தென்மாவட்டங்களில் இயங்கும் சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகப் புகார், விடுதிகளில் தங்கிப் பயிலும் ஏழை மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆயிரத்திற்கும் அதிகமான சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகவும், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வரும் நிலையில், வார இறுதி நாட்களில் உணவை சமைக்க மறுப்பதும், கட்டாயமாக வெளியேறச் சொல்வதும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றப்பட்டாலும் மாணவர்களுக்கான உரிமைகள், உதவிகள் மற்றும் சலுகைகள் தடையின்றி கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்த போதிலும், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவைக் கூட முறையாக வழங்க மறுப்பது ஆதிதிராவிடர் நலத்துறையின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, தென்மாவட்டங்களில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் சமூக நீதி விடுதிகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, அங்கு தங்கி கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி தினகரன் கூறியுள்ளாா்.



