spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

-

- Advertisement -

.முருகேசபாண்டியன்காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

கடந்த பல நூற்றாண்டுகளாக, வைதீக சமய மேலாதிக்கம் காரணமாகப் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கற்பித்து, தீண்டாமை நிலவிய தமிழர் வாழ்க்கை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சீரழிந்த நிலைமையிலிருந்தது. விளிம்பு நிலையினரின் வாழ்க்கை விலங்கைவிட கேவலமாக இருந்தது. வறுமை, பஞ்சம், கல்வி மறுப்பு, பால் சமத்துவமின்மையினால் துயருற்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், உலகமெங்கும் கூலிகளாகப் பயணமாயினர். ஆங்கிலேயரின் ஆட்சியில் சில சமூக சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டபோதிலும் அன்றாட வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. பார்ப்பனர் தங்கள் பூர்வீகத் தொழிலான வேதம் ஓதுவதைக் கைவிட்டு, காலனியாதிக்க அரசாங்கத்தில் உயர் அலுவலர்களாயினர்; அதிகார மையமாயினர்.

சமூகக் கொடுமைகளுக்கு எதிராக விழித்தெழுந்தவர்களின் கூட்டு முயற்சியினால், சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இயக்க அடிப்படையில் முக்கியமானவை. 1949ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், 1967ல் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் சமூக அரசியல்ரீதியில் செய்த சீர்திருத்தங்களும் மாற்றங்களும் அளவற்றவை.

we-r-hiring

பார்ப்பனர் அல்லாதாரின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தென்னிந்திய நல உரிமைச்சங்கம் சென்னையில் 1916ஆம் ஆண்டு நிறுவப்பெற்றது. நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட அந்த இயக்கம் தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றியபோது, வகுப்புவாரி பிரதிநிதித்துவம்,பெண்களுக்கு வாக்குரிமை, தேவதாசி முறை ஒழிப்பு, பஞ்சமர்களுக்கு நிலப்பட்டா வழங்கல் போன்றவை சட்டரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டன. அந்த அமைப்பு, சேலம் மாநாட்டில் பெரியாரின் தலைமையில் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றப்பெற்று, புதிய அமைப்பாகத் தோற்றுவிக்கப்பட்டது.

திராவிட நாடு, திராவிடர் இன விடுதலை போன்ற கருத்துகள் திராவிடர் கழகத்தினரால் முன்வைக்கப்பட்டன. வடவர் ஆதிக்க எதிர்ப்பு, சமஸ்கிருத மறுமணம், சுயமரியாதைத் திருமணம், சமூக நீதி, குழந்தை மணம் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, விதவை எதிர்ப்பு, பெண்களுக்குச் சமஉரிமை, தேவதாசி முறை ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற சீர்திருத்தக் கருத்துகளுக்காகத் திராவிடர் கழகத்தினர் பிரச்சாரம் செய்து நடைமுறைப்படுத்திட போராடினர்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்! அந்த வழியில் திராவிட முன்னேற்றக் கழகம் சமூக சீர்திருத்தப் போராட்டங்களை முன்வைத்து, சமூக நீதிக்கான அரசியல் பிரச்சாரத்தை இன்றுவரை தொடர்கின்றது. தமிழ்நாட்டின் முதல்வர் மு.கஸ்டாலின் இன்று முன்வைத்திருக்கிற ‘திராவிட மாடல் அரசு’ என்ற கருத்தியலின் பின்புலத்தில் திராவிட இயக்க அரசியல் பொதிந்துள்ளது.

ஐம்பதுகளில், திராவிடக் கருத்தியல் ஒருபுறம், அச்சு ஊடகங்களான பத்திரிகைகள், புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் இன்னொருபுறம், கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள் போன்ற இலக்கியப் படைப்புகள் வழியாகவும் பரப்பப்பட்டன. அதேவேளையில், மேடைப்பேச்சுகள், நாடகங்கள், திரைப்படங்கள்மூலம் கல்வியறிவு இல்லாதவர்களிடம் திராவிடக் கருத்தியல் வீச்சாகப் பரவியது.

தமிழ் மரபில் இலக்கியம் என்பது புனிதமானது என்று உருவாக்கப்பட்டிருந்த புனைவைத் தகர்த்து, மக்கள் மனதில் படிந்திருந்த மூடநம்பிக்கைகளைப் போக்கிட, திராவிட இயக்கத்தினர் இலக்கியத்தைப் பயன்படுத்தினர். திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கிய வடிவம், உத்திகள் பற்றிய கவலை இல்லாமல் ஏராளமாக எழுதிக்குவித்தனர். அன்றைய காலகட்டத்தில், புதிதாகக் கல்வியறிவு பக்தர்களாலும் போற்றப்பட்ட திராவிட இயக்கப் படைப்பாளர்களின் பெற்றிருந்த இளம் தலைமுறையினரிடையே படைப்புகள் வீச்சாகப் பரவின; கருத்துரீதியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின.

முன்னர்ப் பரவலாகக் கவனம் பெற்றிருந்த திராவிட இயக்கப் படைப்புகள் பற்றிய சொல்லாடல்கள், இன்று இலக்கிய வரலாற்றுத் தகவல்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. எனவே, கடந்த 75 ஆண்டுகள் காலகட்டத்தில் தமிழரிடையே வீச்சாகப் பரவியிருக்கின்ற இலக்கியப் படைப்புகள் பற்றி மீளாய்வு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புனிதம் என்றோ, இழிவானது என்றோ எதுவுமில்லை என்ற பின்நவீனத்துவக் காலகட்டத்தில், பல்வேறு வாசிப்பு முறைகளின் வழியாகத் திராவிட இயக்கப் படைப்புகளைஅணுகவேண்டியது அவசியம்.

