spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாடக வரலாறு!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாடக வரலாறு!

-

- Advertisement -

மு.இராமசுவாமி        காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாடக வரலாறு!1949ல் உருவான ‘திராவிட முன்னேற்றக் கழகம்’, அண்ணாவின் தலைமையில் 1967ல், 18ஆண்டுகளில் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கிறது. அதனால்தான் 1969 பிப்ரவரி 03ல், அண்ணா, சந்தனப் பேழைக்குள் அடங்கியபோது, கலைஞர் தன் இரங்கற்பாவில் சொன்னார், ‘யாரேனும் கேட்டதுண்டா? / யாரேனும் பகர்ந்ததுண்டா? / பதினெட்டு ஆண்டுக்குள் ஓா் இயக்கம் / பதுங்கிப் பாயும் வேங்கையெனப் பாராள வந்த கதை” என்று! அந்தக் கதையின் முதல் அத்தியாயத்தை எழுதிய அண்ணாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘தலைவரென்பார், தத்துவ மேதையென்பார், நடிகரென்பார், நாடக வேந்தரென்பார், சொல்லாற்றல், சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்’ என்பதாய்க் குறிக்கிறார். உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை! இதுவேதான், 1949 செப்டம்பர் 16ல் உருவாகியிருந்த தி.மு.கழகத்தின் அத்தனை முன்னணித் தலைவர்களுக்கும், அவர்களின் அடுத்தகட்ட கட்சித் தலைவர்களுக்கும் இருந்திருந்த தனித் திறமையாயிருந்தது.

அதுவே, கழகத்தின் ஆரிய எதிர்ப்பிற்கான தகுதியாயுமிருந்தது! சமூகத்தின் புதுவீச்சாய், எழுச்சியுடன் பீறிட்டிருந்த தங்கள் கருத்தியலை, மக்களிடம் வீர்யமுடன் கொண்டுசேர்க்க, கழகத்தின் அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்த-குணநிலையிலும் அளவுநிலையிலும் அதைக் கொண்டுசெலுத்த – தங்கள் கைக்குள் அடக்கமாயிருந்த எழுத்துக் கலை, பேச்சுக் கலை, கவிதைக் கலை, நாடகக் கலை, திரைக் கலை என்கிற ஐம்பெரும் பஞ்சபூதக் கலைப் படைப்புகளை, ‘கோடிக்கால் பூதங்களை ஒருங்கிணைக்கும் பெரும்பணிக்கான கருத்தாயுதங்களாய் உயர்த்திப் பிடித்திருந்தனர்.

we-r-hiring

இன்றும், பல்வேறு படை அணிகளாய்-காலத்திற்கேற்ப கல்வியாளர் அணி, மாற்றுத்திறனாளி அணி என்று -அவை பெருகி நிற்கின்றன. ‘கலை இலக்கிய அணி’ யின்கீழ் வரும் நாடகத்தைப் பற்றி மட்டும், அல்லது திராவிடர் சிந்தனைப் பள்ளியில் நடையிட்ட சீர்திருத்த நாடக முயற்சிகளை மட்டும் -அதன் இன்றைய தேவையைப் பற்றி மட்டும் – இங்கு பருந்துப்பார்வை பார்க்க முயலலாம்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாடக வரலாறு!

