spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயை நம்பி போனால் முடிஞ்சது! திமுக - காங். உறவு முறிவு? ஸ்டாலின் எடுத்த முக்கிய...

விஜயை நம்பி போனால் முடிஞ்சது! திமுக – காங். உறவு முறிவு? ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

-

- Advertisement -

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி உயரும் என்றும், இதன் காரணமாக பாஜக உள்ளே வருவது குறையும் என்றும் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக கூட்டணியில் நிலவும் மோதல் போக்கின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- அதிமுக கூட்டணியில் பிரதமர் மோடி, அமித்ஷா என்று தலைவர்கள் தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அதேவேளையில் திமுக தரப்பில் ராகுல்காந்தியை அழைத்து ஏன் பொதுக்கூட்டம் நடத்தவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேர்தல் வரவுள்ள நிலையில்ல ராகுல்காந்தி, அவற்றில் ஏதாவது ஒன்றில் கலந்துகொள்கிறேன் என்று கேட்டால் திமுகவுடன் சென்று பிரச்சாரம் செய்தது போல் ஆகிவிடும்.  ராகுல்காந்தி புறப்பட்டு நேரடியாக முதல்வர் வீட்டில் வந்து காபி சாப்பிட்டார் என்றால் பிரச்சினை முடிந்துவிடும்.

முதல்வர் போய் ராகுல்காந்தியை பார்ப்பது என்பது ஏற்புடையது அல்ல. ராகுல்காந்தி குழந்தை போல சாலையை கடந்துசென்று ஸ்வீட் வாங்கிச்சென்று தன்னுடைய அண்ணனுக்கு தருவதாக சொன்னபோது, அந்த பந்தம் தமிழக மக்களுக்கு பிடித்திருந்தது. ஆனால் இந்த மாதிரி அரசியல் செய்தால் வருகிற வாக்குகள் கூட கிடைக்காது. ராகுல்காந்தி மீது மக்களுக்கு கரிசனம் உள்ளது. அதற்காக கை சின்னத்திற்கு எல்லா இடங்களிலும் வாக்களிப்பார்கள் என்று உத்திரவாதம் கிடையாது.

நீங்கள் பிரதமராக நிற்கிறபோது வாக்களிப்பது வேறு. தற்போது நடைபெறுவது முதலமைச்சருக்கான தேர்தல். பிரதமருக்கான தேர்தல் அல்ல. அப்படி இருக்கும்போது காங்கிரஸ் தங்களுடைய பேரத்தை இந்த அளவுக்கு உயர்த்துவது ஏற்புடையது அல்ல. திமுக உங்களுக்கு ஆட்சியில் பங்கு தருவதாக சொன்னால் நீங்கள் தவெகவை விட பெரிய ஆளாக வளர்ந்து விடுவீர்களா? எல்லோருக்கும் திமுகவுக்கு அடுத்து தாங்கள் தான் இருக்க வேண்டும் என்கிற போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் தரப்பில் 40-50 இடங்கள் வாங்குகிறார்கள் என்கிறபோது, எதிர்க்கட்சியாக வருகிற அளவிற்கு அவர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா? ஒருவேளை அப்படி 50 இடங்கள் வந்தால், அவர்களில் பலர் போய் அதிமுகவில் இணைந்து விட்டால் என்ன செய்வார்கள்? கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை திமுக இழுத்தது கிடையாது. ஒருவேளை அப்படி செய்தால் என்ன செய்வார்கள்? கடந்த காலங்களில் காங்கிரசில் இருந்து ஏராளமானோர் பாஜகவுக்கு சென்றுள்ளனர். ரிசார்ட் பாலிடிக்ஸ்க்கு தீனி போடுவது காங்கிரஸ். அந்த ரிசார்ட் பாலிடிக்ஸை நடத்துவது பாஜக.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு; முதலமைச்சர் தேர்வில் பெரும் குழப்பம்

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசுகிறபோது, திமுக உறுப்பினர்கள் அவருக்கு உறுதுணையாக குரல் கொடுப்பார்கள். ஆனால் சில நாட்களாக அப்படி செய்யவில்லை. அதற்கு சில நாட்களுக்கு முன்பு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இரண்டாவது கையொப்பம் டி.ஆர்.பாலு போட்டார். திமுக உடனான மோதல் போக்கு காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய விலையை காங்கிரஸ் கொடுக்கப் போகிறார்கள். ராகுல்காந்தியை பொருத்தவரை சிறந்த மனிதாபிமானி. ஆனால் அரசியல்வாதியாக பார்க்கிறபோது, அவருக்கு தொலைநோக்கு பார்வையே கிடையாது. ஒவ்வொரு தேர்தல்களிலும் தோற்றுவிட்ட பிறகும் பண்ணையார் தனத்துடன் இருப்பேன் என்றால் அது என்ன தன்மை?