நாற்பதுகளில் தேவாரம், புராணங்கள், பிரபந்தம் வாசிப்பதுதான் இலக்கியம் என்ற பொதுப்புத்தி தமிழ்ச்சூழலில் நிலவியது. தமிழ்ப் பண்டிதர்கள் யமகம், அந்தாதி, சித்திரக்கவி போன்ற மொழி விளையாட்டுகளில் சிக்கியிருந்தனர். இத்தகைய சூழலில், பண்டிதர்களாலும் பக்தர்களாலும் போற்றப்பட்ட சமயம் சார்ந்த இலக்கியப் படைப்புகளை எல்லாம் ‘குப்பை’ என்று பெரியார் புறக்கணித்தது கலகக்குரல். விளிம்புநிலையினர் படைப்பு முயற்சியில் ஈடுபடுவதிலிருந்து தடை செய்திட முயன்ற உயர்சாதியினரின் தந்திரங்களைப் பெரியாரின் தடாலடியான அணுகுமுறை தகர்த்தது. புராண, இதிகாசங்கள் வலியுறுத்திய அடிமைத்தனத்தையும் சனாதனத்தினையும் கேள்விக்குள்ளாக்கிய பெரியாரின் குரல், காலத்தின் தேவையாக ஒலித்தது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் பண்பாட்டு அடையாளமாக வைதீக சனாதனம், பார்ப்பனர்களால் முன்வைக்கப்பட்டது. பாரதியார், வ.வே.சு.ஐயர் போன்ற இலக்கியவாதிகள் கொண்டாடிய ஆரிய வேதம், ஆரிய தேசம், புண்ணிய பூமி, சம்ஸ்கிருதக் கல்வி போன்ற கருத்தியல்கள், சனாதனத்தின் வெளிப்பாடுகள்தான். மனிதர்களிடையில் பிறப்பு, பால் அடிப்படையில் பேதங்களைக் கற்பித்திடும் சனாதன மரபு முன்னிறுத்தும் வருணாசிரமக் கொள்கையைப் போற்றுகின்ற ஆரிய மரபை எதிர்த்து தந்தை பெரியார். அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதிய எழுத்துகள், காத்திரமான அரசியல் பிரதிகள். நவீன தமிழிலக்கியப் படைப்புகளின் ஆக்கத்தில் தொடக்க காலத்திலேயே சனாதனப் போக்கு ஊடுருவியிருந்தது. ‘மணிக்கொடி’ பத்திரிகை தொடங்கிய இலக்கியப் படைப்பாக்கங்களை மறுவாசிப்பிற்குட்படுத்தினால், பார்ப்பனியத்திற்கு ஆதரவான குரல்கள் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடியும்.

இலக்கியம் புனிதமானது என்று புனிதப் பிரதியாக்கி, உன்னத இலக்கியம் பற்றிய பேச்சுகளை உருவாக்கிய எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினர்தான். ‘எழுத்து’ போன்ற சிறுபத்திரிகைகள்மூலம் உருவான நவீன படைப்பாளா்களின் சிலா், சமகால அரசியல்மீது வெறுப்பையும் தீண்டாமையையும் அழுத்தமாக உருவாக்கினர். ஒரு வகையில், திராவிட இயக்கப் படைப்புகள் குறித்து ஒவ்வாமைக்குள்ளாகியிருந்தனர். எல்லாப் படைப்புகளும் ஒரு வகையில்

அரசியல் பிரதிகள் என்ற புரிதல் இல்லாமல் உன்னத இலக்கியம் என்று கொண்டாடுகின்ற பேச்சுக்குப் பின்னர், காத்திரமான சனாதன அரசியல் பொதிந்திருப்பதைக் கண்டறிந்திட முடியும்.

உன்னத இலக்கியப் படைப்புகள், ஐம்பதுகளில் பரவலாகிய திராவிடம், பொதுவுடைமைக் கருத்தியல்களுக்கு எதிரான அரசியலை முன்வைத்தன. எல்லா இலக்கியப் படைப்புகளும் பிரச்சாரங்கள்தான் என்ற அரசியலை மறைத்துவிட்டு, அரசியலற்ற புனிதப் பிரதிகளை உருவாக்கிட முயன்ற பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினரின் இலக்கியக் கொள்கைகளைத் தி.மு.க படைப்பாளர்கள் கேள்விக்குள்ளாக்கினர். கலை இலக்கியத்தில் சாதியின் ஆதிக்கத்தை ஒழித்து, உயர்சாதி இலக்கியப் படைப்பாளர்களின் சாதிய முகத்தை அம்பலப்படுத்தியதில் திராவிட இயக்கத்தினரின் பங்களிப்பு கணிசமானது. இலக்கியமும் வாசிப்பும் உயர் சாதியினருக்கானவை என்ற நிலையை மாற்றியமைத்துப் பரந்துபட்ட வாசகர் பரப்பை உருவாக்கியது,திராவிட இயக்கப் படைப்பாளர்கள்தான்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மேலை இலக்கியத் தாக்கம் காரணமாக, நவீன தமிழ் இலக்கியம் மெல்ல வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. மிட்டாமிராசுகள், புரோகிதர்கள், ஜமீன்தார்கள் நிலக்கிழார்களின் அதிகாரத்தினால் ஒடுக்கப்பட்டிருந்த பெரும்பான்மை தமிழர்களின் சீரழிந்த வாழ்க்கைச் சூழலில், இலக்கியம் என்பது பகல் கனவு. இத்தகு சூழலில், 1936ஆம் ஆண்டு வெளியான மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் எழுதிய, ‘தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ நாவல், குறிப்பிடத்தக்க படைப்பாகும். நாவலாசிரியை தேவரடியாராக்கி விலைமகளிராக்கி சுயமரியாதை இயக்கப் போராளி, மேடைப் பேச்சாளர், ‘குடிஅரசு இதழின் கட்டுரையாளர் ராமாமிர்தம் அம்மையார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

