சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படத்திற்கு தடை என விஜய்க்கு மேலும் மேலும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அவர் பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுகவுக்கு செல்லாமல் பிரிப்பார் என்று பாஜக வியூகம் வகுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் வழக்கின் விசாரணைக்கு இரண்டாவது முறையாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகியுள்ளார். விஜயிடம் விசாரணை நடத்துவதில் அரசியல் நோக்கம் உள்ளதா? என கேள்வி எழுகிறது. விஜய் கூட்டணிக்கு வந்தால் தான் அதிமுக – பாஜக கூட்டணி, திமுகவை வீழ்த்த முடியும் என்பது தான் பிரதான நோக்கம். அப்படி எனில் விஜய் என்டிஏ கூட்டணிக்கு வந்தால் அவருக்கு எவ்வளவு இடங்கள் தர முடியும்? அதிமுக கூட்டணியில் அதிமுக 160 இடங்கள் நிற்க வேண்டும். பாஜக 25-30, பாமக 17-18 இடங்கள், மற்றவர்களும் இடங்கள் கேட்கிறார்கள். அப்போது விஜய் வந்தால் 15 – 20 இடங்கள் தான் மிஞ்சும். அதுவும் அதிமுக 10 இடங்களை விட்டுத்தர வேண்டும். இவ்வளவு குறைவான இடங்களுக்கு ஒரு நடிகரின் கட்சி எப்படி ஒப்புக்கொள்ளும்? திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்தால் அதிமுக – பாஜக கூட்டணி நீர்த்து போகும்.

அதேவேளையில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரிவது, அவர்களுக்கு நன்மையே. எனவே விஜய்க்கு மேலும் மேலும் நெருக்கடி கொடுப்பதன் மூலமாக பாஜக தான் எல்லாவற்றையும் செய்கிறது என்று விஜய், பாஜக எதிர்ப்பு வாக்குகளை பெற போகிறார் என்று தோன்றுகிறது. சிக்கல் என்ன என்றால்? அதற்கு விஜய் ஒத்துழைக்க வேண்டும். அவருடைய நிலைப்பாடு என்ன என்று விஜய்க்கே தெரியுமா? என தெரியவில்லை.

அரசியல்வாதி என்பவர், ஒரு சம்பவம் நடைபெறுகிறபோது அதை வைத்து அரசியல் செய்ய முயற்சிப்பார்கள். ஆனால் கரூர் சம்பவத்திலேயே விஜய் அரசியல் செய்யாமல் ஓடிவிட்டார். கட்சி கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவில்லை. பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து ஆறுதல் கூறினார். ரூ.20 லட்சம் நிதி வழங்கியதன் மூலமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாக்குகளை மட்டுமே பெற முடியும். மற்றவர்களின் வாக்குகளை பெற முடியாது. தனக்கு கிடைக்கிற அரசியல் வாய்ப்புகளை விஜய் பயன்படுத்தவில்லை என்கிற பார்வை பாஜக தரப்பிடமே உள்ளது. விஜய் சினிமாத்தனத்தில் இருந்து உண்மையான அரசியலுக்கு வந்து விட்டதாக தோன்றவில்லை.
ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அது வாக்குகளாக மாறும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எஸ்.ஐ.ஆரில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இதில் விஜயுடைய இளம் வாக்காளர்கள் தங்களின் பெயர்களை சேர்த்தார்களா? என்று தெரியவில்லை. வாக்குச்சாவடிகளை 2, 3 ஆக பிரித்து கூட்டி விட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல வாக்குச்சாவடிகளுக்கு பிரியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் விஜய் வாக்காளர்கள் எந்த வாக்குச்சாவடியில் உள்ளனர் என்று அவர்களுக்கே தெரியாது.

எம்ஜிஆர்-ஐ போன்று விஜய்க்கு மக்கள் மத்தியில் பெரிய ஈர்ப்பு இருப்பதாக எதன் அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு பிறகு 1952-ல் மணப்பாறை கூட்டத்தில் திமுகவில் இணைந்தார். 1972-ல் தான் தனிக்கட்சியை தொடங்கினார். அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியிலும் இருந்துள்ளார். 22 வருட திமுக அனுபவம். திமுகவில் பொருளாளர் பதவி. எம்எல்ஏ, எம்.எல்.சி. பதவிகள். 1967 தேர்தல் வெற்றி. 1971ல் பிரச்சாரம். அதிலும் பெரிய வெற்றி. இரு தலைவர்களுக்குள் இடையில் பல காரணங்களால் மனஸ்தாபம். அதனால் எம்ஜிஆர் கட்சி தொடங்கினார்.
அப்போதும் அனைத்து இடைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்படியான சூழலில் எப்படி எம்ஜிஆரையும் விஜயையும் ஒப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை.டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கு பிறகு தான் பிரவீன் சக்ரவர்த்தி பேட்டி அளித்துள்ளார். மற்ற கட்சிகளுக்கு வேலை பார்க்கக் கூடாது என்று அவர் சொல்லியுள்ளார். காங்கிரஸ்காரர்கள் சொந்த கட்சிக்கே வேலை பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

எடப்பாடி பழனிசாமி புதிய தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பொதுவாக தேர்தல் அறிக்கை என்பது, தேர்தலை ஒட்டிதான் வெளிவர வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு பொதுமக்களிடம் சென்று கருத்துக்களை கேட்டு தங்களின் தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிடுவார்கள். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவை சாத்தியமானதா? சாத்தியமில்லாததா? என்பதை தாண்டி முதலில் அறிவிக்க வேண்டும். ஒரு நல்ல நாள் பார்த்து அறிவிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.
பொதுவாகவே தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாது. இன்றைக்கு திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் பல்வேறு விதமான கவர்ச்சி வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். பொதுமக்களுக்கு அவற்றில் எது சாத்தியம், எது சாத்தியமில்லாதது என்று நன்றாகவே தெரியும். தேர்தல் வாக்குறுதி என்பது ஒரு சம்பிரதாயமாக ஆகிவிட்டது. மத்திய அரசு தற்போது நிதியை 60 சதவீதமாக குறைத்துள்ள நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது என்பது சாத்தியமில்லாதது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


