வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு, அக்கறையற்ற திமுக அரசு வேடிக்கை பார்ப்பதா? என அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் சிறப்புப் பணிப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 முதன்மைக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை பணியாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம் பத்தாம் நாளாக இன்றும் தொடரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேச திமுக அரசு இன்றுவரை முன்வரவில்லை. இந்தப் போராட்டத்தால் தேவையான சான்றுகள் கிடைக்காமல் மாணவர்களும், உழவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய்த்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
வருவாய்த்துறையினரின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இதுவரை வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பித் தர வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் காலமுறை ஊதியம், குத்தகை முறை நியமனங்கள் கூடாது என்பன உள்ளிட்ட வருவாய்த்துறை பணியாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை. அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாகத் திகழ்பவர்களும், பொதுமக்களுக்கு நேரடியாக சேவை வழங்குபவர்களும் வருவாய்த்துறையினர் தான். அவர்கள் வேலைநிறுத்தம் செய்தால் அரசு எந்திரம் முடங்குவதுடன், பொதுமக்களுக்கு எந்த சேவையும் கிடைக்காது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

வருவாய்த்துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள 42,000 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவர்களை அழைத்து அரசு பேச்சு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை திமுக அரசு செய்யவில்லை. வருவாய்த்துறையினரின் போராட்டத்தால் மாணவர்களுக்கும், உழவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கடந்த 28 ஆம் தேதி விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தேன். அப்போதும் திமுக அரசு விழித்துக் கொள்ளவில்லை. அதனால், போராட்டத்தைத் தீவிரப்படுத்திய வருவாய்த்துறை பணியாளர்கள் நேற்று முதல் சாலைமறியல் போராட்டத்தையும் நடத்தத் தொடங்கியுள்ளனர். அப்போதும் அவர்களை அழைத்துப் பேசாத திமுக அரசு, அவர்களை கைது செய்வது உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
வருவாய்த்துறையினரின் போராட்டத்திற்கு திமுக அரசு தீர்வு காணாததால் மாணவர்களுக்கும், உழவர் பெருமக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 8 ஆம் தேதி கடைசி நாளாகும். அத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கும், பிற மாணவர்களுக்கும் தேவையான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை வருவாய்த்துறையினர் தான் வழங்க வேண்டும். இதற்காக பல நாள்களுக்கு முன்பே அவர்கள் விண்ணப்பித்துள்ள போதிலும், வருவாய்த்துறை பணியாளர்களின் போராட்டம் காரணமாக அந்தச் சான்றிதழ்கள் அவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.
அதேபோல், உழவர்கள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் போது, தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தான் அந்த நெல் விளைவிக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான அடங்கல் ஆவணத்தை கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்றுத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகளின் போராட்டத்தால் இந்த சான்றிதழ்களை உழவர்கள் தாக்கல் செய்ய முடியாததால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 10 ஆயிரம் மூட்டைகள் வீதம் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. ஆனால், இவை குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் வருவாய்த்துறை பணியாளர்களின் போராட்டத்தை திமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
வருவாய்த்துறை பணியாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதை திமுக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இக்கோரிக்கைகள் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வருவாய்த்துறை பணியாளர்களுடன் அத்துறையின் அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் மற்றும் துறையின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். அப்போது இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட ஆட்சியாளர்கள், இப்போது அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது அநீதியானது.
திமுக ஆட்சியால் நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட அனைத்து அரசுத்துறை ஊழியர்களும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், யாருடைய கோரிக்கைகளையும் நிறைவேற்றாத திமுக அரசு ‘எல்லோருக்கும் எல்லாம்’என்ற வெற்று முழக்கத்தை மட்டும் எழுப்பி வருகிறது. திமுக அரசு மக்களுக்கு மட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கும் எதையும் செய்யவில்லை என்பதையே இது காட்டுகிறது.
வருவாய்த்துறை பணியாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்பது ஒருபுறமிருக்க, மாணவர்கள், உழவர்கள் ஆகியோரின் நலன்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, வருவாய்த்துறையினரை அரசு அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.
தமிழ், தமிழ் என கூறி ஒன்றிய அரசு செய்யும் ஏமாற்று வேலையை முறியடிப்போம் – துணை முதல்வர் காட்டம்