பெண்ணைத் தெய்வமாக்கிப் போற்றிக்கொண்டு, அன்றாட வாழ்வில் அடக்கி ஒடுக்கிடும் தமிழர் வாழ்க்கையில், சாஸ்திரங்களின் பெயரால் பெண்களைத் தேவரடியாராக்கி-விலைமகளிராக்கி-இழிவுபடுத்தும் சூழலின் கொடுமையை எதிர்த்து நாவல் புனையப்பட்டுள்ளது.

‘பிரிட்டானியத்தையும் பார்ப்பனியத்தையும்கூட எளிதில் எதிர்க்கலாம். இது தேவதாசி முறையை எதிர்ப்பது சாமானிய வேலை அன்று’ என்ற முடிவுக்கு வந்தோம் என்று நாவலின் பதிப்புரையில் நாவலாசிரியை குறிப்பிட்டுள்ளது, தற்செயலானது அல்ல. ‘தேவதாசிகள் இருக்க வேண்டும். தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ விரோதம் சட்ட விரோதம்’ என்று கூப்பாடு போட்ட சத்தியமுர்த்தி போன்றவர்களின் எதிர்ப்புக்குரல் சனாதனத்தின் வெளிப்பாடு.

பெண்ணுடலை வெறும் போகப்பொருளாக மாற்றிய தேவதாசி முறைக்கு மூலம், வைதீக சமயமும் கோயிலும்தான் என்ற விமர்சனம் கதைப்போக்கில் பதிவாகியுள்ளது. ‘பிராமணனும் தாசியும் நாட்டைக் கெடுக்கும் ஜாதியர்கள். பாவம், புண்ணியம் என்பது இவ்விடத்திலிருந்து உற்பத்தியான ஒரு போக்கிரித்தனமான வார்த்தை’ என குணபூஷணி குறிப்பிடுவது அன்றைய கேவலமான தமிழ்ச் சமூகத்துக்கு விடப்பட்ட சவால், பல்லாண்டுகளாகத் தமிழர் வாழ்வில் ஆழமாக ஊடுருவியிருந்த தேவதாசி முறையைப் பற்றிய உரையாடலைத் தொடங்கிவைப்பதில் நாவலாசிரியையின் முயற்சி வெற்றிபெற்றுள்ளது.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, 1949ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், தனது இலக்கிய அணுகுமுறையை மாற்றிக்கொண்டது. பண்டைய இலக்கியப் படைப்புகள், இராமாயணம். பெரியாரின் அணுகுமுறையிலிருந்து விலகிய தி.மு.க.வினர், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்றவற்றை முன்னிறுத்தித் தமிழ் மகாபாரதம் உள்ளிட்ட புராணங்கள் போன்றவற்றை முழுக்கப் புறக்கணித்த அடையாளத்தையும் பேச்சுகளையும் உருவாக்கிட முயன்றனர். தமிழரின் பண்பாட்டுப் பெருமையையும் வரலாற்றுப் பழைமையையும் ஆரிய மரபுக்கு எதிராக முன்வைத்தல் துரிதமாக நடைபெற்றது. தமிழ்ப் பண்பாட்டு அடிப்படையில் சமூக மாற்றங்களை உருவாக்குவதன்மூலம் நிலவும் சமூக மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கிய செயல்பாடு, தி.மு.க.வினரின் தனித்துவமாகும்.

தி.மு.க.வைத் தோற்றுவிப்பதில் முதன்மைக் காரணமாக விளங்கிய சி.என்.அண்ணாதுரை என்ற அறிஞர் அண்ணா தொடங்கி, இயக்க முன்னணித் தலைவர்களில் பலர் படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபட்டனர். திராவிட நாடு, தனிஅரசு, மன்றம், தென்றல், முரசொலி, திராவிடன், அறப்போர், இன முழக்கம், குடியரசு, நம்நாடு, மாலைமணி போன்ற பல்வேறு இதழ்கள் திராவிட இயக்கக் கருத்துகளுக்குச் சார்பான படைப்புகளை வெளியிட்டன. அன்றைய காலகட்டத்தில், நடுத்தர வர்க்கத்தினர் நாவல்களை விரும்பி வாசித்துக்கொண்டிருந்தனர். இத்தகையோரைக் கவர்ந்திட, நாவல் ஆக்க முயற்சிகளில் தி.மு.க. இயக்கத்தினர் முனைந்து செயல்பட்டனர்.

தி.மு.கழகத்தில் இணைந்து அரசியல்ரீதியாகவும் நாவல்கள் எழுதுவதிலும் செயல்பட்ட முக்கியமான நாவலாசிரியர்கள்: அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, கே.ஜி.இராதாமணாளன், எஸ்.எஸ்.தென்னரசு, டி.கே.சீனிவாசன், இராம.அரங்கண்ணல், தில்லை வில்லாளன்… இப்பட்டியல் இன்னும் நீளும்.