1940-களின் காலம், திராவிட இயக்கத்தின் கைகளில், தமிழ் நாடகம் வசப்பட்டுக் கிடந்திருந்த காலம்! ‘சீர்திருத்த நாடகம்’ என்பதே, திராவிட இயக்கத்தால் உருவான அந்தவகை நாடகத்திற்கான சொல் வழக்கு! அதற்குமுன், புராண – இதிகாசக் கதைகளைக் கொண்டு, கூத்தாகவோ, இசை நாடகமாகவோ, அலங்கார கம்பெனி நாடகமாகவோ, சபா நாடகமாகவோ, சமூக நாடகமாகவோ நடத்தி வந்திருந்தனர். காசி விசுவநாத முதலியாரின் ‘டம்பாச்சாரி விலாசம்’,1867ல் முதல் ‘சமூக நாடகம்’ என்கிற முத்திரையுடன் வெளிவந்திருந்தது. அந்த வகையில், திராவிட இயக்க நாடகங்கள், ‘சமூக சீர்திருத்த நாடகங்கள்’ என்றழைக்கப்பட்டன. 1920-களின் பின் பகுதியிலிருந்தே, திராவிட இயக்க நாடகங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக, சமூக சீர்திருத்தம் பேசப் புறப்பட்டிருந்தன. இந்த நாடகங்களுக்குப் பங்களித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக, அண்ணா, கலைஞர், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எம்.ஆர்.இராதா, திருவாரூர் தங்கராசு, சி.பி.சிற்றரசு, என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.இராமசாமி, எம்.ஜி.ஆர் என்று பட்டியல் நீளக்கூடியது.

நாற்பதுகளின் முற்பகுதியில், சேலத்தில் எம்.ஆர்.ராதாவின் ‘இழந்த காதல்’ நாடகத்தை அண்ணா பலமுறை பார்த்துவிட்டு, அதைப் பெரியாரிடம் சொல்லியிருக்கிறார். ‘இராதா நடிக்கும் நாடகத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் நம்முடைய சீர்திருத்தக் கருத்துகளை நாடகத்தில் ஏராளமாகச் சொல்கிறார். நடிப்பில் மட்டுமல்ல, வார்த்தைகளை வைத்து விளையாடுவதிலும் மிகவும் கெட்டிக்காரராக இருக்கிறார்’ என்று! ஒருநாள் பெரியாரும், ஈ.வெ.கி.சம்பத்தும், அண்ணாவும் டிக்கெட் வாங்கிக்கொண்டு, ‘இழந்த காதல்’ நாடகம் பார்க்கப் போயிருக்கிறார்கள். இடைவேளையின்போது, மூவரும் நாடக மேடையில் ஏறி, ‘நாங்கள் நடத்துகிற நூறு மாநாடுகளும், இராதாவின் நாடகம் ஒன்றும் சரி’ என்று பேசியிருக்கிறார்கள். அன்றுதான் அண்ணாவுக்கு இராதாவைக் கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமும், தானும் நாடகம் எழுத வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியிருக்க வேண்டும் என்கிறார் ச.சோமசுந்தரம், தன் ‘பெரியாரின் போர்வாள் – நடிகவேள் எம்.ஆர்.இராதா’ (20 06) நூலில்.

அண்ணாவின் ‘சந்திரோதயம்’ நாடகம், ‘காஞ்சி திராவிட நடிகர் கழக’த்தினரால் 23-04-1943ல் ஈரோடு டி.கே.எஸ். அரங்கில், பெரியார் தலைமையில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் அண்ணா, ‘துரைராஜ்’ எனும் சீர்திருத்தம் பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கலைஞரின் முதல் நாடகம், ‘சாந்தா அல்லது பழனியப்பன்’ (பிற்பாடு, நச்சுக்கோப்பை’ என்றானது), தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற நிதிக்காக, திருவாரூர் பேபி டாக்கீஸில், நாகை திராவிட நடிகர் கழகத்தினரால், 1944ல், மேடையேற்றப்பட்டிருக்கிறது. அதில், காங்கிரஸ் எதிர்ப்பாளர் `சிவகுரு’ வேடத்தில் கலைஞர் நடித்திருக்கிறார்.

