சூர்ய பிரகாஷின் ஆணவக் கொலை வழக்கில் சந்தியாவின் சகோதரர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ராயவரம் மண்டல துணை தாசில்தார் சந்தியாவும், அதே பகுதியை சோ்ந்த வேம்பள்ளி நகரில் ஜவுளிக் கடை நடத்தி வருபவர் சூரிய பிரகாஷ் ராவ்வும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனா். இவா்கள் இருவருமே ஒன்றாக படித்தவர்கள்.

இந்நிலையில், இவா்களது காதல் விவகாரம் சந்தியாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக் கிழமை அன்னவரத்தில் உள்ள ஒரு கோயிலில் சூரிய பிரகாஷ் – சந்தியா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் வேம்பள்ளி நகரில் உள்ள சூரிய பிரகாஷின் வீட்டிற்கு சென்றனர். தங்களுடைய சகோதரி வேறு சாதி இளைஞரை திருமணம் செய்துகொண்டதை தாங்கிக் கொள்ள முடியாத சந்தியாவின் சகோதரர்கள் சந்திரப்பா மற்றும் கிரிபாபு ஆகியோா் அன்று இரவே சூர்ய பிரகாஷின் வீட்டிற்கு சென்று, வீட்டிற்குள் இருந்த சூர்ய பிரகாஷை வெளியில் இழுத்துவந்து கற்கள் மற்றும் கட்டைகளால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
பின்னர் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனா். ஆனால், அங்கிருந்த ஊர் மக்கள் இருவரையும் பிடித்து, அவர்களை போலீசை வரவழைத்து ஒப்படைத்தனர். இந்த கொலை விவகாரத்தில் தொடர்புடைய அவர்களின் நண்பர் தப்பி ஓடிவிட்டார். சூரிய பிரகாஷ்ராவ் உடலை மீட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலையில் திருமணம், மாலையில் கொலை என அடுத்தடுத்த சம்பவங்கள் அந்த பகுதியில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன. திருமணத்தில் கட்டிய மஞ்சளின் ஈரம் காய்வதற்குள், ஒரு பயங்கர சம்பவத்தை பெண்ணின் சகோதரர்கள் செய்துள்ளனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் துணை தாசில்தாருக்கே இந்த நிலை ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பமாக இரண்டு மனைவிகளுடன் நூதன திருட்டு!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!