தி.மு.க.வினரின் நாவல் ஆக்கங்களில்… தமிழ்ப் பண்டிதருக்கு மட்டுமே புரியும் மொழியைக் கைவிட்டு, ஏற்கெனவே மக்களுக்கு அறிமுகமான மொழியைச் செழுமைப்படுத்திக் கையாண்டதில் தி.மு.க.வின் அரசியல் நோக்கம் பொதிந்துள்ளது. நாவல் கருத்து வெளிப்பாட்டுக் கருவி என்பது அன்றைய காலகட்டத்தில் தி.மு.க. சார்புப் படைப்பாளர்களின் நம்பிக்கை.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!இதனால் உணர்ச்சி பொங்கிடும் அடுக்குமொழியின் வீச்சுகளுடன் வெளியான நாவல்கள் வாசிப்பில் மகிழ்வூட்டின. பெரும்பாலான நாவல்கள், இதழ்களில் தொடராக வெளிவந்தமையால், வாசகரை முன்னிறுத்திய பிரதியானது, வாசகருடன் நேரடியாகவும் நெருக்கமாகவும் உறவாடியது; வாசிப்பின்மூலம் விவாதத்தைத் தூண்டியது. சனாதன மதம், காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த தமிழர் வாழ்க்கையில் மாற்றத்தினை உருவாக்கிட தி.மு.க. எழுத்தாளர்கள் நாவல் வடிவத்தைப் பெரிதும் பயன்படுத்தினர்.

அறிஞர் அண்ணா எழுதியுள்ள நாவல்கள், மிகை யதார்த்தமான விவரிப்பில் உணர்ச்சி பொங்கிடும் இயல்புடையன. வகைமாதிரியான கதைமாந்தர்கள், செயற்கையான சம்பவங்கள், திடுக்கிடும் திருப்பங்கள். அலங்காரமான மொழிநடை, அடுக்குச்சொற்கள் என விரித்திடும் நாவல்கள், ஓரளவு இலக்கிய அறிமுகமான வாசகரையும் கவர்ந்திழுக்கும் வல்லமை படைத்தவை. அண்ணா உருவாக்கிய கதைசொல்லல், பெரும்பான்மையான திராவிட இயக்கப் படைப்பாளர்களுக்கு முன்மாதிரியாக விளங்கியது.

கணவனால் மனப்பிறழ்வு நோயாளியாக மாற்றப்பட்ட தங்கம், அதே கணவனுக்காகக் கொலைப்பழியை ஏற்று, வீட்டைவிட்டு வெளியேறுதல் (ரங்கோன் ராதா), சமூக மாற்றத்தினுக்காகப் போராட முன்வரும் பார்வதி எதிர்கொள்ளும் சிக்கல்கள் (பார்வதி பிஏ), குடும்ப வறுமைச்சூழல் காரணமாகச் சீரழிந்த வாழ்க்கை வாழ்ந்திட்ட காந்தா குமாஸ்தாவின் பெண்), கிழவனைத் திருமணம் செய்து துயரமடையும் இளம் பெண்ணின் அவல வாழ்வு (கபோதிபுரக் காதல்) எனப் பெரும்பாலான அண்ணாவின் நாவல்கள் பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன. தனித்து இயங்கமுடியாத நிலையில், ஆணின் மேலாதிக்கத்தினை ஏற்று ஆணைச் சார்ந்து இயங்கிடும் பெண்பற்றிய சித்திரிப்பில் தனித்து அடையாளம் எதுவுமில்லை. இளவயதுப் பெண்ணுக்கும் வயதான ஆணுக்குமான திருமண எதிர்ப்பு, விதவை மறுமண ஆதரவு, சாதி மறுப்புத் திருமண ஆதரவு போன்ற அம்சங்களுக்கு நாவல்களில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன

மூடநம்பிக்கை எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, கைம்பெண் மறுமணம் போன்ற சமூகப் பிரச்சினைகளை முன்வைத்து அண்ணா எழுதிய நாவல்கள் திராவிடக் கருத்தியலை அழுத்தமாகப் பிரச்சாரம் செய்தன்.

அறிஞர் அண்ணா எழுதிய நாவல்கள்: பார்வதி பிஏ, ரங்கோன் ராதா. என் வாழ்வு, தசாவதாரம், கலிங்க ராணி குடியரசு, திராவிட நாடு, காதல் ஜோதி, கபோதிபுரக் காதல்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

மூடநம்பிக்கைகளை ஒழித்துப் பகுத்தறிவை வளர்ப்பதும் சாதி, சமய வேறுபாடுகளை நீக்கி, மனிதச் செயல்பாடுகளின் போலித்தனத்தை அம்பலப்படுத்துவதும் சமத்துவத்தை முன்னிறுத்துவதும் தமிழரின் பெருமையைப் பேசுவதும் கலைஞர் எழுதிய நாவல்களின் நோக்கங்களாக உள்ளன. 1951 ஆம் ஆண்டு, ‘பாயும் புலி பண்டார வன்னியன்’ நாவல் 1991 ஆம் ஆண்டில், தொடர்கதையாக குங்குமம் இதழில் வெளியானது. ஓய்வறியா அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த கலைஞர். நாற்பதாண்டுக் காலத்தில் தொடர்ந்து நாவல் எழுதியது சாதனைதான். தமிழ்ச் சமூகத்தில் மாற்றங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திட கலைஞருக்கு நாவல்கள் பெரிதும் உதவியுள்ளன.