கலைஞரும், தன் நாடக முயற்சிகளைக் குறித்து பதிவுசெய்கையில், ‘நாடக இலக்கியம்போல் மனமாற்றம் உண்டாக்கக்கூடிய ஆற்றல் வேறு எதற்கும் இல்லை. அதனால்தான், அரசியல் கருத்துகளைப் பண்பாடு கெடாமல், தரம் தாழாமல் அள்ளித் தெளிப்பதற்கு நாடக இலக்கியத்தைக் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டேன்’ (‘நெஞ்சுக்கு நீதி பாகம்!) என்கிறார். 1940கள் என்பது, திராவிட இயக்கச் சித்தாந்தத்தை, மக்களின் கருத்தியல் தளத்தில் காட்சியாய்ப் பதிவுசெய்ய, இவர்கள் நாடகக் களமேறிய காலம் அது, என்பதைச் சுட்டிக்காட்டுவதற்குத்தான் இந்த எளிய உதாரணங்கள்!

தமிழ் நாடகக்கலை வளர்ச்சிக்காக முதன்முதலாக, 11.02.1944ல் ஈரோடு சென்ட்ரல் கலையரங்கில், காங்கிரஸ்காரரான பழம்பெரும் நடிகர் டி.என்.சிவதாணு செயலாளராயிருந்து கூட்டியிருந்த ‘தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மகாநாட்டில், ‘முத்தமிழ் நுகர்வோர் கழகத்தைச் சேர்ந்த பெரியாரியச் சிந்தனையாளர்கள்தாம், புராண இதிகாசங்களைக் கட்டிக்கொண்டு நாடகம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை வளர்த்துவரும் போக்கைக் கண்டித்து, சீர்திருத்த நாடகங்கள் நடத்தவேண்டிய அவசியம் குறித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி அறிக்கைகள் விட்டு, துண்டுப்பிரசுரங்களை வழங்கியிருந்திருக்கின்றனர்.

அண்ணா தலையிட்டு, அவர்களை அமைதிப்படுத்தியது மட்டுமின்றி, அம்மகாநாட்டில் ‘கலையின் நிலைமை’ எனும் தலைப்பில் ‘திராவிட நாடு’ ஆசிரியர் எனும் முகாந்திரத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறார். அதில் ‘எலும்பு பெண்ணுருவான அருட்கலைகளைப் பாடியும் ஆடியும் வந்தது போதும். நம் பெண் மக்கள் எலும்புருவானது தவிர பலன் ஏதுமில்லை.இனி, பெண்கள் எலும்புருவாகும் பரிதாப வாழ்வைச் சித்திரிக்கும். நாடகங்களை நடத்துங்கள். கண்ணைப் பெயர்த்தெடுத்து அப்பிய கண்ணப்பரின் கதையை ஆடியதுபோதும். இனி, கோயில்கட்டிக் கும்பாபிஷேகம் செய்பவன் ஊரிலே கொள்ளையடிக்கும் விஷயத்தை விளக்கும் நாடகத்தை நடத்திக் காட்டுங்கள். ஏழையின் சுண்ணீர் விதவையின் துயரம், மதத் தலைவரின் மமதை ஆகியவற்றை விளக்கும். அறிவு வளர்ச்சி நாடகங்களை நடத்துங்கள்’ என்று உரை நிகழ்த்தியிருக்கிறார்.

‘நாடகமும் சினிமாவும்’ எனும் தலைப்பில் உரையாற்றிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ‘நாடகமும் சினிமாவும் ஒன்றுதான். ஒன்று உண்மை உருவம்; மற்றொன்று நிழல். இதில் எதுவும் சாகவில்லை, சாகப் போவதுமில்லை’ என்று உரையாற்றினார். மேலும், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் சீர்திருத்த நாடகங்கள் நடத்தப்படவேண்டியதன் அவசியம் பற்றி உரையாற்றினார்கள். முடிவில், தலைவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் பேசும்போது, ‘நாடகக்கலை மாநாட்டிலே இவ்வளவு சமுதாயச் சீர்திருத்த விஷயம் பேசப்படுவானேன் என்று சந்தேகம் உண்டாகலாம். இந்த மாநாட்டிலே சமூக சீர்திருத்தத்தைப் பற்றி பேசவேண்டியது அவசியம். கருத்து மாறுவது போல், நாடகங்களும் புதிது புதிதாக மாற வேண்டும்’ என்று பேசியதாகத் ‘தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மகாநாடு’ – மலர்(1944) குறிப்பிடுகிறது. ‘நாடகக்கலை மாநாடு, கடைசியில் சுயமரியாதை மாநாடாக முடிந்து போனதாகக் கலைந்துசென்றவர்கள் கூறிச்சென்றதாய், 19.02.1944 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழ் கூறுகிறது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாடக வரலாறு!

