
பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரி திமுக எம்.பி. மணியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் ( எஸ்.ஐ.ஆர்) என்ற பெயரில் வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் விவகாரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பீகாரில் எஸ்.ஐ.ஆர் கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது தமிழகம் தான். முக்கியமான தீர்மானம் ஒன்றையும், நேற்றைய கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறோம்.
தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் தந்திர முயற்சி மேற்கொள்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்கிற பெயரில் தீய செயலை தேர்தல் ஆணையம் செய்கிறது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. பாஜகவுக்கு பயந்து எஸ்.ஐ.ஆர் நடைமுறையை எடப்பாடி பழனிசாமி எதிர்க்க மறுத்து இரட்டை வேடம் போடுகிறார். பாஜகவின் பாதம் தாங்கி பழனிசாமி என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.
பீகாரில் பேசிய கருத்தை பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பேச முடியுமா? தைரியம் இருக்கிறதா? வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்கு எதிராக பீகாரில் பிரதமர் தனது பேச்சின் மூலம் வன்மத்தை காட்டியுள்ளார். தமிழகத்தில் திமுகவின் 2.0 ஆட்சி அமைந்தது என்பது தான் தேர்தல் முடிவு வெளியாகும் நாளின் தலைப்புச் செய்தி” என்று கூறினார்.


