கரூர் சம்பவத்தில் பறிபோன 41 உயிர்களுக்கு நீதி கிடைக்குமா? என்று யாரும் பார்க்கவில்லை. மாறாக அந்த மரணங்களை வைத்து யார்? ஆதாயம் அடைய போகிறார்கள் என்பது தான் விவாதமாகி உள்ளதாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.


கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடர்பாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் வழக்கில் விஜய் பெயர் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்படும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. இந்த செய்திகளை பார்க்கும்போது சிபிஐ வேண்டும் என்றே செய்திகளை கசிய விடுவது தெரிகிறது. பாஜக இவ்வளவு நெருக்கடிகளை கொடுத்த போதும் எடப்படி வலிக்காதது போன்று தவெகவினர் நடிக்கின்றனர்? நிர்மல் குமார், விஜயை சாட்சியாக விசாரிக்க தான் சம்மன் அனுப்பப்பட்டதாக சொல்கிறார். கரூர் விவகாரத்தில் பல சாட்சிகள் உள்ளபோது விஜயை மட்டும் ஏன் டெல்லிக்கு அழைத்து விசாரிக்கிறார்கள்? பொங்கல் விடுமுறைக்கு விஜய் தான் விடுப்பு கேட்டார்கள் என்றெல்லாம் தகவல்களை கசிய விடுகிறார்கள். கரூர் விவகாரத்தில் சிபிஐயின் வலையில் போய் விஜய் வசமாக சிக்கியுள்ளார். அது அவராகவே சென்று சிக்கினாரா? அல்லது பாஜக விரித்த வலையில் சென்று சிக்கினாரா? என்றால் இரண்டும் இணைந்ததுதான். கரூர் சம்பவத்தில் கரூர் போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆர்-ஐ அடிப்படையாக கொண்டு சிபிஐ விசாரணைக்கு எடுக்கும்போது, தவெக தரப்பில் ஒரு எதிர் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் அது அவர்களுக்கு தெரியவில்லை.

கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் முக்கியமான விஷயம் என்பது, அருணா ஜெகதீசனின் ஆணையத்தை நிறுத்தியதாகும். இந்த வழக்கில் எக்காரணம் கொண்டும் உண்மை வெளியே வந்துவிடக்கூடாது. உண்மையை தீர்மானிக்கும் இடத்தில் சிபிஐ மட்டும் தான் இருக்க வேண்டும். வேறு யரும் இருக்கக்கூடாது என்பதை அது உத்தரவாதப்படுத்தியது. உதாரணமாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் மட்டும் போடாமல் இருந்தால், சிபிஐ ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றம்சாட்டி, மக்கள் மீது பழிபோட்டு தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்காது. எந்த முகாந்திரமும் இல்லாமல் மக்களை சுட்டுக்கொன்ற எந்த அதிகாரி மீதும் சிபிஐ குற்றம்சாட்டவில்லை. அருணா ஜெகதீசன் ஆணையம் வாயிலாக தான் நடந்தது மக்களுக்கு தெரிந்தது. அப்படியான ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது என்பதற்காக தான் கரூர் விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையத்தை நிறுத்தினார்கள். இதன் விளைவால் தற்போது சிபிஐ கைகளில் குடுமி உள்ளது. 100 சதவீதம் அவர்கள் சிபிஐ கைகளில் சிக்கியுள்ளனர். தப்பிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது.