கலைஞர், நாட்டில் நிலவுகின்ற சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கேள்விக்குள்ளாக்கி, தமிழ் அடையாளத்துடன் தமிழர் அனைவரும் ஒன்றிணைந்திட வேண்டுமென்ற நோக்கில், ‘பாயும் புலி பண்டார வன்னியன்’ நாவலை எழுதியுள்ளார். வரலாற்றையும் புனைவையும் கலந்து எழுதப்பட்டுள்ள நாவலில் இடம்பெற்றுள்ள பட்டியல் இனத்தைச் சார்ந்த சுந்தரலிங்கக் குடும்பன் கதைமாந்தர் தனித்துவமானது.

கரிகால் பெருவளத்தான் காலத்தில் சோழ, பாண்டிய நாடுகளின் வரலாற்றையும் பாண்டிய நாட்டுத் தூதர் ரோமாபுரியில் அகஸ்டஸ் சீசர் காலத்தில் பொறுப்பேற்றிருந்த பின்புலத்தில் விரிந்திடும் ‘ரோமாபுரிப் பாண்டியன்’ நாவலை வரலாற்றை மீட்டுருவாக்கிக் கலைஞர் எழுதியுள்ளார். பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டிற்கும் ரோமாபுரிக்கும் இடையில் நிலவிய உறவு என்ற கதையாடல் தமிழரின் தொன்மைக்கு அடையாளமாக விளங்குவதை நாவலாக்கியுள்ளதில் அரசியல் பொதிந்துள்ளது.

‘பொன்னர் சங்கர்’ நாவல் நாட்டார் வரலாறு, புராணியத்தன்மையுடன் அதியற்புத நிகழ்ச்சிகள் புனைவாக உருவாகி, வீரக் கதையாடலாக மாறியுள்ளதை விவரிக்கிறது. மனிதப் பண்புகளின் மாண்புகளை விளக்கிடும் கலைஞரின் நாவலாக்க முயற்சி, ஒரு வகையில் வரலாற்றை மீட்டுருவாக்கிட முயன்றுள்ளது.

சாதி வேறுபாடுகளைக் கடந்து, சமத்துவத்தைப் பேணிட வேண்டுமென்ற கருத்தை வரலாற்றுப் பின்புலத்தில் கலைஞரின் ‘தென்பாண்டிச் சிங்கம்’ நாவல் பதிவாக்கியுள்ளது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

அழகும் இளமையும் மிக்க கைம்பெண் எதிர்கொள்கின்ற அவலங்களையும் அவர்கள்மீது சுமத்தப்படும் கயமைகளைப் போக்கிட வேண்டுமென்றும் ‘ஒரு மரம் பூத்தது’ நாவல் சித்திரித்துள்ளது. சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட நிலையில் ஏற்படுகின்ற சிக்கல்களைத் திவாகர்-தேவகி கதையாடல்மூலம் கலைஞர் விவரித்துள்ளார்.

‘வெள்ளிக்கிழமை’ நாவலில் மூடநம்பிக்கை காரணமாகத் துயரமடையும் சராசரி மனிதர்கள், வெள்ளிக்கிழமை அன்று பெண் பார்க்க வரும் அழகப்பன் எதிர்கொள்ளும் அனுபவங்கள் தொடங்கி விரியும் நாவலில் மர்மங்களும் திடுக்கிடும் திருப்பங்களும் நிரம்பியுள்ளன. வெள்ளிக்கிழமை நாள் புனிதமானது; நல்ல செயல்கள் செய்திட ஏற்றது என்ற மூடநம்பிகையைத் தகர்த்திட, ‘வெள்ளிக்கிழமை’ நாவலைக் கலைஞர் எழுதியுள்ளார். கடவுள் நம்பிக்கை தேவையற்றது; உருவ வழிபாடு ஒழிக்கப்படவேண்டியது; நாள் நட்சத்திரம் பார்த்தல் கூடாது போன்றவறை வலியுறுத்துகிற கலைஞரின் மூடநம்பிக்கைக்கு எதிரான குரல் நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.

மூடநம்பிக்கையை எதிர்க்கும் வகையில் நிகழ்வுகள் அடங்கிய ‘சுருளிமலை’ நாவலில் சுவாரசியத்திற்காகச் சேர்க்கப்பட்ட செயற்கையான சம்பவங்கள் நிரம்பியுள்ளன.

‘ஒரே ரத்தம்’ நாவல், இன்றைய நவீன வாழ்க்கையில் சாதிக் கலவரங்களுக்குக் காரணமான சாதி வெறியின் பின்புலத்தில் விரிந்துள்ளது.

கலைஞரின் ‘புதையல்’ நாவல், பணத்தைத் தேடி அலையும் மனித மனங்களின் விநோதங்களையும் கொடூரங்களையும் பதிவாக்கியுள்ளது.

கலைஞர் எழுதிய சமூக நாவல்கள்: புதையல், சுருளிமலை, வெள்ளிக்கிழமை, இரத்தக்கண்ணீர், வான்கோழி, ஒரே ரத்தம், ஒரு மரம் பூத்தது.

கலைஞர் எழுதிய வரலாற்று நாவல்கள்: ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பாயும்புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர்.