ஐதராபாத் நகராட்சி தேர்தல் என்றால் கூட பிரதமரும், அமித்ஷாவும் பிரச்சாரத்திற்கு வருகிறார்கள். காரணம் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றாலும், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் தமிழ்நாட்டிற்கே வர வேண்டும். ஆனால் வரவே மறுக்கிறார்கள். காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கூட்டணி தொடர்பாக விளக்கம் அளித்தாலே பாதி பிரச்சினை முடிந்துவிடும். குழப்பம் விளைவிக்கும் நபர்களை கண்டிக்க முடியாத போதே  மாநிலத் தலைவராக செயல்படுவதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக என இரு கட்சிகளும் பலமாக உள்ளது. அதிமுக பலவீனமாக இல்லாவிட்டால் திமுகவும் செக்கில் இருக்கும். திமுகவால் அதிமுகவும் செக்கில் இருக்கும். இவர்கள் இருவரும் உறுதியாக இருக்கும்போது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் பாஜக வராது என்று உறுதியாக சொல்லலாம். இவர்கள் இருவரும் வலிமையாக இருக்கும்போது இடையில் விஜயோ, அண்ணாமலையோ உள்ளே நுழைய முடியாது. தற்போது கிராமங்களில் அதிமுகவுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. பத்திரிகையாளர் சந்திப்புகளில் இபிஎஸ், உள்ளூர் பிரச்சினைகளை எந்த குறிப்புகளும் இல்லாமல் பேசுவதாக சொல்கிறார்கள்.

நாம் நினைப்பது போல அவர் 8 தோல்வி எடப்பாடி இல்லை. அதை தாண்டி பக்குவப்பட்டிருக்கிறார். பயிற்சி எடுத்திருக்கிறார். எடப்பாடி 33 வயதில் எம்எல்ஏ ஆனவர். அமைச்சராக இருந்த ஒரு திடீரென முதலமைச்சர் ஆனால் எப்படி ஏற்றுக்கொள்வது என்கிறோம். புதிதாக ஒரு நபர் பிரம்மாண்டமாக வந்தால் நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனால் கீழ்நிலையில் இருந்து வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எடப்பாடி பழனிசாமியை குறைத்து மதிப்பிடுகிறார்கள். அது உண்மையில்லை.

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் உயரும். அதனால் பாஜக உள்ளே வருவது குறையும். திமுக பாதுகாக்கப்படும். இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் பாதுகாக்கப்பட்டால் தமிழ்நாடு கண்டிப்பாக நன்றாக இருக்கும். திமுகவுக்கு மைக்ரோ லெவலில் ஆன்டி இன்கம்பன்சி அதிகமாக உள்ளது. வடசென்னையில் கருத்துக்கணிப்பு நடத்துகிற தவெக நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியது ஏன்? அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் பொதுமக்களிடம் பிரச்சினை செய்தார்கள் என்று சொல்ல வேண்டாம்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம், ஆக்கிரமிப்புகள் என்று எல்லா தவறான பிரச்சினைகளிலும் திமுகவினர் பெயர் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. இவை எல்லாம் அதிமுகவுக்கு சாதகமாக அமையும். இரண்டாவது இடம் என்பதை அதிமுக உறுதி செய்யும்.  அவர்கள் கைகளில் இருக்கும் வாக்குகளை இழக்க மாட்டார்கள். கட்சி, போக்கு எல்லாம் அப்படிதான் இருக்கிறது. அதிமுக தொடர்ந்து இரண்டுமுறை எதிர்க்கட்சியாக இருந்ததில்லை. மக்கள் எந்தவித பிரம்மாண்டமும் இல்லாமல் அமைதியாக இருப்பவர்களை தான் விரும்புவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