2026 ஆம் சட்டசபை தேர்தலில் வரலாறு படைக்க களத்தில் செயல்படுவதோடு எஸ்.ஐ.ஆர் பணிகளில் தங்களது வாக்குகளை உறுதி செய்ய வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக தெரிவித்தார்.


தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் கழக நிர்வாகிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மனிதநேய உதயநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் – இதயங்கள் இதயத்தை வணங்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நலத்திட்டம், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி, மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய மோட்டார் வாகனம் மற்றும் நலத்திட்ட உதவிகள், கருணை இல்லங்களுக்கு நலத்திட்டம், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், அங்கன்வாடி ஆசிரியர்கள் பணியாளர்களுக்கு நலத்திட்டம், செவிலியர்கள் மற்றும் திருநங்கையர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக பெரியார் திடலுக்குச் சென்ற உதயநிதிக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பெரியார் நினைவிடத்தில் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விழா மேடையில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், நான் யாரையும் வாழ்த்த வரவில்லை உங்கள் வாழ்த்தை பெற வந்து உள்ளேன், உங்களுக்கு எனது நன்றிகள் என கூறினார்.
மாநிலத்தில் 365 நாட்களும் நலத்திட்ட நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாட்டை அவர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியே ‘திராவிட மாடல் அரசு’ அனைத்து சமூகத்திற்கான அரசாக உள்ளது என்பதை நிரூபிப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் அம்மா அப்பாவை பார்ப்பதற்கு முன் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை முதலில் பார்க்க வந்துள்ளேன். இன்று நலதிட்டங்களை பெறுபவர்கள் நாளை இதே உதவியை மற்றவர்களுக்கு வழங்க அரசு துணை நிற்கும் எனக் கூறினாா்.
SIR பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வாக்குகளை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். வரவிருக்கும் 4 மாதங்கள் மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தினாா். இதே எழுச்சியோடு தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அவர் எனது பிறந்த நாள் வாழ்த்து செய்தியாக 200 வென்று வரலாறு படைப்போம் என கூறினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாற்றுத்திறனாளி சிறுவன் இனியவன் மேடையில் துணை முதலமைச்சருக்கு முத்தம் கொடுத்து அங்கு இருந்த அனைவரையும் உணர்ச்சி வசப்படுத்தினார்.


