லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதைத்தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களையும் இயக்கி வெற்றி கண்டார். ஆனால் கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. லோகேஷ் கனகராஜை பலரும் ட்ரோல் செய்து வந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ஹீரோவாகவும் உருவெடுத்துள்ளார் லோகேஷ். அதன்படி ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. அடுத்தது கேங்ஸ்டர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து வாமிகா கபி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் இந்த படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படம் 2026 மார்ச் மாதத்தில் திரைக்கு வரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.


