விஜய், ஒரு போதும் என்டிஏ கூட்டணியில் சேர மாட்டார் என்றும், அப்படி சேர்ந்தால் சிறுபான்மை சமுதாய வாக்குகள் அவருக்கு கிடைக்காது என்றும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.


த.வெ.க. கூட்டணி திட்டங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதலமைச்சர் வேட்பாளராகவும், எடப்பாடி, விஜய் ஆகியோர் துணை முதலமைச்சர் ஆகவும் தேர்வு செய்யப் படுவார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். தனக்கு நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த கருத்தை தெரிவித்திருப்பார். அப்படியான ஒரு திட்டம் பாஜகவிடம் இருக்கலாம். ஆனால், எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை அந்த திட்டம் அவர்களுக்கு கிடையாது. காரணம் அதிமுக – பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு, கூட்டணியை பலப்படுத்துவது என்று பல்வேறு கட்டங்கள் தாண்டி போய்விட்டது. எனவே தற்போதுள்ள செயல்பாடுகளை மாற்ற மாட்டார்கள்.
நிர்மலா சீதாராமன், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்தபோது ஐ.எம்.எப்., உலக வங்கி விதிக்கும் அஜெண்டாவை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டினார். அதன் காரணமாகவே அவருக்கு நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. எனவே அவரை மாநில அரசியலுக்கு கொண்டுவரும் திட்டம் இருக்காது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நயினார், அண்ணாமலையை போன்றவர்களை மையமாக கொண்டுதான் செயல்படுவார்கள். அதில் மாற்ற மாட்டார்கள்.

அதிமுக – பாஜக கூட்டணியை வைத்துக்கொண்டு திமுகவை வீழ்த்த முடியாது. அதை அறிந்ததால் தான் அமித்ஷா, அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டும் என்று எடப்பாடியிடம் வலியுறுத்தினார். ஆனால் அவர் கேட்கவில்லை. அதனால் என்டிஏவை வலிமைப்படுத்துகிற வேலையை அண்ணாமலையிடம் கொடுத்திருக்கிறார். என்டிஏ கூட்டணியை பலவீனப்படுத்துகிற எண்ணம் அமித்ஷாவுக்கு கிடையாது. பாஜக தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட்டு வருவதால் தான் கட்சி வலிமையாக உள்ளது. விஜய், என்டிஏ கூட்டணிக்குள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
காரணம் அவர் பாஜகவை கொள்கை எதிரியாக அடையாளப்படுத்திவிட்டார். மேலும் பாஜக உடன் சேர்ந்தால், விஜய்க்கு இயல்பாக இருக்கும் சிறுபான்மை மக்களின் ஆதரவு போய்விடும். எனவே அதை விஜய் செய்ய மாட்டார். விஜய்க்கு இருந்த மக்கள் செல்வாக்கு கரூர் சம்பவத்தின்போதே போய்விட்டது. தற்போது பாஜக உடன் சென்றால் அது மொத்தமாக போய்விடும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணிக்கு விஜய் சென்றால் அவருக்கு லாபம் கிடையாது. மற்றொன்று அவருடைய அடையாளமே அடிபட்டு போய்விடும். அதன் காரணமாகவே விஜய் இவ்வளவு நாட்களாக அமைதியாக இருக்கிறார்.

பாஜக இல்லாத அதிமுக உடன் விஜய் கூட்டணி அமைக்கலாம். அது அதிமுகவுக்கு சாதகம். விஜய்க்கு பாதகமாகும். விஜய் வந்துவிட்டாலே, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு நிகரான வாக்குகள் வந்துவிடும். ஓபிஎஸ், டிடிவி என யார் போனாலும் விஜயை வைத்து சமாளித்து விடுவார்கள். அதை தான் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கூர்மைப்படுத்தி வருகிறார். ஆர்.பி.உதயகுமார், விஜய் அதிமுக கூட்டணிக்கு வராவிட்டால் அவரை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொல்கிறார். ஆனால் விஜய் வராவிட்டால் உண்மையில் அவர்களை தான் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. விஜய் கூட்டணிக்கு வந்தால் இருவருக்கும் கெயின்.
அதிமுக – தவெக கூட்டணி உறுதியாகிவிடும். எடப்பாடி பழனிசாமி அரசியலில் ஒரு ஹெவி வெயிட். விஜயை உள்ளே இழுப்பதற்கான வழிகளில் தான் அவர் பயணிப்பார். விஜய், அதிமுக கூட்டணிக்கு வந்துவிட்டால் வடதமிழ்நாட்டை அதிமுக கைப்பற்றி விடும். தென் தமிழகத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம். இதை செய்துவிட்டால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என நினைக்கிறார். விக்கிரவாண்டி மாநாட்டிற்கு முன்பு இருந்தே அதிமுக, தவெக கூட்டணி பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது. ரகசியமாக வைத்திருந்ததை விஜய் என்னிடம் சொன்னார். அதை நான் பொதுவெளியில் சொல்லிவிட்டேன்.

அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்துவிட்டால் ஒரு பெரிய அழுத்தமாகும். எடப்பாடி எதுவுமே இல்லாமல் 150 இடங்களை தொட்டிருக்கிறார். திமுக அரசின் குறைகளை ஒவ்வொரு இடமாக எடப்பாடி பழனிசாமி அடித்துக் கொண்டிருக்கிறார். என்னை பொருத்தவரை எடப்பாடி பழனிசாமி சரியான அரசியல் செய்கிறார். தவெகவுக்கு, பாஜக என்கிற நெருடல் உள்ளது. ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் பாஜக உடன் சேர்ந்தால் விஜய்க்கு வாக்கு கிடைக்காது என்பது தெரிந்துவிட்டது.
தமிழ்நாட்டின் அரசியல் சைக்காலஜி என்பது பாஜக எதிர்ப்பு மற்றும் மதவாத எதிர்ப்பாகும். மதவாதத்தை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது. விஜய், தமிழ்தேசியம், மதச்சார்பின்மை பாதையில் தான் தனது பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு கட்சியினரை அரசியல்மயப் படுத்துவதற்கு பதிலாக, வியூக அரசியலுக்கு மாறிவிட்டார். அதில் ஏற்பட்ட பின்னடைவுதான் கரூர் வரைக்கும் ஏற்பட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


