கரூர் துயர சம்பவத்தில் விஜயை கைது செயதால், பின்விளைவுகள் ஏற்படலாம் என அரசு யோசிக்கிறது. எனவே இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக கையாண்டு வருகிறது என்று அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கரூர் மரணங்கள் தொடர்பாக தவெக முன்னாள் நிர்வாகியும், அரசியல் விமர்சகருமான ஜெகதீஸ்வரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளது:- கரூர் துயர சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் ஆகியும், விஜய் இன்னும் வெளியில் வரவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. தவெக என்பது விஜயுடைய கட்சி அல்ல. ஜான் ஆரோக்கியசாமியின் கட்சி. விஜய், ஜான் ஆரோக்கியசாமியின் வார்த்தைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் பிரச்சினை எதுவும் இல்லை. நாளைக்கு நீங்கள் கிளம்பி போகலாம் என்று சொன்னால், விஜய் உடனே கிளம்பி விடுவார். விஜய் சொந்த அறிவு என்பது கிடையாது. அன்றைக்கு கரூரில் இருந்து தப்பி ஓடிவிடுங்கள் என்று சொன்னதில் இருந்து இன்றைக்கும் வெளியே வந்தால் தள்ளுமுள்ளு ஆகிவிடும் என்று சொல்வதும் ஜான் ஆரோக்கியசாமி தான். அதுவரை மீடியாவை எப்படி கட்டுப்படுத்துவது என்று அவருக்கு தெரியும். எனவேதான் கருர் துயர சம்பவத்தில் முதன்மை குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டியவர்கள் விஜயும், ஜான் ஆரோக்கியசாமியும்தான் என்று சொல்கிறேன். ஜான்தான் ஒட்டுமொத்தமாக பிளான் போட்டு, அதை எப்படி செயல்படுத்துவது என்று சொல்கிறார்.
கரூர் துயர சம்பவத்தில் இறந்தவர்கள் யாரும் விஜயை குறை சொல்லவில்லை. ஆனால் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், இறந்தவர்கள் எல்லாம் விஜய் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தானா? என்று கேள்வி எழுப்புகிறார். அவருடைய மனைவி, காவல்துறை குறித்து மிகவும் மோசமாக பேசினார். இவற்றை பேச வைத்தது ஜான் ஆரோக்கியசாமி தான். புஸ்ஸி ஆனந்திற்காக எல்லாவற்றையும் செய்யக்கூடிய மாவட்ட செயலாளர் மதியழகன் தான், கூட்டநெரிசலுக்கு காரணம். தன்னை விடுவியுங்கள் என்று புஸ்ஸி ஆனந்த் சொல்கிறார். அப்போது அவருடைய உண்மை தன்மை குறித்து மற்ற மாவட்ட செயலாளர்களும் யோசிக்க வேண்டும். இன்றைக்கு நீதிபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தவெகவினர் கைதாகிறார்கள். அவர்களுக்கு பிணை வாங்குவதற்காகவாவது, கட்சி வர வேண்டும். கரூர் கூட்டநெரிசலுக்கு பின்னர் தவெகவினர் பல்வேறு சதி கோட்பாடுகளை கொண்டுவந்தனர். ஆனால் அவற்றை நீதிமன்றத்தில் பேசி இருக்கக்கூடாதா? 9 வழக்குகளில் ஒன்றிலாவது செந்தில் பாலாஜி சதி செய்தார் என்றோ? ஸ்டாலின் பழிவாங்குகிறார் என்றோ சொல்லவில்லை. காரணம் அதற்கு ஆதாரம் கிடையாது.