திமு.க.வின் அரசியலை மேடைகளில் முழங்கிய ஏ.வி.பி. ஆசைத்தம்பி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிவர். வாலிபப் பெரியார் என்று போற்றப்பட்ட ஆசைத்தம்பி, அன்றைய காலகட்டத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நாவல்களை எழுதினார். கேளிக்கைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் வெகுஜன இதழ்களில் எழுதப்பட்ட நாவல்களுக்கு மாற்றாக நாவல்களைப் படைத்த ஏ.வி.பி.ஆசைத்தம்பிக்குப் பருண்மையான அரசியல் நோக்கமிருந்தது. ‘கசந்த கரும்பு’ நாவல், ‘பராசக்தி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக விரிந்துள்ளது. ‘டாக்டர்’ நாவலின் கதையாடலில் வடவர் தமிழகத்தைச் சுரண்டுதல், பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, பாலியல் புரிதல் அற்ற கணவன் – மனைவிக்கிடையே பிரிவு போன்றவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

ஏ.வி.பி.ஆசைத்தம்பி எழுதிய நாவல்கள்: மனித தெய்வம், கசந்த கரும்பு, தந்தையின் ஆணை, காதலும் கண்ணீரும், சிலந்திக்கூடு, முள், கொலைகாரி, கேட்கவில்லை, டாக்டர், நினைவுச் சுழல், நடமாடுங் கல்லூரி, வெயிலும் நிழலும், காதல் மாளிகை, விந்திய வீரன், அரசகுமாரி, தியாகச்சுடர் வாழ்க்கை, வாழ்வில் இன்பம், வாழ்க மணமக்கள் இரவில் வந்தவன். அவள் வாழ்வு, ஆண்களை நம்பலாமா?, மனைவி கட்டிய தாலி, வறண்ட என் மாமி, கசப்பும் இனிப்பும், கிழக்கும் மேற்கும்.

கே.ஜி.இராதாமணாளன், பொதுவாசிப்புக்குரிய, பகுத்தறிவுச் சிந்தனைகளைக்கொண்ட நாவல், நாடகங்களை எழுதினார்.  கே.ஜி.இராதாமணாளனின் ‘அன்னம் நாவலில் சாதிவெறி பின்புலமாக இருப்பினும் தமிழகக் குடும்ப அமைப்பில் பெண்கள் எதிர்கொள்ளும் அவலநிலை பதிவாகியுள்ளது. கன்னிப் பருவத்தை அடைந்த பெண்ணைக் கட்டுக்காவலோடு வீட்டிலேயே அடைத்துவைக்கின்றனர். அந்நிய ஆண்களைப் பார்ப்பதற்கோ அவர்களோடு பேசுவதற்கோ, பெண்களுக்கு உரிமையில்லை. பலரோடு பழகிப்பார்த்தால்தானே அவள் மனம் விரியும் மணப்பதற்கு ஏற்றவன் என்ற தெளிவு பிறக்கும் என்று வசந்தா கடிதத்தில் குறிப்பிடுவது பெண்ணிய வாசிப்பில் முக்கியமானது. பெண்ணுக்குத் தனிப்பட்ட மனம் உண்டு, அவளுக்கென்று சுயமான தேர்வு தேவை என்ற கருத்தை முன்வைத்திடும் நாவலாசிரியரின் கருத்து, அன்றைய சமூகச் சூழலில் முக்கியமானது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

கே.ஜி. இராதாமணாளன் எழுதிய நாவல்கள்:அன்னம், மனப்புயல், பாண்டியன், திருமேனிபாண்டியன், தாராவின் புன்னகை, கல்லறைக் குயில், இளவரசி, மறவர் குலத்து மலர்க்கொடி, கல்லறைக் குயில், பொற்சிலை, வீணை, சிவந்த கன்னம், தேன்மொழி, பாலைவனம், பெண், நீரோ, சபதம், மூடுபனி, களப்பலி, பசி, எழிலரசி கிளியோபாட்ரா, பாசக்கனல், அரக்கு மாளிகை, அரண்மனை, அழகிகள், உயிரோவியங்கள்.

திராவிட இயக்க நாவலாசிரியர்களில் டி.கே. சீனிவாசனின் எழுத்து தனித்துவமானது. சாதி வேற்றுமை, சனாதன எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண்ணுரிமை, பகுத்தறிவு சார்ந்து திராவிட இயக்கக் கொள்கைகள் சார்ந்த படைப்புகளை எழுதியவர்.

மரபு வழிப்பட்ட குடும்பம், பெண்பற்றிய புனைவுகளை ‘ஆடும் மாடும்’ நாவல் புறக்கணித்துள்ளது. பால் சமத்துவமின்மை காரணமாகப் பெண்ணின் இருப்பு புறக்கணிக்கப்படுவது, நாவலில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பத்மா, மோகனா, சுந்தரி ஆகிய மூன்று பெண்களை மையமாகக்கொண்டு விரியும் கதைக்களன் வாசகரை வாசிப்பின் வழியே விவாதத்திற்குள் இழுக்கின்றது. சுயமரியாதை இயக்கப் பின்புலம், மெல்லிய தொனியில் கதைப்போக்கில் வெளிப்படுகின்றது.

