பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வது தொடர்பான புதிய அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் ஒரே நேரத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக 12 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது.
அதில், பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை திருப்பி அளிக்காத வாக்காளர் தொடர்பான விவரங்கள் மற்றும் அதற்கான காரணத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆய்வு செய்து அந்த பட்டியலை சம்பந்தபட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுக்குமான பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பெறும் போது வாக்காளர்களிடம் இருந்து எந்த வித ஆவணங்களையும் பெறக் கூடாது எனவும், தேர்தல் ஆணையம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தான் சம்பந்தபட்ட வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு விடாக செல்லும் போது பெயர் சேர்க்கும் விண்ணப்பமான படிவம் ‘6-ஐ’ கொண்டு செல்ல வேண்டும் என்றம், புதிய வாக்காளர்கள் கேட்பின் அந்தப் படிவத்தை வழங்கி, விண்ணப்பம் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகியவற்றை தகுதியேற்பு நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இத்தேதிகளின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்க்கை மற்றும் திருத்த விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



