குரு மித்ரேஷிவா
கேள்வி: குரு, வெறும் பணத்தால் பயனில்லை என்று சொல்லிவிட்டீர்கள். செல்வம் என்றால் என்ன? பணம் மட்டுமே செல்வம் இல்லையென்றால் வேறு எவை செல்வம்?

நம் சமுதாயத்தில் ஒரு வழக்கம் உண்டு. யாராவது கால்களில் விழுந்தால், ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவார்கள். அதென்ன பதினாறு? பலருக்கும் அதன் அர்த்தம் புரிவதில்லை. சிலர் பணம் என்று நினைத்து நிறைய பணத்தைச் சேகரித்துக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலரோ பதினாறு என்பது குழந்தைகளைக் குறிப்பதாக நினைத்து பெற்றுக்கொண்டே இருப்பார்கள்.
உண்மையில் செல்வம் என்பது பணம் மட்டுமில்லை. ஆரோக்கியம், தைரியம், அதிகாரம், சக்தி,புகழ்,ஆனந்தம், அன்பு, ஞானம் இப்படி நிறைய செல்வங்கள் இருக்கின்றன. ஒரு மனிதனுக்கு, செல்வம் கிடைக்கட்டும் என்று வாழ்த்தும்போது பணத்தை மட்டும் குறிப்பிட்டு யாரும் வாழ்த்துவதில்லை. சகல செல்வத்தையும் உத்தேசித்தே வாழ்த்துகிறார்கள்.
இன்னும் சரியாகச் சொன்னால் பணத்தை சம்பாதித்துக் கொடுக்கக்கூடிய திறன்தான் நிஜமான செல்வம்.
ஒரு விளையாட்டு வீரர் இருக்கிறார். அவருக்குக் கோடி கணக்கில் பணம் குவிகிறது. இதில் செல்வம் என்பது பணம் இல்லை. அவரின் திறமை. விளையாட்டு என்ற திறனை இறைவன் கொடுத்திருக்கிறார். அந்தத் திறனை வைத்து அவர் பல கோடி சம்பாதிக்கிறார்.
ஒரு இசையமைப்பாளருக்கு இசை என்னும் ஞானத்தைக் கொடுத்திருக்கிறார். அதை வைத்து அவருக்கு நிறைய செல்வம், புகழ் வருகிறது.
இன்னொருவருக்கு தொழில் செய்யக்கூடிய திறன் இருக்கிறது. அவர் அதைக்கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
இப்படி ஒவ்வொருவருக்கும் விதம் விதமான திறன்களை இயற்கை அளித்திருக்கிறது. இந்தத் திறன்களை ஒருவருக்குக் கொடுப்பதற்கு என்ன காரணம்?
சற்று முன்புதானே அதை வைத்து பணம், பேர், புகழ் சம்பாத்திக்கலாம் என்று சொன்னீர்கள். திரும்பவும் அதே கேள்வியைக் கேட்கிறீர்களே என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாக, திறனைக் கொண்டு அவை அனைத்தையும் சம்பாதிக்கலாம். அதில் சந்தேகமே வேண்டாம் உங்களுக்கு.
ஆனால் அந்தத் திறனை, திறனால் பெற்ற செல்வத்தைக் கொண்டு என்ன செய்கிறீர்கள் என்பதற்கான நோக்கம் இயற்கையின் சட்டத்திற்குள் இருக்கவேண்டும் என்கிறேன்.
தன் திறன் கொண்டு பணம் சம்பாதித்து தனக்கு மட்டும் வைத்துக்கொள்வதற்காகவா இயற்கை ஒருவருக்குத் திறனை வழங்குகிறது? நிச்சயமாக இல்லை. கிடைத்த செல்வத்தில் தனக்குத் தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவை அனைத்தையும் சிருஷ்டியைக் காப்பாற்றுவதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஒருவருக்கு திறன் வழங்கப்பட்டிருக்கிறது. இது தான் இயற்கையின் சட்டம்.