தமிழகச் சூழலில் ஆண், பெண் உறவினை முன்னிறுத்தி, வாழ்க்கை குறித்த அடிப்படையிலான அம்சங்களைத் தத்துவப் பின்புலத்தில் விரித்திடும் கதைப்போக்கு. இன்றைய வாசிப்பில் பெண் பற்றிய கேள்விகனை எழுப்புகின்றது. மோகனா என்ற பெண்ணை முன்வைத்து ஆண் மேலாதிக்கப் போக்கினை விமர்சித்துள்ள டி.கே.சீனிவாசனின் எழுத்து வீரியமானது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

நாவல் கருத்துத்தளத்தில் விவாதங்களுக்கு முன்னுரிமை தந்திருப்பதனால் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள கருத்துச் சிதறல்கள் முக்கியமானவையாக உள்ளன. அவற்றில் சில:

“அவளுக்கும் புகழுக்கும் இடையில் ஒரே ஒரு படுக்கையறை.*

“கண்டபடி திரியும் காட்டு விலங்குகளிடம் இருந்து தப்பிக்கத்தான் பெண், குடும்பம் என்ற அமைப்பிற்குக் கட்டுப்பட்டு அடிமையாகி விட்டாள்.”

“ஆணுடைய தொடர்பு மட்டும் ஏற்படாவிட்டால், பெண் பேயாகி விடுவாள். பெண்ணுடைய தொடர்பு ஏற்படாவிடில் ஆண் மிருகமாகி விடுவான்.”

ஆணின் தேவைக்காகவே படைக்கப்பட்டவள் பெண். பெண்ணின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு குறித்த அக்கறை இல்லாமல், அவள்மீது அதிகாரம் செய்வது ஆணின் இயல்பு என நம்பிக்கொண்டிருக்கும் பொதுப்புத்தியைச் சிதைத்து, அதிர்ச்சி மதிப்பீடுகளை உருவாக்கியுள்ளார், டி. கே.சீனிவாசன். பெண்ணைப் போற்றும் சமுதாயமே நாகரிகமடைந்த சமுதாயமாகக் கருதப்படும். அப்படிப் போற்றாத சமுதாயம், நசிந்து போய்க்கொண்டிருக்கிறது என்று பத்மா குறிப்பிடுவது, திராவிட இயக்கக் கருத்தின் வெளிப்பாடாகும். ‘ஆடும் மாடும்’, ‘ஊர்ந்தது உயர்ந்தால், ‘மலர்ச்சியும் வளர்ச்சியும்’ போன்ற நாவல்களை டி.கே.சீனிவாசன் எழுதியுள்ளார்.

தி.மு.க.வின் அரசியலை முகவை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த எஸ்.எஸ். தென்னரசுவின் எழுத்துகள், கண்ணதாசன் நடத்திய ‘தென்றல் பத்திரிகையில் தொடங்கியது. தென்னரசு சமூக நீதி போராட்டம் பங்களிப்புகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பு, மாவட்டச் செயலாளர், தொடர்ந்தன. எனினும், அவர் தனது படைப்பிலக்கியத்தையும் சட்டமன்றப் பிரதிநிதி என அவருடைய அரசியல் செயல்பாடுகள் இடைவிடாமல் தொடர்ந்தார். ‘தென்னரசு’ என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். சிறுகதைகள், நாடகங்கள் புதினங்கள் போன்றவற்றைப் படைத்த தென்னரசு, திராவிட இயக்கக் கருத்தியலைத் தன்னுடைய படைப்புகளில் ஆழமாகப் பதிவாக்கியுள்ளார். இன்று சேது நாடு எனக் குறிப்பிடப்படுகிற சிவகங்கைச் சீமையின் அரசியல், சமூக வாழ்க்கைப் பாடுகளைச் ‘சேது நாட்டுச் செல்லக்கிளி’ என்ற நாவலில் பதிவாக்கியுள்ளார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

எஸ்.எஸ்.தென்னரசுவின் நாவல்கள்: மலடி பெற்ற பிள்ளை, மான்கொம்பு,தங்கச்சி மடம், ஆனந்த பைரவி, கண்மணி, நகமும் சதையும், வைராக்கியம்,ராஜபவனம், மயிலாடும் பாறை, செம்மாதுளை, கோபுர கலசம், சந்தனத்தேவன், சேது நாட்டு செல்லக்கிளி, துங்கபத்திரை, தைமூரின் காதலி, அவள் ஒரு கர்நாடகம், பாடகி, குஞ்சரத்தின் கதை, மிஸஸ். ராதா.

தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க.அன்பழகன் எழுதிய சமூக நாவலின் பெயர் அழகரசி.

இராம. அரங்கண்ணல் எழுதியுள்ள நாவல்கள் தி.மு.க.வின் அரசியல் கருத்துகளைப் பரப்புவதில் முக்கிய இடம் வகித்தன; சமூக சீர்திருத்தக் கருத்துகளுக்கு முன்னுரிமை அளித்தன. வெறுமனே கதைசொல்லலுக்கு அப்பால் அன்றைய காலகட்டத்தில் நிலவிய மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் நாவல்களின் கதையாடல்கள் விரிந்துள்ளன. வெண்ணிலா, கடிகாரம், அறுவடை, இதயதாகம் போன்ற நாவல்களை இராம. அரங்கண்ணல் எழுதியுள்ளார்.

