திமுகவை எதிர்ப்பது, அவர்களுக்கு செல்கிற சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிப்பது ஆகியவை தான் விஜய்க்கு, பாஜக தற்போது கொடுத்திருக்கும் அஜெண்டா என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு குறித்த மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், தவெகவினரை தற்குறிகள் என்று விமர்சிப்பதை, திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதனே எதிர்ப்பதாக கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் எந்தவித வரலாற்று, அரசியல் புரிதல் இல்லாமல் பேசுபவர்களை சுட்டிக்காட்ட தான், தற்குறி என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் யாரையும் திமுக மேடைகளில் அப்படி பேசுவது கிடையாது என்று டி.கே.எஸ்.இளங்கோவனே விளக்கம் அளித்துள்ளார். எனவே எழிலன் நாகநாதன் பேசியது அவசியமற்றது. எதிரியின் கையில் அது ஆயுதமாக மாறிவிட்டது.
விஜய், ஜனநாயகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அஜித்துக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். அஜித் செல்கிற முடிவில் தான் இருக்கிறார். அத்துடன் ரஜினி, கமல்ஹாசன் ஆகியோருக்கும் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். கமல், அண்மையில் திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். முழுக்க முழுக்க திமுகவை எதிர்க்கும் விஜய், அவர்களுடைய கூட்டணியில் உள்ள கமலை அழைத்தால் அவர் எப்படி வருவார்? அப்படி அழைப்பதே தற்குறி தனம் தானே.

சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் இறுதி ரஷ் போட்டு பார்த்துள்ளனர். அதில் சில திருத்தங்களை விஜய் சொல்லியுள்ளார். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா, ஜனநாயகன் படத்தில் இடம்பெற்றுள்ள தவெக தொடர்பான அரசியல் காட்சிகளை 5 பத்திரிகையாளர்கள் பார்த்து அனுமதி வழங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதற்கு படத்தின் இயக்குநரான ஹெச். வினோத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் விஜய் கவனத்திற்கு சென்றுள்ளது. அப்போது 35 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் தனக்கு தெரியாதா, காட்சிகள் ஏன் இடம்பெற்றுள்ளது என்று. நீங்கள் என்ன படத்தை பார்த்து ஓகே சொல்வது? என்று ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக திட்டி அனுப்பியுள்ளார்.
ஒரு கட்சி தொடங்குபோது கொள்கை திட்டம் மற்றும் அமைப்புக்கான சட்ட விதிகள் இருக்க வேண்டும். ஆனால் விஜயிடம் எதுவும் கிடையாது. விஜய்க்கு, தன்னுடைய உருவ அமைப்பு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தபோது, தீவிர உழைப்பு காரணமாக சூப்பர் ஹீரோவாக தன்னை உயர்த்திக் கொண்டார். உதயநிதி போன்றவர்கள் துணை முதல்வர் ஆனது விஜய்க்கு பிடிக்கவில்லை. எனவே அரசியல் ரீதியாக அடையாளத்தை தேட வேண்டும். தான் பெரிய ஆளாக வளர்ந்துவிட்டதை தமிழ் சமூகத்திற்கு காட்ட வேண்டும் என்று விஜய் நினைக்கிறார்.

விஜய், ராகுல்காந்தி, பிரதமர் மோடி, அமித்ஷா, கே.சி.வேணுகோபால் போன்றவர்களுடன் தொடர்பில் உள்ளவர். சவுக்கு சங்கரின் மைத்துனரும், திமுக எதிர்ப்பு மனநிலை கொண்டவருமான சசிகாந்த் செந்தில் எம்.பி.யுடன் நெருக்கமாக உள்ளார். தலைவா படத்தின் வெளியீட்டின்போது ஏற்பட்ட பிரச்சினைக்கு விஜயுடன் நின்றது திமுக தான். ஆனால் அவர் திமுக உடன் போகவில்லை. ஜனநாயகன் திரைப்படம் தனது கடைசி திரைப்படம் என்று விஜய் நினைக்கிறார். எனவே ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். அதேவேளையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனிடம், வேள்பாரி கதையை கேட்டுக்கொண்டிருக்கிறார். ஷங்கரை வைத்து அந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
விஜயை பொருத்தவரை அரசியலில் அதிமுகவிடம் உள்ள இரண்டாம் இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அடுத்த போட்டி திமுக Vs தவெக என்று வர வேண்டும் என எண்ணுகிறார். வரும் டிசம்பர் 10, 11,12 ஆகிய தேதிகளில் அமித்ஷா தமிழகம் வருகிறார். அவர் பல்வேறு திட்டங்களோடு வருகிறார். அதிமுக தரப்பில், எடப்பாடி பழனிசாமி வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மாட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை தூக்கி போட்டாலும் போடுவார். சசிகலா தற்போது பாஜக உடன் நெருக்கமாக போய் கொண்டிருக்கிறார். எனவே அவருக்கு அதிகாரம் வழங்குவது போல அமித்ஷா எதாவது செய்வார்.

விஜயை, தங்கள் பக்கம் வந்துவிடுமாறு சொல்வார். விஜய் மீதும் வழக்குகள் உள்ளன. அதை வைத்து மிரட்டி கொண்டு வந்துவிடுவார்கள். காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மத்திய அரசு குறித்து எதுவுமே அவர் பேசவில்லை. அதேபோல் காங்கிரஸ், அதிமுக குறித்தும் அவர் பேசவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால், தமிழ்நாட்டில் அட்ரஸ் தெரியாமல் காணாமல் போய்விடும். காங்கிரஸ் இல்லாத சட்டமன்றத்தை அடுத்த தேர்தலில் அவர்கள் பார்க்க போகிறார்கள். விஜய்க்கு மிகவும் நெருக்கமான கிரிஷ் ஜுடங்கர் தலைமையில் காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு அமைத்துள்ளனர். அதற்கான அறிகுறிகள் தான் தற்போது தெரிகிறது.
திமுக தரப்பில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு செல்வதாக இருந்தால் செல்லலாம் என்று சொல்லிவிட்டனர். விஜய் திமுகவை எதிர்த்து பேச வேண்டும். சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பது பாஜகவின் தற்போதைய அஜெண்டாவாகும். எதிர்காலத்தில் இந்த அசைவுகள் எப்படி மாறும் என்பது, அமித்ஷா வருகை, கிரிஷ் ஜுடாங்கர் பேச்சுவார்த்தை, ராகுல்காந்தியின் அசைவுகள் ஆகியவற்றை பொருத்ததாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


