2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்து இன்னும் உறுதியான முடிவு எட்டப்படாததால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. கடந்த காலங்களில் வலுவாக செயல்பட்ட இந்த கூட்டணி, இம்முறை தொகுதி பங்கீடு மற்றும் அரசியல் அணுகுமுறையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினா் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட சில கருத்துகள் திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிா்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் மௌனத்தினால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்கிற பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. முன்னதாக, கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உடன் பிரேமலதா கலந்து கொண்டதைத் தொடர்ந்து, அதிமுக அணியில் தேமுதிக சேரும் என்ற செய்தி பரவியது. ஆனால் இறுதியில் திமுக கூட்டணியைத் தேர்வு செய்ததால், பாஜக–அதிமுக அணிக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

2005 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக, 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்தது. பின்னர் 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் அந்தஸ்தைப் பெற்றது. எனினும், அப்போது ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அந்த கூட்டணி நீடிக்கவில்லை. 2016 தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகளும் நடந்தன. அப்போது நடைபெறவில்லை. முதல் முறையாக திமுகவுடன் தேமுதிக கூட்டணியில் இணைந்துள்ளது.

தற்போது தேமுதிக இணைந்துள்ளதால் திமுக கூட்டணியின் வாக்கு வங்கி மேலும் வலுப்பெறும் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஏற்கனவே கணிசமான ஆதரவை பெற்றுள்ளதாக கூறப்படும் திமுக அணிக்கு, இந்த இணைவு பல தொகுதிகளில் முன்னிலை வழங்கக்கூடும் என கருதப்படுகிறது.
இதனிடையே, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ. பன்னீர்செல்வம், பாஜக ஆதரவுடன் அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்த முயற்சி செய்தாா். “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு” என்ற பெயரில் தனித்துவமாக செயல்பட்டு வந்தாா். காலப்போக்கில் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டார். ஆரம்பத்தில் சில முக்கிய தலைவர்கள் ஆதரவாக இருந்தாலும், தேர்தல் சூழல் நெருங்கியபோது அவரோடு இருந்த பலர் தங்களது அரசியல் பாதையை மாற்றிக் கொண்டனர்.அவருடன் இருந்த கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அதே போன்று முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தாா். இதனால் ஓபிஎஸ் அரசியல் நிலைமை மேலும் சிக்கலாக மாறியது.
இந்நிலையில், சமீபத்தில் முதல்வரை சந்தித்ததால், ஓ. பன்னீர்செல்வம் திமுக அணியுடன் இணைவாரா என்ற அரசியல் யூகங்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மற்றொரு புறம், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வடமாவட்டங்களை மையமாகக் கொண்டு தீவிரப்படுத்தியுள்ளது. ஆவடி, அம்பத்தூரில் தொடங்கிய இந்தப் பிரச்சாரம், ஆளும் கட்சியை விமர்சிப்பதோடு அதிமுக ஆட்சிக் காலச் சாதனைகளை முன்னிறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதேவேளையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நடத்தவுள்ள பொதுக்கூட்டம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினாா். கடந்த 2016-ல் ஒரு சதவீத வாக்குகளுடன் தொடங்கிய சீமானின் அரசியல் பயணம், 2024 எம்பி தேர்தலில் 8.2 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த சீரான வளர்ச்சி என்பது சீமானின் தனித்துவமான “தனித்துப் போட்டி” என்ற கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் தவெக தலைவா் விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அவரது ரசிகர் மன்ற ஆதரவை அரசியல் கட்டமைப்பாக மாற்ற முயற்சி செய்து வருகிறாா். சீமானுக்கும், விஜய்க்கும் இடையே வாக்கு பங்கீடு ஏற்பட்டால், அது பாரம்பரியமான திமுக, அதிமுக கட்சிகளுக்கு எந்த அளவிற்கு பாதிப்பை உருவாக்குமென்று அரசியல் பாா்வையாளா்களால் கணிக்க முடியவில்லை. மக்கள் மனநிலையை யார் துல்லியமாகப் புரிந்து அதற்கேற்ற திட்டங்களை முன்வைக்கிறார்களோ அவர்களுக்கே தேர்தலில் முன்னிலை கிடைக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் மதிப்பீடாகும்.
மொத்தத்தில், 2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் கூட்டணி மாற்றம், கட்சியை விட்டு கட்சி மாறுவது என்று பெரும் பரபரப்போடு இருந்து வருகிறது.
திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!