தி.மு.க.வின் வளர்ச்சியில் இதழ்களின்மூலம் பங்காற்றியுள்ள தில்லை வில்லாளன் எழுதியுள்ள ‘மனப்போர்’ நாவல், சமூகப் பிரச்சினைகளைச் சித்திரிக்கிறது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

திராவிட இயக்கத்தினர் நாவல்கள் புனைந்தபோது, அவை தமிழரின் கருத்துப்போக்கில் அழுத்தமான பாதிப்புகளை உருவாக்கின. பெரும்பாலான நாவல்களில் நேரடியாகத் திராவிட இயக்கக் கருத்துகள் பிரச்சாரம் செய்யப்படவில்லை. கதையில் இடம்பெறும் சம்பவங்களின் வழியாகக் கருத்தியல் பிரச்சாரம் வெளிப்பட்டது.

ஏழை – பணக்காரன் முரண், மூடநம்பிக்கைக்கு எதிரான குரல் போன்றவை வாசிப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தின; கட்சித் தொண்டர்களுக்கு இயக்கப் பணியாற்றப் புத்துணர்வைத் தந்தன. பொதுவாகப் பெரும்பாலான நாவல்கள் பிரச்சினைகளை மேலோட்டமாகவே அணுகின. இதனால், வெகுஜன வாசகர்கள் நாவலை வாசித்துவிட்டு உற்சாகம் அடைந்தனர். வாசகரைக் கவர்ந்திட வேண்டும் என்ற நோக்கில் அடுத்தடுத்த சம்பவங்களுடன் செயற்கையான கதைப்போக்கில் விரிந்திட்ட சில நாவல்கள் தட்டையாக உள்ளன. ‘தாசிகளின் மோசவலை’, ‘ஆடும் மாடும்’ ஆகிய இரு நாவல்கள் திராவிட இயக்கச் சார்புடைய நாவல்களில் தனித்துவமானவை.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - தி.மு.க. நாவல்கள் சித்திரிக்கும் தீராவிடக் கருத்தியல்!

திராவிட இயக்கப் படைப்பாளர்கள், தங்களுடைய படைப்புகளில் இதிகாசங்கள், புராணங்கள் மூலம் இதுவரை புனிதப்படுத்தப்பட்ட ஆகமங்கள், கடவுள்கள், மடாதிபதிகள், பூசாரிகள், இதிகாச மாந்தர்கள் போன்றோரைப் பகடிக்குள்ளாக்கினர். வைதீக சனாதனம், பண்பாட்டில் புனிதமாகப் புனைந்துரைத்தவற்றைக் கேலிக்குள்ளாக்கி, திராவிட இலக்கியப் படைப்புகள் கலகத்தைத் தொடங்கிவைத்தன திராவிட இலக்கியப் படைப்பாளர்கள் எழுதிய நாவல்களின் கதையாடலுக்குள் ஏழை, திருடன், ஆலைத் தொழிலாளி, வண்டிக்காரன், தெருப்பொறுக்கி வேலைக்காரி, கூலிக்காரன், பாலியல் தொழிலாளர் போன்ற விளிம்புநிலையினர் இடம்பெற்றிருந்தனர். சமூகரீதியில் இதுவரை உயர்நிலை வகித்தவர்களின் உன்னதங்களை நாவல்கள்மூலம் பகடி செய்வதன்மூலம் சமூக மதிப்பீடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

 

ஏற்கெனவே நிலவிய அதிகாரத்தின் வெளிப்பாடான பண்பாட்டினைப் புரட்டிப்போட்டுக் கலகம்செய்து, கலகப் பண்பாட்டினைத் திராவிட இயக்க நாவலாசிரியர்கள் முன்வைத்தனர். திராவிட இயக்கத்தினரின் கலக இலக்கியப் படைப்புகள் மொழியைக் கட்டுடைத்தல், இலக்கண மீறல், கூச்சமில்லாத பேச்சு, படைப்பாளர் குறுக்கீடு, யதார்த்தமற்ற கதையாடல், மிகையான வருணனை, அடுக்குமொழி முரட்டுப் பேச்சு போன்றவற்றின் கலவையாக அமைந்துள்ளன காலங்காலமாக மதம், சாதி கட்டமைத்துள்ள பண்பாட்டின் முகத்திரையைச் கிழித்து அம்பலப்படுத்துவது என்ற இலக்கியச் செயல்பாட்டினைத் திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகள் முன்வைத்தன. இதனால் சனாதனத்தின் பின்புலத்தில் சமூக அடுக்கின் உச்சத்தில் அதிகாரத்துடன் வீற்றிருந்த பார்ப்பனியச் சார்பு எழுத்தாளர்கள், திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகளை முற்றாகப் புறக்கணிக்கும் அரசியல் நடைபெற்றது.

தி.மு.க.வினர் 1967ல் தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் படைப்பாக்க முயற்சிகளைக் குறைக்கத் தொடங்கினர். இன்று திராவிட இயக்கக் கருத்துகளை நாவலின் வழியே வெளிப்படுத்த முயலும் படைப்பாளர் என்று இமையத்தைச் சொல்லலாம். ஒரு காலத்தில் வாசகர்களிடையே பிரபலமடைந்திருந்த தி.மு.க. நாவலாசிரியர்களின் நாவல்கள், தமிழ்நாட்டில் திராவிட இயக்கக் கருத்துகள் பரவிட தளமிட்டன என்பதுதான் உண்மை. இன்றைய சூழலில், திராவிட இயக்க நால்களை மறுவாசிப்பு செய்யும்போது, கடந்தகாலத்தில் நிலவிய சமூக மதிப்பீடுகளையும் அரசியலையும் அறிந்திட சமூகப் பதிவுகளாக விளங்குகின்றன. அந்த வகையில், அவை வரலாற்று ஆவணங்கள்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!

MUST READ