கரூர் சம்பவத்தில் 40 பேர் இறந்துவிட்டதால் விஜய்க்கு பாப்புலாரிட்டி கூடிவிட்டது. அதனால் அவருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்று பாஜக சொல்வது நாகரிக அரசியல் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் விஜய் வீடியோ காலில் பேசியது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாருதிக்கப்பட்டவர்களுடன் விஜய் பேசி இருப்பது வரவேற்க தக்கதுதான். ஆனால் இது மிகவும் தாமதமான நடவடிக்கை. துக்கம் நடைபெற்றால் உடனே விசாரிக்க வேண்டும். பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலானோர் விஜயை குறை சொல்லவில்லை. அதற்கு காரணம் விஜய் இன்னும் ரூ.20 லட்சம் தரவில்லை. நாம் குறை சொன்னால் தராமல் போய்விடுவார்களோ என்பதுதான். பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். ஏதேனும் கருத்து சொல்லி பணம் கிடைக்காமல் போய்விடும் என்கிற தயக்கம் அவர்களிடம் உள்ளது. இது புரிந்துகொள்ள கூடிய ஒன்றுதான்.

இதை தாண்டி நாம் பார்க்க வேண்டியது தமிழ்நாட்டின் ஓட்டுப் போடுகிற தன்மை மாறுமா? மாறாதா? எதிர்காலத்தில் என்ன மாதிரியான கூட்டணிகள் வரும்? அல்லது அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்வதற்கு விஜய் ஒப்புக்கொள்வாரா? என்றுதான் நாம் பார்க்க வேண்டும். தற்போது ஆரம்ப கட்ட தகவல்களை வைத்து பார்க்கிறபோது விஜய் இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க பார்க்கிறார். அது சரியான நடவடிக்கைதான்.
கரூர் சம்பவம் தொடர்பாக வைக்கப்படும் சதி கோட்பாட்டை பலரும் நம்புகிறார்கள். அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். அந்த கூட்டத்திற்குள் ஒரு 10 பேர் நுழைந்து ஸ்ப்ரே அடித்தாலோ, ஊசி போடுவதோ அல்லது கத்தியால் குத்துவதோ, அவர்களின் உயிர்களுக்கே பாதுகாப்பு இல்லை. பல்லாயிரக்கணக்கான மக்களை கலைத்து விடுவதற்கு 10 முதல் 15 நபர்கள் வரை இருந்தால் போதுமா? இது நம்புகிற வகையில் இருக்கிறதா? இது எப்படி சாத்தியமா?
1991ல் ராஜிவ்காந்தி மரணத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட சதிக் கோட்பாட்டில் திமுக தேர்தலில் தோற்றே போனது. அப்போது சதிக்கோட்பாட்டை ஒர்க் செய்தது அதிமுக – காங்கிரஸ் கட்சிகள்தான். ஆனால் திமுக தற்போது ஆற்றுகிற எதிர்வினை, இந்த விவகாரத்தை கவனமாக கையாளுவது காலப்போக்கில் சரியாக வந்துவிடும். சதிக்கோட்பாடு என்பது சனிக்கிழமை நடைபெற்ற சம்பவம். அது கிட்டத்தட்ட வியாழக்கிழமை வரை ஓடியது. வெள்ளிக் கிழமை நீதிமன்றத்தில் வாதாடுகிறபோது தவெக வழக்கறிஞர்களே அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு மீதான விசாரணையில் இது ஒரு விபத்துதான். இதற்கு எதற்கு ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியே நிறைய கேள்விகளை கேட்டு, எஸ்.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார். ஒரே நேரத்தில் குற்ற விவசாரணை மற்றும் அருணா ஜெகதீசனின் உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்துகிறது. அருணா ஜெகதீசன் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது. அதேவேளையில் எஸ்.ஐ.டியால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும். நீதிமன்றத்திற்கு அவர்கள் அறிக்கை தாக்கல் செய்யப் போகிறார்கள். அப்போது அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக எஸ்.ஐ.டியின் விசாரணை அறிக்கை வந்துவிடும். தேர்தல் என்பது மிகவும் பின்னால் உள்ளது. 1991ல் அதிமுக, காங்கிரஸ் சதி கோட்பாட்டை முன்வைத்தபோது அதை திமுக வலிமையாக எதிர்கொள்ளவில்லை. அப்போது திமுக ஆட்சியிலும் இல்லை. ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. தேர்தல் மிகவும் பின்னால் உள்ளது. எனவே சதிக் கோட்பாடு தேர்தலில் பிரதிபலிக்காது.
கருர் சம்பவத்தை தொடர்ந்து விஜய், இனிமேல் கட்சியை பலப்படுத்தப் போகிறார். அவருக்கு கால அவகாசம் உள்ளது. ஆனால் அவர் இனிமேல் இதுபோன்ற கூட்டங்களை எங்கேயும் போட முடியாது. அவரால் மற்றவர்களுக்கும் கூட்டம் போட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி போன்றவர்களின் பிரச்சாரங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது. நடிகர்கள் வரும்போது மக்கள் பார்க்கத்தான் செய்வார்கள். ஆனால் விஜய் அடுத்த முறை வரும்போது எச்சரிக்கையோடு தான் வருவார்கள். அரசாங்கம் அதை எப்படி தடுக்க நினைக்கிறது என்றால் இனிமேல் அரசியல் கட்சிகள் ஊருக்குள் கூட்டம் போடக்கூடாது. வெளியில் போடுங்கள் என்று சொல்கிறது. கரூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தள்ளி கூட்டத்தை போட்டால் யாருக்கு கூட்டம் வருகிறது என்று தெரியும்.
40 பேர் இறந்துவிட்டதால் விஜய்க்கு பாப்புலாரிட்டி கூடிவிட்டது. அதனால் நாங்கள் விஜயுடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்று பாஜக சொல்கிறது. விஜய்க்கு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ளது. அவருக்கு கட்சி தொடங்கவும், அரசியலுக்கு வரவும் உரிமை இருக்கிறது. அந்த கட்சியை கூட்டணிக்குள் இழுத்துக்கொண்டால் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் எல்லாம் அதிமுக – பாஜக கூட்டணிக்கு வரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒரு பெரிய வருத்தத்திற்கு உரிய சம்பவம் நடைபெற்ற பிறகு அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது. ஆனால் இன்னமும் நாம் அந்த நாகரிக அரசியலுக்கு செல்லவில்லை என்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.