25-08-1935ல் ‘குடிஅரசு’ இதழில், திரு அ.இரத்தினசபாபதி எழுதியிருந்த ‘நாடக மேடைகள் நமக்குப் பயன்பட வேண்டுமானால்’ என்ற கட்டுரையில், ‘பங்குதாரர்கள் கொண்ட ஒரு லிமிடெட் கம்பெனி அமைக்கப்பட வேண்டும். அதிலே சீர்திருத்த நாடகங்கள் நடத்தப்பட வேண்டும். அதன் வருவாயை நாடகத் தொழிலாளருக்கு (போனசாக) இலாபப் பங்கீடாகத் தரப்பட வேண்டும் என்று குறித்திருப்பார். இதே கருத்து, எட்டரை ஆண்டுகளுக்குப் பின், 11-02-1944ல், தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மகாநாட்டில், அண்ணாவால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

22-07-1956 நாளிட்ட ‘திராவிட நாடு’ இதழில், தன் ‘தம்பிக்குக் கடிதத்தில் அண்ணா எழுதியிருப்பது! …. “தம்பி, எங்கே உன்னுடைய நாடகக்குழு? இன்றே குழுவின் அவசரக்கூட்டம் நடைபெறட்டும்! நாடகம் தயராகட்டும்! நாட்டு நலிவு பற்றிய விளக்கம், நாடாள வந்தவர்கள் தந்த வாக்குறுதிகள் யாவும் பொய்த்துப்போனது பற்றிய விளக்கம், நம்மவர் படும் துயரம், நாடாள்வோர் அதற்குக் கூறும் சமாதானம் – இவை பற்றிய நாடகங்கள்.

நால்வர், அறுவர்,பதின்மர் கொண்ட குழுக்களால், எளிமையும் இனிமையும் கொண்ட முறையில், முச்சந்திகளில் நடத்திக் காட்டப்பட வேண்டுமே! நாமென்ன, குமாரி கமலா, சமூகசேவகி சாருபாலா, சங்கீத கலாநிதி சாம்பமூர்த்தி என்போருக்குச் ‘சன்மானம்’ கொடுத்துச் ‘சபையை ரம்மியமானதாக்கிக் காட்டவா முடியும்? நமக்கு நாமே! ஆனால், அந்த ‘நாம்’ என்பதிலே உள்ள திருவும் திறமும் சாமான்யமானதல்ல! அதை மறவாதே! உன் குறும்புப் பார்வை எனக்குப் புரிகிறது.

தம்பி, புரிகிறது! அண்ணா! நாடகம் ஆடு என்று யோசனை கூறிவிட்டால் போதுமா? நாடகம் வேண்டுமே. எங்கே நாடகம்? என்றுதானே உன் பார்வை பேசுகிறது. பொல்லாதவனல்லவா நீ! சமயம் பார்த்து என்னை வேலை வாங்கிப் பழக்கப்பட்டுப் போய்விட்டாய்! சரி! நாடகமும் தருகின்றேன்! ‘கூடு’ மட்டும் -எழில் உருவம் அமைத்துக்கொள்ள உனக்கா தெரியாது- நாடகம் இது முதலாவது! இனி, தொடர்ந்து பல நாடகமும் தருகிறேன்.

