கேரளாவில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 4-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் கேரளாவில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை உடனடியாக நிறுத்த கோரி கேரளா அரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் நிர்வாக ரீதியாக பெரும் குழப்பத்தையும் பனிச் சுமையையும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவடையும் வரை எஸ்.ஐ.ஆர் பணிகளின் நிறுத்தி வைக்க வேண்டும் என மனுவில் கோரிக்கையை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி முறையீடு செய்தார். ஆனால் மூத்த வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்பாக முறையீடு செய்யக்கூடாது எனும் முந்தைய உத்தரவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியதை தொடர்ந்து ஜூனியர் வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர். இதனை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 21-ம் தேதியன்று எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உறுதி அளித்துள்ளார்.