ஆயிரம் கோடி இருக்கிறது என்பதற்காக அதை என்னால் சாப்பிட முடியாது. காலையில் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிட்டால் ஒன்று கொல்லைப்புறத்திற்கு ஓவேண்டும். இல்லையென்றால், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஆயிரம் கோடியை வைத்து நான் என்ன செய்ய முடியும்.

பணம்தான் நிறைய இருக்கிறதே என்பதற்காக ஆயிரம் ஏக்கரில் நூறு ஏசி போட்டுக்கொண்டா படுக்க முடியும். மிஞ்சிப்போனால் ஒரு அறையில் ஏசி வைத்துப் படுத்துக்கொள்ளலாம். ஒரு கார் வாங்கலாம். இன்னும் இரண்டுதான் இருக்கட்டுமே. அதில் என்ன தவறு என்ற எண்ணத்தில் நான்கு கார்கள் வரை வாங்கி சந்தோசப்பட்டுக்கொள்ளலாம். தேவையே இல்லாமல் நாலாயிரம் கார் வாங்கி வைத்துக்கொண்டு என்ன செய்வது?
அளவுக்கு அதிகமான செல்வம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதுவும் தர்மப்படி உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் மிகவும் நல்லதுதான். ஆனால் அது பெருக வேண்டும் என்றால் செலவளித்தே ஆகவேண் டும்.
இது என்ன புதுக்கதையாக இருக்கிறது. செலவளித்தால் எப்படி செல்வம் பெருகும்? சேர்த்து வைத்தால் தானே செல்வம் பெருகும் என்கிறீர்களா?
முன்பே கூறியது போல செலவின் நோக்கம்தான் செல்வத்தைப் பெருக்குகிறது. அதை வைத்திருக்கும் தகுதியை ஒருவருக்கு அளிக்கிறது.
அப்படியென்றால் என்னிடம் இருக்கும் திறனை, செல்வத்தை எப்படிச் செலவளித்துப் பெருக்குவது என்று கேட்கிறீர்களா?
உங்கள் செல்வத்தை வைத்து இந்த சிருஷ்டியைக் காப்பாற்ற வேண்டும். இந்த சிருஷ்டிக்கு என்ன நல்லது செய்யமுடியுமோ அதைச் செய்யவேண்டும்.
மாதக் கடைசி. பழனிச்சாமியிடம் கையில் வெறும் பத்து ரூபாய்தான் இருந்தது. இரவு உணவிற்கு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே தெருவில் நடந்து சென்றான் முருகேசன் அண்ணாச்சி கடையைக் கடக்கும்போது அண்ணாச்சி யாரையோ திட்டுவதைக் கேட்டு நின்றவன் என்னவென்று பார்த்தான். அண்ணாச்சி ஒரு பிச்சைக்காரனை விரட்டிக்கொண்டிருந்தார் .
அவனைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது பழனிச்சாமிக்கு. உடனே தன் பையில் இருந்த பத்து ரூபாயை எடுத்து பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டான்.
தண்ணீரைக் குடித்துவிட்டு தூங்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே பழனிச்சாமியின் நண்பன் ஜான்பால் வீட்டுக் கதவைத் தட்டினான். கையில் பிரியாணி பார்சலோடு.
பழனிச்சாமி பிச்சைக்காரனுக்கு பத்து ரூபாயைப் போடும்போது எதிரே இருந்த முனியாண்டி விலாஸ் வாசலில் சாப்பிட்டு கைகழுவிக்கொண்டிருந்த ஜான்பாலுக்கு நண்பனை பிரியாணியுடன் சென்று ஆச்சர்யப் படுத்தவேண்டுமென்று தோன்றியிருக்கிறது. இதுதான் இயற்கையின் விளையாட்டு.
சிருஷ்டிக்குச் செலவளிப்பது தானமில்லை. உங்களுக்கு நீங்களே செய்துகொள்கிறீர்கள். எதையுமே நீங்கள் தானமாகக் கொடுக்க முடியாது. ஏன் என்றால் நீங்கள் இங்கே புதியதாக எதையும் உருவாக்கிவிடவில்லை. இங்கு எல்லாமே உங்களைச் சார்ந்து தான் நடக்கிறது.