உன் குழுவினரைக் குதூகலமாகப் பணியாற்றச் சொல்லு!”- ஒரு கட்சியின் தலைவர், நாடகத்தின் இன்றியமையாமையைச் சொல்லி நாடகங்கள் நிகழ்த்தத் தன் தம்பியரிடம் சொல்வது மட்டுமின்றி, அவர்கள் நிகழ்த்த நாடகங்களும் எழுதிக்கொடுப்பதென்பதும், அதைவிடவும், தமிழ்நாட்டில் 70-களில் வீரியமுடன் ஓர் இயக்கமாக எழுந்த வீதி நாடக / தெரு நாடக / மூன்றாம் அரங்கச் சிந்தனையை, சற்றேறக்குறைய அதற்கு 20 ஆண்டுகளுக்கு (இன்றைக்கு 69 ஆண்டுகளுக்கு) முன்பே, தன் எழுத்தில், தன் இயக்கத் தோழர்களுக்குப் பாடம் நடத்தி இருப்பதும், தமிழ் நாடக வரலாற்றில் அழுத்தமாகக் குறிப்பிடவேண்டியதாகும்.

எழுபதுகளின் பிற்பகுதி அல்லது எண்பதுகளின் தொடக்கத்தில், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், ‘புனித ராஜ்யம்’ எனும் நாடகத் தொடரை, எந்தத் தெரு முனையிலும் கழகத் தோழர்கள் நிகழ்த்தும்படி,… அன்றாட அரசியலை வீதிக்குக் கொண்டுவரும் தொனியில், வீதி நாடகப் பாணியில் ‘முரசொலியில் தொடர்ச்சியாக நாடகங்கள் எழுதியிருந்தார் கலைஞர்! நாடகத்தை, ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துப் பரப்புரைக்கு, இயக்கச் செயற்பாட்டிற்கு முழுமையாகப் பயன்படுத்திய அவரின் இயக்க உத்வேகம் நினைக்கப்படக்கூடியது. 70-களில் நடந்த வியட்நாம் யுத்தத்தின்போது எல்லாமே தணிக்கைக்கு உள்ளாகியிருந்த நிலையில், அமெரிக்க உளவுப்படைக்கு டேக்கா கொடுத்துவிட்டு, மக்கள் கூடுமிடங்களில் மக்களோடு மக்களாகக் கலந்திருந்து, சிறு சிறு நாடகங்களின்வழி அவசியத் தகவல்களைப் பரப்பிவிட்டு, மக்களோடு மக்களாய்க் கலந்து கரைந்துபோவது என்பது, ‘கொரில்லா=வீதி/தெரு நாடகப் பாணியாயிருந்தது. Corrella Street Theatre நூல். அங்கு, போர்ச் சூழலில் நடந்த நாடக முயற்சிகளைப் பதிவு பண்ணுகிறது. நாடகம், தேவைக்கேற்ப தன்

வடிவங்களை மாற்றிக்கொண்டேதான் வந்திருக்கிறது. ஆயின், ‘புனித ராஜ்யம்’ தெரு நாடகத்தின் மேலான நிகழ்த்துகைப் பதிவுகளும் பெரியதாய்க் கிடைக்கவில்லை. இன்றைக்கு இருக்கிற மாதிரி சமூக ஊடகங்களும் அன்றைக்கில்லை செல்பேசி கையிலிருந்தால், யார் வேண்டுமாயினும் எதையும் பதிவுசெய்துவிடுகிற இன்றைய நிலையும் அன்றைக்கில்லை. அதனால் அதுகுறித்த பெரிய பதிவுகள் இல்லை.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாடக வரலாறு!‘திராவிட இயக்கமும் கலைத் துறையும் எதிர்கொண்ட கலகங்கள்’ (2014) நாடகக்கலை நூலின் என்னுரையில் நான் எழுதியிருந்த ஒரு பகுதியை மீண்டும் இங்கு நினைவுபடுத்துவது நல்லது என்று நினைக்கிறேன். ‘சமூக மோதுகைகளைத் தீர்ப்பதற்குரிய ஆக்கினைகளைத் தன் படைப்புக் குணமாய்க் கொண்டு, அதன்வழி, சமூகத்தைச் சமப்படுத்தும் ஊடாட்டத்திற்குரிய அழகிய இயங்கியல் கலை ஊடகம், நாடகம்!” இந்தக் கருத்தில் அக்கறைப்படும் அமைப்புகள், நாடகத்தைத் தங்கள் கைவாளாய்க் கொண்டு, சமூக அவலங்களை அம்பலப்படுத்தத் துணிய வேண்டும்; விவாதங்களுக்கு வழிகோலும் கருத்துச் சுதந்திரம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதைத்தான், திராவிட இயக்கங்கள் எதிர்கொண்ட நாடகக் கலகங்கள், நமக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன.

