அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட அளவில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 
இந்திய தேர்தல் ஆணையம், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டனர். அதில், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும் நிலையில், 12 மாநிலங்களிலும் நவம்பர் 4-ம் தேதி முதல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு துவங்க உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் எனவும், சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்படுவதோடு, வாக்காளர்களை உறுதி செய்ய 3 முறை தேர்தல் அதிகாரிகள் வீடுகளுக்கு செல்லும் நடைமுறை, மாவட்ட அளவில் அரசியல் கட்சி பிரதிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அதேபோல், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட இந்திய தேர்தல் ஆணையர் சிறப்பு திருத்த பணிகள் எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி பல்வேறு விளக்கங்களை அளித்தார். மேலும் தகுதியுடைய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது மற்றும் தகுதி இல்லாத வாக்காளர்களை எப்படி கண்டறிவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. திருத்த பணியின் போது ஆதார் அட்டையை ஒரு அடையாள ஆவணமாக மட்டுமே ஏற்க வேண்டும் என்றும், குடியுரிமை மற்றும் பிறந்த தேதிக்கான சான்றாக ஏற்கப்படக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
‘தலைவர் 173’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?…. வெளியான புதிய தகவல்!