சிருஷ்டியில் கிடைக்கும் எதையெடுத்து எந்த உயிருக்குக் கொடுத்தாலும், அது சிருஷ்டிக்கே செய்வது. தனக்குச் செய்தவனுக்கு அதைவிட பல மடங்கு திரும்பக்கிடைக்கச் செய்வதே சிருஷ்டியில் உங்களிடம் ஆயிரம் கோடி இருக்கிறதென வைத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு பத்து கோடி, சரி போனால் போகட்டும் ஒரு நூறு கோடியை உங்களுக்கென்று வைத்துக்கொள்ளுங்கள்.
மீதமிருக்கும் தொள்ளாயிரம் கோடியை இந்த சிருஷ்டியைக் காப்பாற்றுவதற்காகச் செலவிடுங்கள். அப்படிச் செய்த அடுத்த நொடி ஆயிரம் கோடி ஐயாயிரம் கோடியாக உங்களிடம் திரும்பி வரும். கேட்க அருணாசலம் திரைப்படம் மாதிரி இருக்கிறதல்லவா? செய்து பாருங்கள். திகைத்துப்போய் என்னைப் பார்க்க ஓடி வருவீர்கள்.
காரணம் எளிது, நீங்கள் இயற்கையோடு ஒத்திசைந்து செயல்படுகிறீர்கள்.
ஆஹா, ஐயாயிரம் கோடி வந்துவிட்டதே. கொஞ்சம் சேர்த்து வைத்துக்கொண்டால் என்ன தவறு என்று நினைத்து எட்டு, பத்து தலைமுறைக்கு அதை சேர்த்து வைக்கக் கூடாது. இந்த ஐயாயிரம் கோடியில் உங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு மீண்டும் சிருஷ்டியைக் காப்பாற்ற செலவிட வேண்டும். அப்போது பத்தாயிரம் கோடியாக திரும்பி வரும். அப்படித்தான் உலக கோடீஸ்வரர்கள் உருவானார்கள். உருவாக முடியும்.
இது செல்வத்திற்கு மட்டுமில்லை. எந்தவொரு விஷயமாக இருந்தாலும் சரி. இதுதான் கேம் ரூல்.
எனக்கு ஞானம் வந்துவிட்டது. நான் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா?
இந்த ஞானத்தை இயற்கை ஒருவருக்கு எதற்காகக் கொடுக்கிறது ? அதை வைத்து முதலில் உன்னைக் காப்பாற்றிக்கொள். அதன் பிறகு இந்த சிருஷ்டியில் இருக்கக்கூடிய அத்தனை உயிர்களுக்கும் கொடுத்து அவற்றைக் காப்பாற்று என்பதற்காக.
அளவுக்கு அதிகமாக செல்வம் இருக்கிறது என்றால் அந்தச் செல்வத்தைக் கொடுத்து அடுத்தவரை உயர்த்த வேண்டும் என்று நினைக்கின்ற போதுதான் அந்த செல்வத்தின் சொத்தை ஒருவர் அனுபவிக்கவே முடியும். அதனுடைய பலன் அப்போதுதான் வந்து சேரும்.
எனக்கு வேண்டும் என்று எதை எடுத்து வைத்துக் கொண்டாலும் அது வெறுமேதான் இருக்குமே தவிர அனுபவிக்க முடியாது.
அதனால், எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு மீதம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுங்கள் இல்லை, உங்களால் அதைச் செய்ய முடியவில்லை என்றால் நன்றாக இதைச் செய்யக்கூடிய நபரிடமோ, நிறுவனத்திடமோ அல்லது அமைப்பிடமோ ஒப்படைத் துவிடுங்கள்.
எதுவாக இருந்தாலும் அது சிருஷ்டியைக் காப்பாற்றக் கூடிய செயலாக இருக்கவேண்டும் என்பதை மட்டும் உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
இதைச் செய்தால் இதுவே உங்களுக்குப் பெரிய சொத்தாக மாறும். உங்கள் சொத்து பெருகிக்கொண்டே போகும். பெருகப் பெருகக் கொடுத்துக்கொண்டே இருங்கள். கொடுக்கக் கொடுக்கப் பெருகிக்கொண்டே இருக்கும். இதுதான் இயற்கையின் சட்டம்.