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். தி.க.விலிருந்து தி.மு.க. பிரிவதற்கு ஓராண்டிற்கு முன், இரு பக்கமும் பிரச்சனையானது நீறுபூத்த நெருப்பாக உள்ளேயே கனன்றுகொண்டிருந்த நிலையில், தடைசெய்யப்பட்டிருந்த. பாரதிதாசனின் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகத்தை நிகழ்த்தியமைக்காக, காஞ்சி திராவிட நடிகர் சங்கத்தினர் கைதுசெய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் ரூ.50/- வீதம் அபராதமும், அதைக் கட்ட மறுத்தால், மேற்கொண்டு மூன்று வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக, 19-09-1948 நாளிட்ட ‘திராவிட நாடு’ இதழ் கூறுகிறது. இது இயக்கத்தின்மீது அதன் கருத்துப் பரப்புரைமீது, கழகத் தலைமையின்மீது கழகத் தோழர்கள் -திராவிட நடிகர் கழகத்தினர் – கொண்டிருந்த உறுதியைக் காட்டுகிறது. விடுதலை செய்யப்பட்ட தோழர்களுக்கு, 22.12.1948ல் வேலூர், மறுநாள் திருவத்திபுரத்தில் என்று பெரியார் முன்னிலையிலும், 25.12.1948 அன்று காஞ்சிபுரத்தில் தோழர் அண்ணாதுரை முன்னிலையிலும் வரவேற்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

காஞ்சிபுரத்தில் நடந்த வரவேற்பிற்குச்  செங்கற்பட்டிலிருந்து தோழர் எம்.சின்னையா தலைமையில், நூற்றுக்கு மேற்பட்ட இயக்கத் தோழர்கள், நடைப்பயணம் மேற்கொண்டு, வழியெங்கும் பேசுகிற பொருளாய் அனைவரையும் பேசவைத்து,அவ்வரவேற்பில் கலந்துகொண்டிருந்திருக்கின்றனர் என்பது. 13-02-1949 நாளிட்ட ‘திராவிட நாடு’ இதழில் ஒளிப்படத்துடன் பதிவாகி இருக்கிறது என்பது அவசியம் குறிப்பிடப்படவேண்டியது. நாடகத்தை மையப்படுத்தித் திராவிட இயக்கச் சிந்தனைகளை நடைப்பயணமாகப் பரப்புரை செய்து, மக்களிடம் அதை இயக்கமாக்கிக் கொண்டுசென்ற முயற்சி இது !தடைசெய்யப்பட்ட ஒரு நாடகத்தை முன்வைத்து, தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அதில் சம்பந்தப்பட்டு, அதைக் கொண்டாடி, இயக்க வளர்ச்சிக்கு அதைக் காப்பீடாக்கிய ஒரு நடைப்பயணம் 77 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் திராவிட இயக்கத்தால் முன்மொழியப்பட்டு, மக்கள் மனங்களில் அதைக் கொண்டுசேர்த்திருக்கிறதென்பது, அடிக்கோடிட வேண்டியது.