ஒருவேளை இந்த சம்பவத்தை அரசாங்கமே செய்ததாக வைத்துக்கொண்டாலும், நீங்கள் ஏன் கரூரை விட்டு ஓடிவந்தீர்கள். அங்கேயே நின்று பேசி இருக்க வேண்டும் அல்லவா? இவ்வளவு நடந்த பிறகும் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். விஜயால் ஒரு சம்பவம் நடைபெற்று விட்டது. அதற்கு ஏன் அவர் களத்திற்கு போய் நிற்கவில்லை என்கிற கேள்வி எழும். கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதி கேட்டிருக்கும் கேள்விகளில் நியாயம் இருக்கிறதா? இல்லையா? விஜய்க்கு தலைமைத்துவ பண்பு உள்ளதா? என்று சுய பரிசோதனை செய்ய வேண்டாமா? அதிமுக – பாஜக இன்றைக்கு விஜயை ஆதரிக்க காரணம் எப்படியாவது விஜயை தங்களுடைய கூட்டணிக்கு கொண்டு வந்துவிட்டால் விஜயை வீழ்த்திவிடலாம் என்கிற எண்ணம்தான். விஜய் தனித்து நின்று அவர் பிரிக்கப்போகிற வாக்குகள் மூலமாக திமுக 200 இடங்களுக்கு மேலாக வெல்லப் போகிறது. வாக்கு சதவீதம் குறைந்தபோதும் இடங்கள் அதிகரிக்கும். அதேவேளையில் அதிமுக பெரிய அளவில் அடிவாங்கும். அமித் ஷா பேசுகிறபோது விஜயை கடைசியாக பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார். ஒருவேளை அதற்கு எதாவது வழி பிறக்கும் என்று நினைத்திருக்கலாம். அந்த வழியாக கரூர் துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் நோக்கம் என்பது விஜயை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட் என்பது இந்த விவகாரத்தில் விஜயை ஹீரோ ஆக்க வேண்டும். அவரை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஏனென்றால் குருமூர்த்தி உட்கார்ந்து ஒர்க் அவுட் செய்கிறார். அவரை உள்ளே கொண்டுவந்தால் இவ்வளவு இடங்களை வெல்லலாம் என்கிறார். மற்றொன்று விஜயை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு அமித்ஷாவே நேரடியாக பேசியதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஒய் பிரிவு பாதுகாப்பு இசட் பிரிவாக மாறுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள். இவ்வளவு பாதுகாப்பு வழங்கி, அவரை கூட்டணிக்குள் கொண்டுவந்து, வழக்கில் இருந்து காப்பாற்றப்போவது எதற்காக என்றால்? ஆட்சிக்கு வருவதற்காக தான். இதுவரை பாஜக உடன் கூட்டணிக்கு போகக் கூடாது என்பதில் ஜான் உறுதியாக இருக்கிறார். அப்படி தவெக என்டிஏ கூட்டணிக்கு செல்லும்பட்சத்தில், என்டிஏ ஆட்சி வந்துவிடும். எடப்பாடி முதல்வர் ஆகிவிடுவார். ஆனால் விஜயின் அரசியல் எதிர்காலம் போய்விடும்.
விஜய்க்கு, திமுக மீது தனிப்பட்ட பிரச்சினை ஏதோ நிச்சயமாக இருக்கிறது. விஜய் கட்சி தொடங்கியதே திமுகவை எதிர்ப்பதற்காக தான். சிலர் உதயநிதி ஸ்டாலினுடன், விஜய்க்கு பிரச்சினை என்றும், முன்பு படத்தில் நடித்தபோது பிரச்சினை என்றும் சொல்கிறார்கள். ஆனால் சரியான காரணம் யாருக்கும் தெரியாது. ஆனால் விஜய்க்கு பாஜக உடன் எந்த பிரச்சினையும் இல்லை. ஜான்தான் கொள்கை எதிரி வேண்டாம் என்று சொல்கிறார். தமிழ்நாடு அரசு தங்களுக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து உண்மைகளை கொண்டுவந்துவிட்டனர். ஆனால் பேசுகிற இடத்திற்கு வந்த பிறகு விஜய் ஒரு 5 நிமிடங்கள் லைட் ஆப் செய்துவிட்டார். அப்போது என்ன செய்து கொண்டிருந்தார் என்கிற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது. அதற்கான பதில் உண்மை வெளிவரும்போது எல்லோருக்கும் தெரியும். கருர் கூட்டநெரிசல் விவகாரத்தை தமிழக அரசு அரசியல் ரீதியாக எதிர்கொள்கிறது. விஜயை கைது செயதால், போராட்டங்கள் வெடிக்கும் என்று ஆணையம் அமைத்து விசாரிக்கிறார்கள். ஆனால் பிரச்சினை ஏற்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.