உங்களுக்கு இன்னும் ஒரு உதாரணம் கொடுத்தால் உடனே புரிந்துகொள்வீர்கள். மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவைப் பற்றி பத்திரிகைகளில் வாசித்திருப்பீர்கள். டிவியில் பார்த்திருப்பீர்கள். நடிகர்கள், முதல்வர், பிரதமர் துவங்கி ஐக்கிய நாடுகள் சபை வரை நேத்ராவைப் பாராட்டித் தீர்க்கிறார்கள். என்னசெய்தாள் அந்தச் சின்னப் பெண். அப்பா சலூன் கடைக்காரர் மகளை ஐ.ஏ.எஸ் ஆக்கும் கனவிற்காக குருவி சேர்ப்பது போல ஐந்து லட்சம் ரூபாயை சேர்த்து வைத்திருந்தார். கொரோனா வந்தது. நாடடங்கு, ஊரடங்கு, வீட்டங்கு. எங்கும் தொழில்களின் வீழ்ச்சி, வேலை யின்மை, வறுமை, பசியின் அலறல். நேத்ரா பார்த்தார்.
அத்தனை பணத்தையும் எடுத்து வறியோர்க்குச் செல வழித்தார். அச்சச்சோ ஐ.ஏ.எஸ் ஆவது? அது அப்புறம். முதலில் கண்ணுக்கு முன்னே நிற்கும் பசியைப் போக்குவோம் என்றார். கையிருப்பு முழுக்கக் கரைந்தது. கலங்கவில்லை. மீண்டும் மீண்டும் ஓடி ஓடி உதவினார்.
இன்று பாருங்கள். உலகமே நேத்ராவை விரும்புகிறது. சமூகத்தின் அத்தனை ஊடகங்களும் பாராட்டிவிட்டன. அத்தனை பெரிய மனிதர்களும் நேத்ராவை வானளாவப் புகழ்கிறார்கள். திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியலாளர்கள் புகழ்மாலை சூட்டினர். பலர் நேத்ராவை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து மகிழ்ந்தனர். முதல்வர் அவரது படிப்புச் செலவை அரசு ஏற்கும் என்று அறிவித்தார். பிரதமர் பாராட்டினார்.
உச்சகட்டமாக ஐ. நா. நல்லெண்ணத் தூதர் அங்கீகாரமும் கிடைத்தது. இதுவெல்லாம் கிடைக்கும் என்பதற்காக அவர் ஐந்து லட்சத்தைச் செலவிடவில்லை. ஆனால், அவரது சிருஷ்டி திரும்பக் கொடுத்தவற்றை ஒருவரால் ஐயாயிரம் கோடி செலவு செய்தாலும் பெற முடியாது. பல லட்சக்கணக்கானவர்களின் மானசீக அன்பு நேத்ராவிற்குக் கிடைத்திருக்கிறதே. அது விலைமதிப்பில்லாதது. ஒருவேளை அந்த ஐந்து லட்சத்தைக் கொண்டு நேத்ரா ஐ.ஏ.எஸ் ஆகியிருந்தால்கூட இப்போது கிடைத்தவை அனைத்தும் அவருக்குக் கிடைத்திருக்கும் என்று சொல்ல முடியாது.
ஆக, இதுதான் சிருஷ்டியின் விதி. சட்டம் இந்த சட்டத்திற்குள் செயல்பட்டால் அத்தனை செல்வமும் வந்து சேரும். இல்லையென்றால் பணம் மட்டுமே இருக்கும். நேரம் இருக்காது. ஆரோக்கியம் இருக்காது. வீட்டில் நிம்மதி இருக்காது.ஏதோ ஒரு வழியில் உங்களை வருத்தி எடுத்து எதையும் அனுபவிக்க விடாது.
“பண வாசம்”- சம்பாத்தியத்தில் எவ்வளவு தானமாக வழங்க வேண்டும்? – குரு மித்ரேஷிவா


