எந்த மக்கள் பிரச்சினையிலும் களத்திலும் இல்லை, கருத்திலும் இல்லை என்கிறபோது விஜய் எப்படி தன்னை அரசியல்வாதி என்று சொல்கிறார் என அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. விஜய்க்கு எந்தவித வரலாற்று தொடர்ச்சியும் கிடையாது. சினிமா கவர்ச்சியை வைத்து கூட்டம் வருகிறது. அவர்களை ஆட்சிமாற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற கற்பனைவாதத்தில் அவர் இருக்கிறார். அரசியலில் முழுமையான நம்பிக்கையை பெறுவது என்பது உள்ளது. சிவாஜி, கமல், பாக்கியராஜ், சிரஞ்சீவி, டி.ராஜேந்தர் போன்று பல்வேறு நடிகர்கள் கட்சி நடத்தியுள்ளனர். சினிமா கவர்ச்சியில் அவர்களுக்கு எந்த எல்லை இருக்கிறதோ, அதுவரை அவர்கள் பயணித்துள்ளனர். கூட்டம் கூடுகிறது என்பதற்காக அவர்கள் எல்லோரும் என்னுடைய வாக்காளர்கள் என்று நினைக்கக்கூடாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்தால், அதற்கு வழிமுறை வேண்டாமா? சாமானியர்களும் அரசியலில் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்தது திராவிட இயக்கம் தான். ஆதவ் அர்ஜுனாவோ, விஜயோ சாமானியர்கள் அல்ல. அவர்களுக்கு சமானியர்களின் வாழ்க்கை என்ன என்றே தெரியாது.

சினிமாவில் 30 வருட உழைப்பு இருப்பதால் தான் விஜய் வசூல் நாயகனாக உள்ளார். அரசியலில் மட்டும் எந்த அனுபவமும் இல்லாமல் நேரடியாக வருகிறேன் என்பது ஏற்புடையதல்ல. தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருப்பதால் அவர்கள் உற்சாகமாக உள்ளார். அதேவேளையில் வயதானவர்களிடம் சென்று விசில் ஊத வேண்டாம் என்று செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிமிடம் வரை தொண்டர்கள் இருக்கும் எதாவது ஒரு கட்சி விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனரா? ஆட்சியில் பங்கு தருவேன் என்று சொன்னபோதும், எவரும் கூட்டணிக்கு வரவில்லை. விஜய் அரசியலில் தனித்து விடப்பட்டிருக்கிறார். அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அஜெண்டா என்பது, திமுகவில் இருக்கக்கூடிய சிறுபான்மை வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்பதுதான். அதன் காரணமாகவே கிறிஸ்துமஸ் விழாவுக்காக சென்றார். மறுநாள் கிறிஸ்துமஸ் விழாவில் தாக்குதல் நடந்தபோது வாய் திறக்கவில்லை. திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவேன் என்று குரல் எழுப்பியவர்களுக்கு எதிராக ஒரு கண்டனக் குரல் உண்டா? அந்த பிரச்சினைக்கு தவெக தொண்டர்கள் களத்திற்கு வந்தனரா? எந்த பிரச்சினையிலும் களத்திலும் இல்லை, கருத்திலும் இல்லை என்கிறபோது அவர் எப்படி தன்னை அரசியல்வாதி என்று சொல்கிறார்.

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி என்று விஜய் ஒப்புக்கொண்டுள்ளார். அதிமுகவை ஊழல் அடிமைக்கட்சி என்று சொல்வதன் மூலமாக அவர் அதிமுக கூட்டணியில் இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. தவெகவுக்கும், திமுகவுக்கும் போட்டி கிடையாது. தவெகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே தான் போட்டியே. மூன்றாவது இடத்திற்கு வரப் போகிறார். களத்தில் திமுக, அதிமுக இடையே தான் பேட்டி நிலவுகிறது. 3வது இடத்திற்கு வருவதற்கான போட்டியில் தவெகவும், நாதகவும் போட்டியிடுகிறார்கள். பாஜக இரண்டாவது இடத்திற்கு வருவதற்கு அதிமுகவை பயன்படுத்த முடியுமா? என்று பார்க்கிறார்கள். அதிமுக – பாஜக கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியவில்லை. அதனால் ஆளுநரை வைத்துக்கொண்டு ஆழம் பார்க்கிற வேலைகளை செய்கிறார்கள். திமுக தான் இருக்க வேண்டும் என்பதற்கு அவர்களின் மக்கள் நலன் திட்டங்கள் காரணமாக உள்ளன. எடப்பாடி பழனிசாமி, கண்ணை மூடிக்கொண்டு பாஜக கொண்டுவந்த கருப்பு சட்டங்களை எல்லாம் ஆதரித்தார். அவரால் பாஜகவை எதிர்த்து பேச முடியாது.

பாஜகவை எதிர்த்துக்கொண்டே திமுக அவர்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக சீமான் கூறுகிறார். அப்படி என்றால் பாஜகவினர் சொன்ன நீட் தேர்வு, மும்மொழி கல்விக் கொள்கை போன்றவற்றை திமுக அரசு ஏற்றுக்கொண்டதா? சீமானுக்கு ஓடுவது பார்ப்பன ரத்தம் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்கள். சீமானும், விஜயும் பாஜகவுக்காக தான் வேலை செய்கிறார்கள் என்று பகிரங்கமாகவே சொல்ல வேண்டி உள்ளது. திருமாவளவன் குறித்து ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. திருமாவளவனிடம் வெறும் 20 பேர் தான் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா சொல்வது ஏற்புடையது அல்ல. விசிகவில் இருந்து விஜயிடம் வந்த ஒரே நபர் ஆதவ் அர்ஜுனா. அவர் பின்னால் எத்தனை பேர் கட்சியில் இருந்து வந்தனர். அவருக்கு அடையாளம் தந்தது விடுதலை சிறுத்தைகள். அதனை வைத்துக்கொண்டு தவெக பக்கம் தாவிவிட்டார். அங்கே போய் உட்கார்ந்துகொண்டு கம்யூனிஸ்ட்டுகள், விசிகவினர் நல்லவரக்ள் என்று சொல்கிறார். நல்லவர்களாக இருப்பதால் தான் திமுக கூட்டணியில் உள்ளனர். இல்லாவிட்டால் உங்கள் கூட வந்து இருப்பார்கள்.

அதிமுக ஊழல் கட்சி என்று கண்டுபிடிக்க விஜய்க்கு 2 ஆண்டுகள் ஆகிறது. ஊழல் புகாரில் சிக்கிய செங்கோட்டையனை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழலே செய்ய மாட்டேன் என்று விஜய் சொல்கிறார். ஜெயலலிதாவை ஏற்றுக்கொள்கிற விஜய், அதிமுகவை ஊழல் கட்சி என்றும் சொல்கிறார். அப்போது தவெக ஜெயலலிதாவின் ஊழலை மட்டும் ஏற்றுக்கொள்கிறதா? அரசியல் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது. உரிமைகளுக்காக போராடுவது ஆகும். அது எதுவும் இல்லாமல் தனி விமானத்தில் விஜய் வருவார். அவரை வாக்களித்து முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.


