நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்க பாஜக முயற்சித்த நிலையில், செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்து அவர்களின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.


செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததன் பின்னணி மற்றும் அமித்ஷாவின் அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- 1989ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின்னர், ராஜிவ்காந்தி மரணம் காரணமாக 1991-ல் ஆட்சி கலைக்கப்பட்டது. அப்படியான 1989 நிலைதான் 2026-ல் வரப் போகிறது. இத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு வந்த தேர்தல் 1989. சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று முறை தோற்ற திமுக ஒரு பக்கம் நின்றது. அதிமுக 3 அணிகளாக பிரிந்து போட்டியிட்டது. ஜானகி அணி, ஜெயலலிதா அணி. அதிமுகவில் இருந்து பிரிந்த நால்வர் அணி. காங்கிரஸ் அணி. இது தவிர்த்து நடிகர் சிவாஜி கணேசன், தனிக்கட்சி தொடங்கி, ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.
இத்தகைய தேர்தலில் திமுக அதிகளவு இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜானகி அணி, தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. ஜானகி அம்மாள், நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோர் தேர்தலில் தோற்றனர். அதேவேளையில் ஜெயலலிதா அணி, 26 இடங்களை பிடித்து எதிர்க்கட்சி தலைவராகினார். காங்கிரஸ் 24 இடங்களில் வெற்றி பெற்றது. அத்தகைய நிலை தான் 2026 தேர்தலில் வரப் போகிறது.

1989 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளும் கூட்டணிகள் அமைத்து மாறி மாறி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தனர். 1991ல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அதன் பிறகு ஜெயலலிதா ஆடிய தாண்டவத்தால் 1996-ல் ஆட்சி முடிவுக்கு வந்தது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி உருவாகி, அதன் காரணமாக அதிமுக வெற்றி பெற்றது.
இந்நிலையில், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இரு முனை போட்டி கிடையாது. விஜய்க்கு அதிகபட்சமாக 10 சதவீதம், சீமானுக்கு 8 – 10 சதவீதம் வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகள் என்பது அதிமுக, மற்றும் நடுநிலையாளர்களிடம் இருந்து பிரியும் வாக்குகள் தான். இப்படியான சூழல் நீடித்தால் 1989-ல் வெற்றி பெற்றது போன்று, திமுக கூட்டணி நிற்கும் இடங்களில் 90 சதவீதம் வரை வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதன் காரணமாக திமுக மௌனமாக இருக்கிறது.

நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் சிதருண்டு, ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வியை தருவார்கள் என்று சொல்லி இருந்தேன். அதேபோன்று அரசியல் கட்சிகள் மண்ணை போட்டுவிட்டனர். தற்போது அமித்ஷா வெளியே வரவே இல்லை. பீகார் வெற்றியை கூட அவர்களால் கொண்டாட முடியவில்லை. காரணம் அவர்கள் போட்ட திட்டம் என்பது செங்கோட்டையனை, அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக்க வேண்டும் என்பதாகும்.
எடப்பாடி பழனிசாமி கொடுத்த அழுத்தம் தாங்க முடியாமல் கட்சியில் இருந்து பிடிங்கிக்கொண்டு போய் விஜயுடன் செங்கோட்டையன் சேர்ந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி பலவீனமாகி, பலவீனமாகி கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெரும்பாகி விட்டார். இன்னும் பல தலைவர்கள் அங்கிருந்து செல்வார்கள். ஆர்.எம்.வீரப்பனின் பேரன், செந்தில் தியாகராஜன் ஆர்எஸ்எஸ் உடன் நெருக்கமாக உள்ளவர். அவர் செங்கோட்டையனை களத்தில் இறக்கிவிட்டு வேறு திட்டம் ஒன்றை போட்டார். நெல்லைக்கு அவரை அழைத்துச் சென்று வ.உ.சி சிலைக்கு மாலை போட வைத்தார். ஆனால் எடப்பாடி கொடுத்த அழுத்தம் தாங்காமல் செங்கோட்டையன் திடீரென தவெகவில் போய் சேர்ந்து விட்டார்.

செங்கோட்டையன் விவகாரத்தில் அமித்ஷா தப்புக் கணக்கு போட்டுவிட்டார். செங்கோட்டையனை, அதிமுக பொதுச் செயலாளர் ஆக்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டதால் அவர் எங்கும் செல்ல மாட்டார். நம்மை தேடி வருவார்கள் என்று நினைத்தார். ஆனால் தமிழ்நாடு அரசியல்வாதிகள், அமித்ஷாவுக்கு புதுப்புது பாடங்களை கற்பித்துக் கொண்டே இருப்பார்கள். கடந்த முறை அதிகாலை 2 மணி எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, ஒன்றுமில்லாமல் அனுப்பி விட்டார். இம்முறை செங்கோட்டையன் செய்துவிட்டார். அதற்கு காரணம் செங்கோட்டையன் களமிறங்கி பணிகளை செய்கிறபோது, அமித்ஷா தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களால் விரும்பப்படாத மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் ஆக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டனர். கட்சியை ஓரளவு வளர்த்த அண்ணாமலையையும் நீக்கி, பாஜக தன்னுடைய தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது. தற்போது செங்கோட்டையன் மண்ணை அள்ளிப் போட்டுள்ளார். இதனால் பாஜக என்ன அரசியல் செய்தாலும் தமிழ்நாட்டில் எடுபடாது என்பது உறுதியாகிவிட்டது.

1989- தேர்தலில் எம்ஜிஆர்-க்கு பிறகு முதலமைச்சர் ஆக ஆர்.எம்.வீரப்பன் தான் வர வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பிராமண லாபி தமிழ்நாட்டில் ஒரு பிராமணரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று ஜானகி அணிக்கு ஆதரவு அளித்து அவரை கொண்டுவந்தனர். மறுபுறம் பிராமணரான ஜெயலலிதாவை இன்னொரு அணிக்கு தலைமை தாங்க செய்தனர். தற்போது பிரமாண லாபி வேறு மாதிரியாக திட்டம் போட்டது. ஆனால் தற்போது கிறிஸ்தவ மிஷனரிகளின் கைகளில் தமிழ்நாடு எதிர்க்கட்சி போக போகிறது. தற்போது ஆர்எஸ்எஸ்க்கு பட்டை நாமம் போட்டுவிட்டனர்.
எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று அமித்ஷா கடைசியில் கவிழ்ந்து படுத்துவிட்டார். அவருக்கு மிகப்பெரிய அவமானம். வாழ் நாளில் மிகப்பெரிய தோல்வி. ஆர்எஸ்எஸ் தற்போது கொதித்து போய் உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஒட்டுமொத்தமாக காலியாகிவிட்டது. 40 இடங்கள் என்கிற அவர்களின் திட்டமெல்லாம் காலியாகிவிட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


