14.2.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அன்னை சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில், டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் கிராமப்புறங்களில் வாழ்கிற ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 100 நாள் வேலை சட்டப்படி உறுதி செய்யப்பட்டது. இதனால் ஏழை,எளியவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இத்திட்டத்தின் மூலம் 15 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றது.

பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தது முதற்கொண்டு 100 நாள் வேலை திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்காமல் முடக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. இறுதியாக சமீபத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு பழைய சட்டத்தில் இருந்த மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி, தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் இறுதிக்கட்டமாக, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் வருகிற 14.2.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை அருகில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் செய்து வருகிறார்கள்.
கிராமப்புற மக்களின் உறுதி செய்யப்பட்ட வாழ்வாதாரத்தை சிதைக்கிற வகையில், பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை கண்டிக்கிற வகையிலும், மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை எதிர்த்தும் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி நண்பர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பிப்ரவரி 12: நாடு தழுவிய பாரத் பந்த் – 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு ! முடங்குகிறதா இந்தியா?


