பெரியாரை பின்பற்றும் மு.க.ஸ்டாலின்- கி.வீரமணி புகழாரம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
திராவிடர் கழக தலைவர் கீ வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், “மாவட்டம் வாரியாக மீனவர் பிரச்சனையை தீர்த்து வைக்கும் கட்டமைப்பு மாண்புமிகு தமிழக முதல்வர் ஏற்படுத்தியுள்ளார்கள், எப்படி பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளை சந்தித்து பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படுகிறதோ, அதே போன்று கோட்டையில் மீனவர்கள் பிரச்சனை கேட்டறிந்து அது உடனடியாக தீர்த்து வைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் மீனவர்கள் நலன் பாதுகாக்கப்படவில்லை, எனவே சம்மந்தப்பட்ட அமைச்சர் அவர்கள் அதிகாரிகளை நேரில் சென்று உரிய கணக்கெடுத்து மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்யாத மீனவர்களை இணைக்க வேண்டும்.
அதனை தொடர்ந்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “மீனவர்களை காக்கும் ஒரே முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். ஒன்றிய அரசு மீனவர்களை காக்கவில்லை. இந்திய கடல் சார்ந்த திட்டத்தை கார்ப்பரேட் கம்பெனிக்கு கேட்டு மீன் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நம் முதல்வர் இலங்கையில் மீட்கப்படாத படகுகள் நிறைய உள்ளது, அதனை உடனடியாக மீட்டு தர முதலமைச்சரை சந்தித்து மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர், மீனவர்கள் ரயில் மூலம் வீடு சென்று சேர்வதற்குள் படகு ஒன்றிற்கு தலா 5 லட்சமும், நாட்டு படகிற்கு ஒன்றரை லட்சமும் தளபதி அறிவித்தார்கள் .
அதனையடுத்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஒன்றிய அரசின் பாரபட்சத்தால் தமிழக மீனவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள், கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மீனவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத ஒன்றிய அரசு 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீனவர்களிடம் பொய் வாக்குறுதிகளை கூறி ஏமாற்றுகிறது. அதற்கு மீனவர்கள் ஏமாறக் கூடாது” என்றார்.
தொடர்ந்து கீ.வீரமணி பேசுகையில், “தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்குகின்ற போது என்ன வாசகத்தை பின்பற்றினாரோ, அதே போன்று தளபதியும் பின்பற்றி வருகிறார். உதாரணமாக அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கை போன்றது. மேலும் மீனவ சமுதாய மக்களின் பிள்ளைகள் கடல்தொழிலையே நம்பி இல்லாமல் சமுதாய மாற்றத்தை உருவாக்கிட அனைவரும் கல்வி பெற்று மருத்துவராக, இஞ்சினியராக, வக்கீலாக அதிகார பதவிக்கு வரவேண்டும். மாநாட்டில் மீனவர் நலன் குறித்து 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திராவிடக் கழகத்தை நோக்கி இளைஞர்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.