கோயிலில் சிறப்பு மரியாதையை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரவித்துள்ளது.
கோயில்களில் வழங்கப்படும் சிறப்பு மரியாதையை உரிமையாக கோர முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரித்த நீதிமன்றம், கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்குத்தான் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

காஞ்சி தேவராஜ சுவாமி கோயிலில் மடாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ‘பஞ்ச முத்திரை’ சிறப்பு மரியாதை நிறுத்தப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மடாதிபதிகளுக்கு சிறப்பு மரியாதை வழங்குவது குறித்து அறநிலையத் துறை சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளே முடிவெடுக்க வேண்டியவர்கள் எனக் கருத்துத் தெரிவித்தனர்.
மேலும், கோயில்களில் வழங்கப்படும் சிறப்பு மரியாதைகள் எந்தவிதத்திலும் நிரந்தர உரிமையாகக் கருத முடியாது என்றும், சூழ்நிலை மற்றும் நிர்வாக விதிமுறைகளின் அடிப்படையில் அவை தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
வழக்கின் போது, அறநிலையத் துறை சார்பில், தற்போது ஐந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே சிறப்பு மரியாதை வழங்கப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், கோயிலின் வழிபாட்டு மரபிலும் நிர்வாகத்திலும் தெய்வத்துக்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இவ்வழக்கில் ஆசிரமம் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்க முடியாது எனக் கூறிய உயர்நீதிமன்றம், தேவையான நிவாரணம் வேண்டுமெனில் அறநிலையத் துறை அதிகாரிகளை அணுகலாம் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளது.
128 விமானங்கள் ரத்து…பனிமூட்டம் காரணமாக டெல்லியில் போக்குவரத்து முடக்கம்…