சுதந்திரம் பெற்ற இந்தியாவில், தி.க.விலிருந்து தி.மு.க. பிரிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு. அடக்குமுறை அட்டவணை’ என்ற தலைப்பில், 31-03-1949 நாளிட்ட ‘திராவிட நாடு’ இதழில் ஓர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாவேந்தரின் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’, எம். ஆர்.இராதாவின் ‘போர்வாள்’, ‘சர்வாதிகாரி, ‘துக்குமேடை’, ‘மகாத்மா தொண்டன்’, அவர் அதிக அளவில் மேடையேற்றிய ‘இரத்தக் கண்ணீர்’ ஆகிய நாடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை அட்டவணைப்படுத்தி இருக்கிறது. தி.மு.க. உருவாகி ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், ‘அடக்குமுறைப் பட்டியல் வளர்கிறது’ என்ற தலைப்பில், 16.12.1950 நாளிட்ட ‘போர்வாள்’ இதழில், எழுத்துப்பணி, நிகழ்த்துப்பணி தொடர்பாக 35 அடக்கு முறைகளைப் பட்டியலிட்டுள்ளது.

அவற்றுள் முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்தும், நாடகங்களைக் குறிப்பிடுவதாகும். இத்துடன், எம்.ஆர்.இராதாவின் ‘நல்ல முடிவு’ நாடகத்திற்கும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிராகத் தடைசெய்யப்பட்ட எல்லா நாடகங்களையும் அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்த்துவதற்கு மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஒன்றை 23-10-1950ல் நடந்த தி.மு.க. செயற்குழு அங்கீகரித்திருக்கிறது என்பதும், எம்.ஆர்.இராதாவின் ‘இராமாயணம்’ தடை செய்யப்பட்டபோது, அதைக் காரணங்கொண்டே, 1954 டிசம்பரில் ‘நாடக நிகழ்த்தல் சட்டம்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் கொண்டுவந்து நிறைவேற்றியபோது, அதை எதிர்த்து, 20-02-1955ல் கோவையில் கூடிய தி.மு.க. செயற்குழு திர்மானம் நிறைவேற்றியதோடு, தடைசெய்யப்பட்ட நாடகங்களைத் தொடர்ந்து நிகழ்த்த, கட்சியின் அனைத்து நாடகக் குழுக்களையும் அத்தீர்மானம் கேட்டுக்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடப்படவேண்டியது. (KS Rajendran, ‘Drama and Society,unpublished Dissertation, The Tamilnadu Council of Historical Research, 1989).காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாடக வரலாறு!1967ல் தமிழ்நாட்டின் முதல்வராயிருந்த அண்ணா, அண்ணாவிற்குப் பின், 1969ல் முதல்வரான கலைஞருக்கு அடுத்து, 2021ல் தமிழ்நாட்டின் முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்களும் நாடக நடிப்பு அனுபவம் கொண்டவராகவே இருக்கிறார். 1971 பிப்ரவரி 03 அன்று – அண்ணாவின் இரண்டாம் நினைவுநாளில்- சைதை அப்பாவு நகரில் அரங்கேறிய ‘முரசே முழங்கு’ நாடகம், இன்றைய முதல்வரின் முதல் நாடகம். அதற்குத் தலைமைதாங்கியவர், தி.மு.க.வின் பொருளாளராயிருந்த எம்.ஜி.ஆர். அவர் செயல்பட்ட ‘இளைஞர் தி.மு.க.’ என்ற அமைப்பின் ஓர் அங்கமாகத் திகழ்ந்த ‘அஞ்சுகம் நாடக மன்றத்தின் மூலம் 1970-களில் நாடகங்கள் நிகழ்த்தத் தொடங்கியிருக்கின்றார்.

1971 தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ‘முரசே முழங்கு’ நாடகம் இருந்துவந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 18 வயதில், அந்நாடகத்தில் கலைஞர் கருணாநிதியாக நடித்துக்கொண்டிருந்திருக்கிறார். ‘முரசே முழங்கு’ நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘வெற்றி நமதே’, ‘நாளை நமதே’, அறிஞர் அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’ போன்ற பல்வேறு நாடகங்களில் நடித்திருக்கிறார். இவை அனைத்தும், பெரும்பாலும் தி.மு.க. கொள்கைகளைப் பரப்பும் நாடகங்களாகவே இருந்துவந்துள்ளன. ஆக, தி.மு.க.வின் மூன்று தலைமுறைத் தமிழக முதல்வர்களும், நாடகத்தை இயக்க வளர்ச்சிக்குப் பயன்படுத்தத் தங்களை உரமாக்கியிருக்கின்றனர் என்பது வெள்ளிடைமலை!

