செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி சந்திப்பின் பின்னணியில் அண்ணாமலையின் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- 2016ல் சசிகலா பெங்களுரு சிறைக்கு செல்கிறபோது எடப்பாடிக்கு முதலமைச்சர் பதவி தரப்பட்டது. அதற்கு முன் செங்கோட்டையனுக்கு முதலமைச்சர் வாய்ப்பு தரப்பட்டது. அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். அதற்கு பணக் காரணம் முக்கிய பிரச்சினையாகும். எடப்பாடி பழனிசாமி, பண காரணத்தை சரிசெய்தார். அவருக்கு பின்னால் இருந்த பெரிய லாபி, அவருக்காக நிதியுதவி செய்தது. அப்படிதான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகினார். 2016ல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், தன்னுடைய பலத்தை நிரூபித்து வென்றார் என்று சொல்லலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. செங்கோட்டையன் 25 வயதில் அதிமுகவில் இணைந்தார். எம்ஜிஆர் மறைவின்போது முதலமைச்சர் ஜானகி உடன் ஆர்.எம்.வீரப்பன் போன்ற மூத்த தலைவர்கள் இருந்தனர். ஜெயலலிதாவின் பக்கம் செங்கோட்டையன், திருநாவுக்கரசர் போன்றவர்கள் இருந்தனர். அந்த சமயத்தில் ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்களை பேருந்தில் ஏற்றி ஊர் ஊராக சென்றவர் செங்கோட்டையன்.

1975-ல் கோவை பொதுக்குழுவில் அதிமுகவின் பெயரை அகில இந்திய அதிமுக என்று எம்ஜிஆர் பெயர் மாற்றம் செய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை செழியன், புலவர் இந்திரகுமாரி போன்றவர்கள் அதிமுகவில் இருந்து வெளியேறினார்கள். 1977 சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் வெற்றி பெற்றதும் அவர்கள் இருவரையும் அழைத்து பொறுப்பு கொடுத்தார். அதற்கு காரணம் நாம் கட்சியின் அசைக்க முடியாத தலைவர். நாம் என்ன முடிவு எடுத்தாலும் கட்சி நம் பின்னால் இருக்கும் என்கிற எண்ணம்தான். அப்படியான ஒரு நம்பிக்கை எடப்பாடிக்கு இருந்திருந்தால் அவர் செங்கோட்டையனை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. செங்கோட்டையனுக்கு உள்நோக்கமே இருந்தாலும், டிடிவி, ஓபிஎஸ்-ஐ சந்தித்ததற்காக அவரை துரோகி என்று எப்படி பட்டம் கட்ட முடியும்? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பலத்த தோல்வியை சந்தித்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் அதிமுக எப்போதும் தலையிட்டு கொண்டுதான் இருந்தது.

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி சந்திப்பின் பின்னணியில் அண்ணாமலை இருக்கிறாரா? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதிமுக தலைவர்கள் தன்னை சீண்டுவதாகவும், அமித்ஷாவுக்காக பொறுத்து போவதாகவும் அண்ணாமலை சொல்கிறார். அவரை யார் சீண்டினார்கள் என்று தெரியவில்லை. அப்படி சீண்டினால் அண்ணாமலைக்கு பலம் இல்லை என்றுதானே அர்த்தம். அப்போது அவர் வெளியே போய் தனிக்கட்சி தொடங்கத்தான் செய்வார். தனிக்கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு ஆம் என்றோ, இல்லை என்றோ அவர் பதில் அளிக்கவில்லை. மாறாக அது நான் பொறுத்திருந்து செய்ய வேண்டிய முடிவு என்கிறார். அண்ணாமலைக்கு ஒரு அறிமுகம் இருக்கிறது. அவருக்கு ரசிகர் மன்றம் எல்லாம் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கும். அவற்றை வைத்துக்கொண்டு அண்ணாமலை தன்னுடைய அரசியலை உயர்த்த வேண்டும் என்றால் அதற்கு பாஜகவின் ஒப்புதல் தேவையாகும். அண்ணாமலை இன்றைக்கு கட்சியில் எந்த பதவியிலும் இல்லை. அவருக்கு 2 வாய்ப்புகள் தான் இருந்தன. அதில் தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பு ஒன்று. அதற்கு போக வேண்டும் என்று அண்ணாமலை நினைக்கிறார்.

நான் 2009ல் பாஜகவுக்காக வேலை பார்த்திருக்கிறேன். மிகவும் சிக்கனமாக இருந்த கட்சி, அண்ணாமலைக்காக பல நூறு கோடிகளை செலவு செய்தது. அவர் தன்னுடைய நண்பர்கள் செலவில் வசிப்பதாக சொன்னார். ஆனால் தற்போது கோவையில் வீடு கட்டியிருக்கிறார். நிலம் வாங்கியுள்ளார். தனக்கு பாஜக வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் விவசாயி ஆக போய்விடுவேன் என்று சொல்கிறார். அண்ணாமலையின் கருத்துக்களை எல்லாம் பாஜக சவாலாக தான் நினைக்கும். காரணம் எனக்கு பாஜக, ஆர்எஸ்எஸ்காரர்களை நன்றாக தெரியும். அவர்களின் பாணி வேறு. அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கி வரட்டும் என்று ஒரு குழு நினைக்கிறது. அது அண்ணாமலைக்கு ஆதரவாக சொல்வது போல சொல்லி அவரை தெருவுக்கு இழுத்துவிட பார்க்கிறார்கள். அண்ணாமலையின் அனுபவமே 4 வருடங்கள்தான். அதற்குள்ளாக உங்களை தேசிய பொதுச்செயலாளர் ஆக்கி விடுவார்களா? அப்படி பார்க்கும்போது ஏதோ ஒரு வகையில் அவருக்கு அதிமுக பிரச்சினையில் தொடர்பு இருக்கிறது. ஆனால் இல்லை என்று மறுக்கிறார். தற்போது இதை சொல்வதன் வாயிலாக தனக்கான முக்கியத்துவத்தை பெற வேண்டும் என்று நினைக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