இந்தியாவில் பொதுமக்கள் இறப்பிலும் ஆதாயம் தேடுகிற கட்சி என்றால் அது பாஜக மட்டும்தான். பாஜக சொந்த முறையில் நிறைய படுகொலைகளை நிகழ்த்தி, ஆதாயம் தேடியுள்ளது. அதேநேரம் மற்றவர்கள் செய்தாலும், அவர்கள் ஆதாயம் தேடுவார்கள் என்பது கரூர் சம்பவத்தில் தெரிய வருகிறது. இதன் மூலமாக பாஜகவை அதிபுத்திசாலிகள் என்றோ, எல்லாம் வல்லவர்கள் என்றோ எடுத்துக்கொள்ள தேவையில்லை. அவர்களால் அதிமுக, ஓபிஎஸ், டிடிவி போன்றவர்களையே பாஜகவினரால் சமாளிக்க முடியவில்லை. கரூர் வழக்கு தற்போதைக்கு தீர்வு கிடைக்காது. சிபிஐ, விஜயை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். சி.டி. நிர்மல்குமார் சொல்வதை பார்க்கும்போது, ஒருவேளை நயினார் நாகேந்திரன் சொன்னது போன்று கரூர் சம்பவத்திற்கான பழியை செந்தில் பாலாஜி மீது போட்டு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவார்களா? என்று எதிர்பார்க்கலாம். அப்படி ஒரு விஷயத்தை அவர்கள் செய்தால், அதற்கு பதிலாக என்டிஏவில் விஜய் சேர வேண்டி வரும்.

இல்லாவிட்டால் விஜயை வைத்து திமுகவின் வாக்குகளை எப்படி சிதறடிப்பது என்று யோசிக்கலாம். ஆனால் அது நடக்குமா? என்பது கேள்விக்குறி. காரணம் திருப்பரங்குன்றம் விவகாரம், தேவாலய தாக்குதல் சம்பவங்கள் குறித்து விஜய் வாய் திறக்காததால், சிறுபான்மை மக்கள் அவரை நம்ப மாட்டார்கள். தற்போது ஜான் ஆரோக்கியசாமி வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர்த்து அந்த கட்சி என்பது இயற்கையானதாக உருவானது கிடையாது. பல்வேறு கட்சிகளில் இருந்து ஆட்களை வாங்கி கட்சியை உருவாக்கியுள்ளனர். கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையின்போது போலீசார் தடுத்தும் ஆதவ் அர்ஜுனா வாகனத்தை உள்ளே எடுத்துச்சென்றது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். போதுமான அளவுக்கு வீடியோ பதிவுகள் உள்ளன. எனவே இவர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் போலீசாருக்கு எதிராக எதையும் நிரூபிக்க முடியாது. அதேபோல், பாஜக எப்படியாவது தமிழக அரசை வழக்கில் இழுத்துவிட நினைத்ததால் செந்தில் பாலாஜியையோ, கட்சியினரையோ ஒன்றும் செய்ய முடியாது. அதிகபட்சம் உள்ளூர் காவல்துறையினர் மீது அலட்சியமாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்யலாம். இதற்கு ஆதாரங்களை அவர்களால் தயாரிக்க முடியாது.

விஜய், கரூரில் இருந்து திருச்சி போகிற வழியில் இடையில் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதாக செய்திகளில் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு நிர்மல் குமார் மலுப்பலான பதிலை சொல்கிறார். இதில் துயரமான செய்தி என்ன என்றால் சினிமாவை விட்டு மக்களுக்காக வருகிறேன் என்று விஜய் சொன்னார். ஆனால் மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கவில்லை. மாறாக நாம் தான் அவர் பிரச்சினைக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 41 பேருக்கு நீதி கிடைக்குமா? என்று யாரும் பார்க்கவில்லை. 41 பேரின் இறப்பை வைத்து யார் அரசியலில் ஆதாயம் அடைய போகிறார்கள்? ஜனநாயகன் படம் எப்போதும் வெளியாகும்? என்பதுதான் தற்போது விவாத பொருள். மக்களுடைய எந்த பிரச்சினை குறித்தும் கவலைப்படும் நிலையில் அவர்கள் இல்லை. ஆனால் மக்கள் விஜய் குறித்தும், ஜனநாயகன் படம் குறித்து கவலைப்படுவதும் தொடர்கிறது. இப்படியான நாடு, மக்கள் விஜய்க்கு வேறு எங்கேயும் கிடைக்க மாட்டார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