ஆனால், நாடகங்களைத் தொடர்ந்து நடத்துவதில் தி.மு.க.விலும் பெரியார் இயக்கங்களிலும் தொய்வு ஏற்பட்டுவிட்டது என்பது உண்மை. தமிழ் நாடகப் பெருங்கணக்கில், கடந்த 50 ஆண்டுகளில், கரையானுக்குக் காவுகொடுத்திருக்கிற திராவிட இயக்க நாடக மரபின் சிதைந்த பக்கங்களை மறுபடியும் புதிதாய் எழுதவேண்டிய பெரும்பணி, திராவிட இயக்க நாடகச் சிந்தனையாளர்களுக்கு இருக்கிறது.

2025ல், அதிசயங்கள் சில நிகழ்வதற்கான அரும்புகள் அங்கங்கு தோன்றியிருப்பது நம்பிக்கையைத் தருவதாய் இருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய நாத்திகர் மாநாட்டில், நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டிருந்தது. முழுமையான நாடகமாக அதைக் கொள்ள முடியாதிருப்பினும், தங்களுடைய செயற்பாடுகளில் நாடகத்திற்கு இடமளித்திருப்பதைப் பார்க்கையில், விடுபட்ட பக்கங்களைக் கோர்க்கிற பணியைத் திராவிட அமைப்பு ஒன்று எடுத்திருப்பது வரவேற்கத்தகுந்த மாற்றமாகும்! அதுபோல், தி.மு.க. இளைஞர் அணியின்மூலம் ‘இளம் பேச்சாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிமுகாம்’ ஒன்றும் 2025ல் நடந்திருக்கிறது. அதில், ‘அசுரகீதம்’ என்கிற மேடை நாடகமொன்று நிகழ்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

விட்டுப்போன இடத்தைத் தொடுவதற்கான முயற்சி, உயிர்ப்பித்துக்கொண்டு வருவதைப் பார்க்க முடிந்தது. ‘திணைநிலைவாசிகள்’ நாடகக்குழுவினர் அதை நிகழ்த்தி இருந்தனர். திரும்பத் திரும்ப நிகழ்த்துகையில், அதிலிருக்கிற வேண்டாதவை கழன்று, அதுவே செப்பம் பெற்றுவிடும். அதற்கு, நாடகம் தொடர்ந்து நிகழ்த்த வாய்ப்புகள் உருவாக்கித் தரவேண்டும். நாடகம் ஒன்று நிகழ்த்த, அந்தப் பயிலரங்கின் நிரலில் இடம் ஒதுக்கியிருப்பது என்பதே மிக முக்கியமானது. அமைப்பிலிருந்தே குழு ஒன்றை அல்லது சிலதை உருவாக்கி, அவற்றின்மூலம் கழகச் சிந்தனைப் பிரச்சார நாடகங்களை நடத்த முன்வர வேண்டும்.

மக்களைத்தேடி நாடகம் ஊரூராய்ப் போக வேண்டும்- மனம் மகிழும் வகையில், பெரும் செலவில்லாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிக் குலவையிட்டு – பெரியார் – அண்ணா கலைஞர் வழியில் – அறிவியல் உண்மையையும், அதை மறுத்துத் தோற்றம் காட்டும் காவி – தமிழ் பாசிசக் கூட்டை அம்பலப்படுத்தியும், மனிதத்துவத்தைப் பாகுபடுத்தும் வெறுப்பு உபதேசங்களை வெளிச்சமிட்டுக் காட்டியும், எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்ய வேண்டும்! அதற்கு, கலை – நாடகம் நமக்குக் கைகொடுக்கும்! வேறெப்போதையும்விடம் இப்போது அதன் தேவை அதிகமாகியிருக்கிறது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுவோம்.

MUST READ