ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், இதற்காகவே அவர் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


ஓபிஎஸ் – அமித்ஷா சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திடீரென டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். வரும் டிச.10ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்புகள் உள்ளன. அவைத் தலைவராக உள்ள தமிழ்மகன் உசேனுக்கு 85 வயதாகிறது. முதுமை காரணமாக அவரால் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை. பொன்னையனை, அவைத் தலைவராக ஆக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டபோது அவர் சர்ச்சைக்குரிய நபராக உள்ளார்.
அதனால் ஓபிஎஸ்-ஐ அதிமுகவின் அவைத்தலைவராக ஆக்க வாய்ப்புகள் அதிகம். அதற்கான பேச்சுவார்த்தைக்காக டெல்லியில் இருந்து ஆடிட்டர் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஓபிஎஸ், ஆடிட்டர் குருமூர்த்தி, ரவீந்திரநாத் ஆகியோர் கோவையில் இருந்து கொச்சி சென்று, அங்கிருந்து சார்ட்டட் விமானத்தில் டெல்லிக்கு சென்றனர். மற்றொரு விமானத்தில் அண்ணாமலையும் டெல்லி சென்றதாகவும், அவர் ஏன் இங்கு வந்தார்? என்று விரட்டி அடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செங்கோட்டையனை, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்திக்க வைத்தவர்கள் அண்ணாமலை மற்றும் கே.டி.ராகவன் ஆகியோர் தான். முதலில் துக்ளக் ரமேஷ் மூலமாக கே.டி.ராகவன், நிர்மலா சீதாராமனையும், பின்னர் அமித்ஷாவையும் சந்திக்க வைத்தார். இரண்டாவது முறை சந்தித்தபோது புகைப்படம் இல்லாமல் பார்த்துக்கொண்டார். ஊழலுக்கும் செங்கோட்டையனுக்கும் பயங்கர தொடர்பு உள்ளன. கொடநாடு எஸ்டேட்டை கிரேக் ஜோன்ஸ் இடம் மிரட்டி வாங்கி கொடுத்தவர் அவர். சந்திரலேகா ஆசிட் வீச்சு சம்பவத்தில் மதுசூதனனுக்கும், செங்கோட்டையனுக்கும் தொடர்பு உள்ளது.
அவர்களுக்கு இடையிலான தொடர்பை பயன்படுத்தி தான் சேகர்பாபு இடையில் சென்றார். இப்படியான சூழலில் ஓபிஎஸ் அமித்ஷாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது சில சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. முதலாவது தனிக் கட்சி தொடங்கி, என்டிஏ கூட்டணியில் இணைவது. மற்றொன்று அதிமுகவில் ஓபிஎஸ் இணைந்து, அவருக்கு அவைத் தலைவர் போன்ற பொறுப்பை வழங்குவது. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவருடைய மகனுக்கு சீட் வழங்குவதாகும். வேறு யாருக்கும் சீட் தர மாட்டார்கள்.

தற்போது திமுகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி, தொழிற்சங்க தலைவராக இருந்தவர். சசிகலாவின் ஆதரவாளரான சின்னசாமி, அதிமுகவில் அனைத்து முகாம்களும் காலியாகி வருவதால் திமுகவில் இணைந்தார். இதேபோல், திமுகவில் இருந்து அதிமுகவில் இணைய பலர் காத்திருக்கிறார்கள். தினகரனுக்கு எதிராக லண்டன் ஓட்டல் வழக்கு மத்திய அரசின் கைகளில் உள்ளது. எனவே அவர் என்டிஏ கூட்டணியை விட்டு ஒருபோதும் தப்பித்து செல்ல முடியாது. ஆனால் தினகரன், அண்ணாமலை, செங்கோட்டையன், ஓபிஎஸ் போன்றவர்கள் இணைந்து, விஜய் கூட்டணிக்கு செல்வதாகவும், அண்ணாமலை வாங்கிய 18 சதவீதம் வாக்குகளை அவர்கள் வாங்குவது போலவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பாஜக அப்படி நடக்க ஒருபோதும் விடாது.
ஓபிஎஸ் திமுகவுக்கு செல்வதற்கு தயாராகவே இருந்தார். அப்படி ஓபிஎஸ் திமுகவுக்கும், டிடிவி தினகரன் விஜய் கட்சிக்கும் சென்றால் முக்குலத்தோர் வாக்குகள் திமுகவுக்கு சென்றுவிடும். அதனால் தான் பாஜக தலையிட்டு அவரை டெல்லிக்கு அழைத்து சமரசம் பேசுகிறது. அப்படி பேசுவதில் ஒரு திட்டம் அதிமுக ஒருங்கிணைப்பு ஆகும். இது குறித்து எடப்பாடியிடமும் பாஜக ஆலோசித்திருக்கும். டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணிக்குள் வந்துவிடுவார். ஓபிஎஸ் அதிமுகவுக்கு வருவதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ள மாட்டார். எனவே அவர் கட்சிக்குள் வருகிறாரா? அல்லது தனிக்கட்சி தொடங்கி கூட்டணிக்குள் வருகிறாரா என்பது பின்னர்தான் தெரியும்.

செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்குமான பிரச்சினை என்பது, எடப்பாடியின் உறவினரான கே.சி.கருப்பணனால் ஏற்பட்டது. கே.சி. கருப்பணன் ஈரோட்டில் நிர்வாகிகளை நியமித்தபோது, செங்கோட்டையனுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதனை அறிந்து கே.டி.ராகவன், நிர்மலா சீதாராமனிடம் அழைத்துச் சென்றனர். அப்படி சென்றதால் எடப்பாடி அடிபணிந்து விடுவார் என்று நினைத்தார். அதற்குள்ளாக ஓபிஎஸ், டிடிவி போன்றவர்கள் மீண்டும் ஒருங்கிணைந்தபோது, அந்த டீமின் கவுண்டர் சமுதாய முகமாக மாறினார். இரண்டாவது முறையாக தன்னால் அதிமுகவை வழிநடத்த முடியும் என்றும், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜகவிடம் வலியுறுத்தினார். அவர்கள் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தனர். ஆனால் செங்கோட்டையன் தவெகவில் இணைய பேச்சுவார்த்தைகளை நடத்தியதால் பாஜக அவரை கைவிட்டுவிட்டது.

வேறு வழியில்லாமல் செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றார். செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றதை பாஜக விரும்பவில்லை. செங்கோட்டையனுக்கு உண்மையில் பலம் கிடையாது. அப்படி இருந்தால் அவருக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்களாவது அதிமுகவில் இருந்து வெளியில் வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. அவருடைய இணைப்பை மிகப்பெரிய சாதனையாக தவெக கருதுகிறது. விஜயகாந்திடம் கட்சி கட்டமைப்பு இருந்ததால் பண்ருட்டி ராமச்சந்திரனால் சிறப்பாக செயல்பட முடிந்தது. ஆனால் விஜயிடம் கட்சி கட்டமைப்பு கிடையாது. எனவே செங்கோட்டையன் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


