சிகளுக்கு சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் ஒட்டுமொத்தமாகவே 2 எதிர்ப்பை தான் பதிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உச்சநீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்போதே எதிர்க்கட்சிகள் வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக சரிபார்க்கும் விவகாரத்தில் கூடுதல் விழிப்புணர்வோடு இருந்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் SIR நடவடிக்கைகளை தொடங்கியபோதே வெளிப்படைத்தன்மையோடு நடந்துகொள்ள தவறிவிட்டது. இல்லாவிட்டால் 2003ஆம் ஆண்டில் நடைபெற்ற SIR குறித்த அறிவிப்பை நீக்கி இருக்காது. SIR நடவடிக்கையை தொடக்கம் முதல் ஆதரித்து வரும் ஒரே கட்சியாக பாஜக மட்டும் தான் உள்ளது. அப்போது ராகுல்காந்தி முன்வைக்கும் வாக்கு திருட்டு புகாருக்கு இவர்கள் துணை நிற்கிறார்களா? என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

பீகார் போன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் நிறைந்த மாநிலத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களை நீக்குகிறார்கள் என்றால் அது குறித்த பட்டியலை பொதுவெளியில் ஆணையம் வெளியிட்டால் அதை இணையதளத்திலேயே பார்க்க முடியும். ஆனால் தேர்தல் ஆணையம் அதை செய்யவில்லை. இதில் காங்கிரஸ் – ஆர்ஜேடி கட்சிக்கு பின்னடைவு என்ன என்றால்? வாக்காளர் பட்டியல் சரிபார்க்க வேண்டிய நேரத்தில் ராகுல்காந்தி வாக்கு திருட்டுக்கு எதிராக விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டிருக்கிறார். கட்சி தலைவரின் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வேண்டியதால் அவர்கள் வாக்காளர் விவரங்களை சரிபார்ப்பதில் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதை இந்தியா கூட்டணி கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாஜகவின் நடவடிக்கையில் மிகவும் அச்சறுத்தலானது எது என்றால், கடந்த தேர்தலில் பாஜக 2வது பெரிய கட்சியாக வந்தார்கள். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆர்.ஜே.டி முதலிடமும், நிதிஷ் 3வது இடமும் பிடித்தனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக அதிக அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பாஜகவுக்கு இருப்பது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பாஜகவுக்கு இருக்கிறார்கள். அதேவேளையில் ஆர்.ஜே.டிக்கு 40 ஆயிரம் பேரும், ஜேடியுவுக்கு 30 ஆயிரம் பேரும் முகவர்களாக உள்ளனர்.

உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்படுத்துமா? என்பது அடுத்தக்கட்ட கேள்வியாகும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நபர்களின் மனுவை சரிபார்ப்பது எப்படி? விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்ற விவரங்களை தெரிந்து கொள்ளும் விதமாக பொதுவெளியில் வெளியிடுவார்களா? அல்லது அப்படி வெளியிடாவிட்டால் அடுத்து எங்கு முறையிடுவது என்பது போன்ற பல கேள்விகள் உள்ளன. உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்ட பிறகும், தேர்தல் ஆணையம் இதில் குளறுபடி செய்ய வாய்ப்பு உள்ளது.
அப்படி தேர்தல் ஆணையம் முறையாக செய்யவில்லை என்றால்? அவர்களை செய்ய வைக்க வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளன. இந்திய தேர்தல் ஜனநாயகத்தையே மீட்க அதிக விழிப்போடு இருக்க வேண்டிய கட்டாயம் எதிர்க்கட்சிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் உள்ளது. அதை எவ்வளவு பொறுப்புணர்வோடு எடுத்து செய்கிறார்கள் என்கிறபோதுதான் தேர்தல் ஆணையத்தை வேலை வாங்குவதும், அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகளை உச்சநீதிமன்றத்தில் வாங்குவதையும் செய்ய முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


