செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்து பேசியதன் அச்சம் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா சந்திப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- டெல்லியில் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அவருடன் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், இன்பதுரை ஆகியோரும் சென்றுள்ளனர். எடப்பாடி உடனான சந்திப்புக்கு 20 நிமிடங்கள் தான் நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக சொல்கிறார்கள்.
இந்த சந்திப்பின்போது வேலுமணி உடனிருக்க வில்லை. கோவையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் மாநாட்டில் கலந்துகொண்ட வேலுமணி, அவர்களுடைய கைக் கூலியாக செயல்பட்டு வருகிறார். காரணம் கோவையில் பாஜகவுக்கு வாக்கு வங்கி இருக்கும் நிலையில், வேலுமணி தேர்தலில் நிற்கும்போது அவருக்கு ஆதரவு அளிப்பார்கள். மேலும் ஆட்சியில் இருந்தபோது கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற மத்திய அரசின் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, அவர் மிகவும் கோபமுடன் டோஸ் விட்டுள்ளார்.

டிடிவி தினகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டார். அதேபோல் ஓபிஎஸ்-ம் பாஜக கூட்டணியில் இருந்து ஒருபோதும் வெளியேற மாட்டார். தமிழ்நாட்டில் மொத்தம் 4 கூட்டணிகள்தான். திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, அதில் எடப்பாடி இருக்க மாட்டார். பொதுச் செயலாளர் பதவிக்கு அமித்ஷா புதிதாக ஒருவரை தயார் செய்து வைத்துள்ளார். அடுத்தபடியாக விஜய். அவருடன் கிருஷ்ணசாமி போன்ற சிறிய சிறிய கட்சிகள் போகின்றனர். அதில் தினகரனும் சேர தயாராக உள்ளார். அடுத்தபடியாக சீமான். இதைதாண்டி அரசியலில் எதுவும் இல்லை.
அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? யார் கட்சியை நடத்தப் போகிறார்கள் என்பதுதான் பிரச்சினை. அதற்கு தான் செங்கோட்டையன் போய் பார்த்துவிட்டு வந்தார். எடப்பாடி பழனிசாமியும், அமித்ஷாவை பார்த்துவிட்டு வந்தார். அதுவும் எடப்பாடி பழனிசாமி முகத்தை மறைத்துக் கொண்டு வருகிறார் என்றால் என்ன நடந்திருக்கும்? என்று நினைத்துப் பாருங்கள். நாட்டின் அரசியலை தீர்மானிக்கக் கூடிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பார்க்க சென்றுவிட்டு ஏன் முகத்தை மறைத்துக்கொண்டு வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பின்போது அமித்ஷா கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதனால் எடப்பாடியின் முகம் மாறிவிட்டது. பின்னர் முடிவை தான் சொல்லிவிடுவதாக கூறி எடப்பாடி பழனிசாமியை அனுப்பி வைத்துள்ளார். 4 பேரை அழைத்துச்சென்று கட்சி தன்னுடன் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் செங்கோட்டையன் தனியாக சென்று சந்தித்துவிட்டு வந்தார். எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்தற்கு காரணம் செங்கோட்டையன் ஏற்படுத்திய அச்சம்தான். மக்களவை தேர்தலின்போது கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது. தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தபோது நேரில் வந்து சந்திக்காதது என்று கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். அதனால் முகம் சுருங்கிப்போன எடப்பாடி பழனிசாமி, சோகத்தை மறைப்பதற்காக தான் முகத்தை கைக்குட்டை வைத்து மறைத்துச் சென்றுள்ளார்.

எப்படி இருந்தாலும் வரும் டிசம்பர் மாதம் எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து தூக்கி விடுவார்கள். எடப்பாடி பழனிசாமி, விஜய் உடன் சென்றுவிடுவார். மக்களவை தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய போதே அவரை அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்க அமித்ஷா முடிவு செய்துவிட்டார். டெல்லிக்கு சென்ற எந்த ஒரு அரசியல் தலைவரும் முகத்தை மறைத்துக்கொண்டு வந்ததில்லை. அந்த வரலாற்றை எடப்பாடி பழனிசாமி புதிதாக உருவாக்கியுள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


